Search
Close this search box.

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவித்தல்

2023 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி அண்மையில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகிய மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations) முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் கோரப்பட்டுள்ளன. இன்று (05.06.2024) முதல் எதிர்வரும் 19.06.2024 வரை பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாசாலைப் பரீட்சார்த்திகள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கு விண்ணப்பிக்க முடியும். பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் (www.doenets.lk) பிரவேசித்து விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள புதிய சலுகை

4000 விவசாயிகளுக்கு 40 இலட்சம் ரூபா பெறுமதியான பாராசூட் நாற்றங்கால் தட்டுக்களை 25% மானியத்தின் கீழ் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினால் இந்த மானியம் வழங்கப்படவுள்ளது. குறித்த தீர்மானமானது, விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவின் ஆலோசனைக்கமைவாக எடுக்கப்பட்டுள்ளது. புதிய விவசாய தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தும் திட்டத்தின் கீழ், நாற்றுகளை நடுவதற்கு இந்த பாராசூட் நாற்றங்கால் தட்டுக்கள் பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அறிமுகப்படுத்தப்படவுள்ள பாராசூட் நாற்றங்கால் தட்டுக்களின் அதிக நெல் விளைச்சல்களை பெற முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன அரசுக்கு சொந்தமான வாகனங்கள் : ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை

காணாமல் போன அரசுக்கு சொந்தமான வாகனங்களை அடையாளம் காண்பதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிசாந்த வீரசிங்க (Nishantha Weerasinghe) குறிப்பிட்டுள்ளார். கடந்த சில வருடங்களில் சில பொது நிறுவனங்களில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 5,000 இற்கும் மேற்பட்ட அரசுக்கு சொந்தமான வாகனங்களை கண்டுபிடிப்பதன் அவசியத்தை தேசிய கணக்காய்வு அலுவலகம் அண்மையில் வலியுறுத்தியுள்ளது. தொலைந்து போன வாகனங்களின் இருப்பிடங்கள் மற்றும் அவற்றின் தவறான இடம் தொடர்பான ஏதேனும் முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கணக்காய்வு அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், காணாமல் போன வாகனங்களை அடையாளம் காண திணைக்களம் விரிவான விசாரணையை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக வீரசிங்க தெரிவித்துள்ளார். அதிபர் செயலகத்திற்கு சொந்தமான பல வாகனங்களும் காணாமல் போன வாகனங்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் மற்றும் இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு விரைவில் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கணக்காய்வாளர் நாயகத்தின் ஆய்வு அறிக்கையின் படி சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 கார்கள் மற்றும் 1,115 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 1,794 வாகனங்கள் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்குள் நுழையும் இந்திய புலனாய்வு அமைப்பு: வெளியானது நோக்கம்

இலங்கையால் இந்தியாவிற்கு ஆபத்து இருப்பதால் இலங்கையை இந்தியா தனது கண்காணிப்பின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்ற மறைமுகமான ஒரு அழுத்தம் பிரயோகிக்கப்படப் போகின்றது என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இருந்து தீவிரவாதத்தினை உருவாக்கி இந்தியாவிற்கு அனுப்புவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இந்தியாவின் பாதுகாப்பிற்காக இந்திய புலனாய்வு துறையினர் இலங்கைக்கு வந்து செல்லும் வாய்ப்புள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அடுத்து வரப்போகின்ற அரசு எப்படி இருக்கப்போகின்றது என்ற குழப்பத்தில் இருக்கும் இந்தியா, ஆட்சிக்கு வரவுள்ள கட்சி மேற்குலகம் சார்பாக இருந்தால் தங்களுக்குரிய ஒரு பிடியை வைத்திருப்பதற்குரிய நடவடிக்கையாக தான் இதனைப் பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு தற்போது சுமுகமாக இல்லாத நிலையில், இந்தியாவிற்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும்  இலங்கையை தனது கண்காணிப்பில் வைத்திருக்க முற்படுவதாகவும் கூறப்படுகின்றது. இந்தியாவின் சூழ்ச்சியினை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) ஜெனரல் கமல் குணரட்ன அறிக்கையொன்றினை வெளியிட்டு தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடரும் சீரற்ற காலநிலை : ரணிலின் அதிரடி உத்தரவு

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த வீதிகளை உடனடியாக புனரமைப்பதற்கு சுமார் மூன்று பில்லியன் ரூபா ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கையானது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்  உத்தரவுக்கு அமைய எடுக்கப்பட்டுள்ளதாக கிராமிய வீதி அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்  கருத்து தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் 12 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த ஏற்பாடுகளுடன் கிராமப்புற வீதிகள் மற்றும் பாலங்கள் அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் சுமார் 65 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாக்குதலுக்கு உள்ளான நாடாளுமன்ற உறுப்பினருக்கு சத்திரசிகிச்சை..!

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தனது தந்தையை தாக்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்சவின் (Gunathilaka Rajapaksha ) மகன் கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்சவின் எழுத்துப் பூர்வ முறைப்பாடும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது தந்தையை தாக்கியதில் அவரது கால் எலும்பு முறிந்துள்ளதாகவும் அதற்கு அறுவை சிகிச்சையில் இரும்புத் தகடுகள் பொருத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தனது தந்தை தற்போது கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் மேலதிக மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தநிஹால் தள்துவ குறிப்பிடுகின்றார். மேலும், முறைப்பாட்டாளரான குணதிலக்க ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக காவல்துறையினர் சென்ற போதிலும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதால் வாக்குமூலம் பெற முடியாமல் போனதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் 05 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 24 வயது யுவதி கைது

வவுனியாவில் 05 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 24 வயது யுவதி ஒருவர் நேற்று (04.06) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி றிஸ்வி தலைமையிலான பொலிசார் வவுனியா, தோணிக்கல் பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது விற்பனைக்காக தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த 05 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டனர். இதன்போது குறித்த ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட யுவதியை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

சாஹிரா கல்லூரி மாணவர்களின் பெறுபேறுகளில் விளையாடாதீர்கள்; அநீதி நீடித்தால் போராட்டம் வெடிக்கும்! எம்.எம்.மஹ்தி எச்சரிக்கை

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 மாணவிகளின் உயர்தரப்  பரீட்சை பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாமல் இருப்பதானது மாபெரும் அநீதியாகும் என முன்னாள் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம் .எம். மஹ்தி தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (05) அவரால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். முஸ்லீம்களான அம் மாணவிகள் தங்களுடைய கலாச்சார ஆடையான பர்தாவை அணிந்து பரீட்சை மண்டபத்திற்கு  சென்றதற்காக மேற்பார்வையாளர்களால் பல அசௌகரியங்களுக்கு உட்படுத்தப்பட்டது மாத்திரமன்றி தற்போது பெறுபேறுகளும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் அம் மாணவிகள் பாரிய மன உளைச்சல்களுக்கு உட்பட்டது மாத்திரமன்றி அவர்களுக்கான ஆடை சுதந்திரமும் மறுக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்திகள் ஏதேனும் முரண்பாடாக நடந்து கொண்டால் மேற்பார்வையாளர்கள் உடனடியாக அதற்கான நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். அல்லது மாணவர்களை வெளியேற்றி இருக்க வேண்டும். மாறாக பரீடசையை எழுதுவதற்கு அனுமதித்து விட்டு இவ்வாறு பழிவாங்கியிருப்பதானது ஒரு வகை இனரீதியான  வெறுப்புணர்வின் வெளிப்பாடாகும். இந்த சம்பவம் குறித்து பல அரசியல் தலைமைத்துவங்கள் அமைச்சரிடமும் பரீட்சை ஆணையாளரிடமும் முறையிட்டதன் பிரகாரம் எதிர்வரும் 7ம் திகதி அளவில் பெறுபேறுகள் கிடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தவறும் பட்சத்தில் அம் மாணவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுப்பதற்காக மாணவர்களையும் பொது மக்களையும் இணைத்து பல போராட்டங்களை நடத்துவதோடு நீதிமன்றில் வழக்கும் தொடரப்படும் எனவும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ள அபாய நிலை குறித்து வெளியான புதிய அறிவிப்பு

களனி கங்கை, களுகங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய பகுதிகளில் ஏற்கனவே இருந்த அபாய நிலை படிப்படியாக மறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் சகுரா தில்தாரா தெரிவித்தார். இதன் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்பஹா, ஜாஎல, வத்தளை, மினுவாங்கொட, கட்டான ஆகிய பகுதிகளில் இன்று படிப்படியாக நீர்மட்டம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, களனி கங்கைப் படுகையின் தாழ்வான பகுதிகளான கடுவெல, பயகம, கொலன்னாவ, வத்தளை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். மண்சரிவு அபாயம் தொடர்வதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

ஆலய கிணற்றில் மீட்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிழந்தவர், புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துயா என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.