எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு…!
எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். அந்தவகையில் எதிர்வரும் 18 ஆம் திகதி மு.ப. 09.30 – மு.ப. 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் எழுப்பப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து மு.ப. 10.30 – பி.ப. 5.00 வரை சுற்றுலாப் பயணத்துறைச் சட்டத்தின் கீழ் ஐந்து கட்டளைகள், உரித்துப் பதிவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், முடிக்குரிய காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ளது. பி.ப. 5.00 – பி.ப. 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான அரசாங்கத்தின் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இரண்டாம் நாள் அமர்வாக 19 ஆம் திகதி, மு.ப. 09.30 – மு.ப. 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் எழுப்பப்படவுள்ளது. மு.ப. 09.30 – மு.ப. 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் எழுப்பப்படவுள்ளது. அதனை தொடர்ந்து 5 மணிவரை சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், தெங்கு அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் தீர்மானம், கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பில் விவாதங்கள் இடம்பெறவுள்ளது. முன்றாம் நாளான 20 ஆம் திகதி, மு.ப. 09.30 – மு.ப. 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் எழுப்பப்படவுள்ளது. அதனை தொடர்ந்து மு.ப. 10.30 – பி.ப. 5.00 வரை பெண்களின் வலுவூட்டல் சட்டமூலம் – விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம்இ யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழு சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ளது. பி.ப. 5.00 – பி.ப. 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான எதிர்க்கட்சியின் பிரேரணையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வடக்கில் மேற்கொள்ளப்படும் காடழிப்பை தடுக்க விசேட வேலைத்திட்டம்
இலங்கையில் இடம்பெறும் காடழிப்பினை கண்காணிப்பதற்கு இன்று முதல் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தவுள்ளதாக வனப்பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த செயற்பாடு வடக்கில் இரண்டு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – மன்னார் மாவட்டங்களில் இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் வனவளத்திணைக்களத்தின் விசேட பயிற்சி பெற்ற அதிகாரிகள் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து அதிகளவிலான சட்டவிரோதமான தேக்கமரங்கள், முதிரைமரங்கள்,பாலைமரங்கள் அறுக்கப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் இயற்கை வளமான காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படகிறது. முறிப்பு, தண்ணிமுறிப்பு, கோடாலிக்கல்லு, கரிப்பட்டமுறிப்பு, உடையார்கட்டு, விசுவமடு,மன்னாகண்டல் ,முத்தையன்கட்டு, நெட்டாங்கண்டல், துணுக்காய்,ஜயன்கன்குளம், கொக்காவில்,பனிக்கன்குளம், அம்பகாமம், கரிப்பட்டமுறிப்பு, மணவாளன்பட்டமுறிப்பு, மாங்குளம்,ஒட்டுசுட்டான் போன்ற பிரதேசங்களில் உள்ள இயற்கை வளமான காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் பல நூற்றுக்காணக்கான சம்பவங்கள் இடம்பெற்றாலும் சில சம்பவங்களையே பொலிஸார் கண்டுள்ளார்கள். பல இடங்களில் பெருமளவான அறுக்கப்பட்ட மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் வாகனங்களில் கடத்தப்பட்டமை தொடர்பிலும் பல வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் காணப்படுகின்றன. இவ்வாறன நிலையில் பெருமளவான இயற்கை வளத்தினை அழிப்பவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கோ கட்டுப்படுத்தவோ பொலிஸ் நிலையங்களில் ஆளணி பற்றாக்குறை காணப்படுவதுடன் வனவளத் திணைக்களத்திடமும் ஆழணி பற்றாக்குறை காணப்படுவதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இவற்றை சாதகமாக பயன்படுத்தி சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்ச்சியாக காடுகளை அழித்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.
இலங்கை மக்களின் வருமானத்தில் ஏற்படவுள்ள சாதகமான மாற்றம்
சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணை கடனை பெற்றுக்கொள்வதன் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க மற்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளனர். மூன்றாம் தவணை மூலம் வருமானத்தை பெருக்க பல வாய்ப்புகள் உருவாகும் எனவும் பொருளாதார நன்மைகளை மக்கள் நேரடியாகப் பெறுவார்கள் எனவும் தெரிவித்தனர். மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்காத நாடாக மாற்றுவதன் மூலம் பொருளாதாரத்தை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்ல முடியும். இளைஞர்கள் அதிக வருமானம் பெறும் நாடாக மாற்றுவதுடன், அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும் என ராஜாங்க அமைச்சர்கள் மேலும் தெரிவித்தனர். நாட்டிற்கு புதிய முதலீடுகள் கொண்டு வரப்படும், வேலையில்லா திண்டாட்டம் நீங்கும் பொருளாதாரத்தின் வளர்ச்சியை சட்டப்பூர்வமாக்கும் மற்றும் மக்களுக்கு நன்மை பயக்கும் என குறிப்பிட்டுள்ளனர். மூன்றாவது தவணை கடனைப் பெறுவது ஒரு நாடு என்ற வகையில் ஒரு பெரிய சாதனையாகும், இதன் மூலம் இழந்த சர்வதேச நிதி நம்பிக்கையை மீண்டும் பெற முடிந்தது. மூன்றாவது சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணையைப் பெற்றுக்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் நிதிக் கட்டுப்பாட்டுக்கான சட்ட அமைப்பு வலுப்பெறும் என சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பிட்ட முறையின் கீழ் நாட்டின் வாகன இறக்குமதி மீள ஆரம்பிக்கப்படும். வட்டி வீதக் குறைப்பின் அனுகூலத்தை வர்த்தகர்களுக்கு வழங்க மத்திய வங்கி தயாராக உள்ளதென ராஜாங்க அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காத்தான்குடியில் இளந்தாய் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு: சந்தேகநபர் கைது
வீடொன்றில் மகனுடன் வசித்து வந்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு சந்தேகநபர் தப்பி சென்றிருந்த நிலையில் காத்தான்குடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கி சூடு மட்டக்களப்பு (Batticaloa) – காத்தான்குடி காவல்துறை பிரிவிலுள்ள புதிய காத்தானகுடி மீன்பிடி இலாஹா வீதி அஹமட் வீதியில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றது. இதன் போது, வீட்டில் வசித்த இளந்தாய் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் சித்தீக் சிபானியா (வயது32) என்பவரே காயமடைந்துள்ளதுடன் பெண்ணின் கணவர் அவுஸ்திரேலியா (Australia) நாட்டில் தற்போது இருப்பதாகவும் இவர் ஒரு மௌலவி எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், காத்தான்குடி காவல்துறையினர் சம்பவ இடத்தில் உள்ள சி.சி.ரி.வி கமராக்களையும் சோதனை செய்து சந்தேக நபர் அடையாளம் கண்டு சந்தேக நபரை மாலை ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்துள்ளனர். அத்துடன், காயமடைந்த பெண்ணின் வீட்டில் தடவியல் காவல்துறையினர் பிரிவினர் மேற்கொண்ட சோதனைகளில் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பெண் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வாடிக்கையாளர்களுக்கு இலங்கை வங்கி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
இணைய பரிவர்த்தனைகளை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை வங்கி (Bank of Sri Lanka) தனது வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், online பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது பூட்டு சின்னம் Hypertext Transfer Protocol (HTTP) உள்ள இணையதளங்களை மட்டும் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பூட்டு சின்னம் அல்லது https என்ற இணைய பயன்பாட்டு நெறிமுறை இல்லாமல் இணையதளங்களைப் பயன்படுத்தும் போது சைபர் ஊடுருவல் மூலம் உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைத் திருடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இணையம் மூலமான வங்கி கொடுக்கல் வாங்கள் பரிவர்த்தனைகளுக்கு பூட்டு சின்னம் இல்லாத இணையதளங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் எவ்வாறு தொடர வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை வங்கி விளக்கமளித்துள்ளது. மேலும், நிதி மோசடிக்கு சிக்காமல் கொடுக்கல் வாங்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை வங்கி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கோவிட் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
நாட்டில் கோவிட் பெருந்தொற்று நோயாளிகளை அடையாளம் காண்பதற்கு கடந்த காலங்களைப் போன்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நிமோனியா காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் மட்டும் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும் நாட்டில் தொடர்ந்தும் கோவிட் தொற்றாளர்கள் பதிவாகி வருவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். முகக் கவசம் அணிதல், ஒரு மீற்றர் தூரத்தை பேணுதல் மற்றும் கைகளை சவர்க்காரம் இட்டு கழுவுதல் உள்ளிட்ட கோவிட் பாதுகாப்பு சுகாதார வழிகாட்டல்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சமூகத்தில் கோவிட் தொற்றாளிகள் காணப்படுவதனால் தாங்களே சுய பாதுகாப்பு சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார். கோவிட் தொற்று தற்பொழுது உலகில் சாதாரண ஓர் நோயாக மாற்றமடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காய்ச்சல், சளி போன்ற சாதாரண நோயாக மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கோவிட் பெருந்தொற்று நிலவிய காலப் பகுதியைப் போன்று தற்பொழுது கிராமிய மட்டத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என டொக்டர் அசேல தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5.3% ஆக பதிவாகியுள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நிலையான விலையில் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 3,161,963 மில்லியன் ரூபாவாக பதிவான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 3,329,583 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், விவசாயம், தொழில்துறை மற்றும் சேவைப் பொருளாதார நடவடிக்கைகள் முறையே 1.1%, 11.8% மற்றும் 2.6% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
இலங்கையின் சில பகுதிகளில் இன்று பலத்த காற்றுடன் கூடிய மழை!
இலங்கையின் சில பகுதிகளில் இன்றும் (15) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மலைப்பிராந்தியத்தின் மேற்குச் சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.