Search
Close this search box.

முல்லைத்தீவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இராமேஸ்வரத்தில் தஞ்சம்

முல்லைத்தீவை (Mulliativu) பிறப்பிடமாகக் கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இராமேஸ்வரம் (Rameshwaram) அடுத்த சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள ஈழத்தமிழர்கள் வாழ வழியின்றி அகதிகளாக தமிழகத்தை தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு சிறுவர், ஒரு சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரே இவ்வாறு தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார், அகதிகளாக வந்தவர்களை மீட்டு விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

கனடா செல்லச் சென்ற யாழ்ப்பாண இளைஞன் கட்டுநாயக்காவில் கைது

வேறு ஒருவருக்குச் சொந்தமான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, செல்லுபடியாகும் விசாவின் மூலம் கனடாவுக்கு (canada) செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இளைஞனை குடிவரவு அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது. அவர் யாழ்ப்பாணம் (jaffna) பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகிறது. விமான அனுமதியை முடித்துவிட்டு குடிவரவு நிலையத்திற்கு வந்து அங்கு பணிபுரியும் குடிவரவு அதிகாரியிடம் கடவுச்சீட்டை வழங்கினார். கடவுச்சீட்டில் உள்ள புகைப்படத்திற்கும் அவரது புகைப்படத்திற்கும் வித்தியாசம் காணப்பட்டதால், இந்தக் கடவுச்சீட்டைப் பற்றிய மேலதிக தகவல்களைக் கண்டறியும் வகையில், குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உள்ளிடப்பட்டுள்ளன. இந்த கடவுச்சீட்டை வைத்திருப்பவர் நாட்டை விட்டு வெளியேற திருகோணமலை (trincomale) நீதிமன்றம் தடை விதித்துள்ளமை தெரியவந்துள்ளது. இதன்படி, இந்த இளைஞனை குடிவரவு திணைக்களத்தின் எல்லை அமுலாக்கல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு, இந்த இளைஞனின் சூட்கேஸில் அவரது உண்மையான தேசிய அடையாள அட்டை கண்டுபிடிக்கப்பட்டது, அதன் பிறகு அவர் குடிவரவு அதிகாரிகளிடம் அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தினார். கனடா சென்ற பின்னர் அனுராதபுர நகரத்தில் உள்ள தரகர் ஒருவர் தனக்கு ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாவை தரவேண்டுமென உறுதியளித்து கனடாவில் செல்லுபடியாகும் விசா உள்ள இந்த கடவுச்சீட்டை கொடுத்ததாக இந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்..! பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் ஞாயிறுக்கிழமை முதல் வியாழன் வரை வடக்குக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் முகமாக இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரபஞ்சம் திறன் வகுப்பறைகள், கட்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடம்பெறும் நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது. அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சஜித்தின் இந்த விஜயம் முக்கிய விஜயமாக அமையும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு வர்த்தகர்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரிப்பணத்தை செலுத்தாமல் செல்ல முற்பட்ட இரு வர்த்தகர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மடிக்கணினிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மதுபானங்களுக்கான வரியை செலுத்தாமல் செல்ல முயற்சி செய்த இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் ஒருவர் ஜா-எல உடம்மித்த பகுதியைச் சேர்ந்த 42 வயதான வர்த்தகரும் மற்றையவர் நீர்கொழும்பைச் சேர்ந்த 41 வயதான வர்த்தகரும் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த இருவரும் டுபாயிலிருந்து 15 மில்லியன் பெறுமதியான பொருட்களை கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் 20 மடிக்கணினிகள், 15 புதிய மடிக்கணினிகள், 15 ஐபோன்கள் மற்றும் 21 மதுபான போத்தல்களை கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் பயன்படுத்திய 20 மடிக்கணினிகளுக்கு மட்டுமே வரி செலுத்தியதாக சிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தேகநபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஜூன் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த மோசடியில் சுங்க அதிகாரிகள் யாரேனும் ஈடுபட்டார்களா என்பதை விசாரித்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு – அபாய பகுதிகள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை…

இலங்கையில் இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் 25,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. பல பாடசாலைகளில் நுளம்புகள் பெருகும் இடங்களை இனங்காணுவது மிகவும் முக்கிய விடயம் என  அதன் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில், கிட்டத்தட்ட 90,000 நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். அதேபோல், இந்த வருடம் ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மே மாத இறுதியில் நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்தது. வரும் காலங்களில் பருவமழையால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. 93,874 இடங்களை ஆய்வு செய்துள்ளோம். இங்கிருந்து நுளம்புகள் பெருகக்கூடிய 28,310 பகுதிகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம். மேலும், நுளம்புகள் உள்ள 4,890 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன என தெரிவித்தார் இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமணசேன தெரிவித்துள்ளார்.  

1,700 ரூபாய் சம்பள வெற்றிக்கு கொண்டாட்டம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளம் தொடர்பாக நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்புக்கு மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் பட்டாசு கொழுத்தி பாற்சோர் சமைத்து சந்தோசங்களை பகிர்ந்து கொண்டனர். நேற்று (04) வனராஜா மணிக்கவத்தை மற்றும் வனராஜா வோர்லி ஆகிய தோட்டப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் சந்தோசத்தினை பகிர்ந்து கொண்டார்கள். பெருந்தோட் தொழிலாளர்களுக்கு இந்த 1,700 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முன் நின்று பாடுபட்ட நாட்டின் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க தொழில் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் மனுஷ்க நானயகார இலங்கை தொழிலாளர் காங்ரஸின் காங்ரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ராமேஸ்வரன் ஆகியோருக்கு மக்கள் நன்றியினையும் தெரிவித்தனர்.

ரஷ்ய – உக்ரெய்ன் போரில் ஈடுபடும் இலங்கை இராணுவம் – அழைத்துவர ஏற்பாடு…

உக்ரெய்னுக்கு எதிராக போரிடுவதற்காக ரஷ்ய இராணுவத்துடன் இணைந்த இலங்கையின் முன்னாள் இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் ரஷ்யாவுக்குச் சென்று இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்களை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வருவதற்கான திட்டத்தை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக டெய்லி மிரர் ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சமன் வீரசிங்ஹ, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் காமினி வலேபொட ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த மாதம் 25, 26,27 ஆகிய திகதிகளில் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளை மொஸ்கோவில் சந்திக்கவுள்ளனர். போர்க்களத்தில் உள்ள இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்களை மீட்டுத் தங்களை மீளவும் நாட்டுக்கு வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி எண்ணற்ற தொலைபேசி அழைப்புகள் வருவதாக டெய்லி மிரர் கூறுகின்றது. படையினருக்கு நல்ல ஊதியம் மற்றும் பல சலுகைகள் பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. ரஷ்ய – இலங்கை என்ற இரு நாடுகளுக்கிடையில் எதுவிதமான பிரச்சினையும் இல்லாமல் இந்த விடயத்தை தீர்க்கும் நடிவடிக்கையில், இராணுவ வீரர்களை முன்கூட்டியே திருப்பி அனுப்புவதற்கான விடயங்கள் குறித்து விவாதிக்க ரஷ்யா உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளது. ரஷ்யாவின் கூலிப்படை நிறுவனங்களுக்கு சட்ட விரோதமான ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இரண்டு ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ ஜெனரல்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதற்கிடையில் உக்ரெய்னில் இலங்கைக்கான தூதுவர்கள் இல்லாத காரணத்தினால் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரெய்னில் போரிடும் இலங்கையர்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்கும் செயல்முறையில் சில தடைகள் ஏற்பட்டன. ஆனால், துருக்கியில் உள்ள இலங்கை தூதரகம், உக்ரெய்னில் போரிடும் இலங்கையர்கள் பற்றிய விபரங்களைக் கோரி உக்ரெய்ன் வெளியுறவு அமைச்சகத்திற்கு கடந்த சனிக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளது. இதனடிப்படையில் முன்னதாக ரஷ்யாவுக்கு எதிராக உக்ரெய்ன் படையில் போரிட்ட இலங்கை வீரர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், போரில் ஈடுபடுபவர்களின் தற்போதைய நிலை குறித்து தகவல் அறிய முடியாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பிரதமராகும் மோடி ரணிலுக்குச் சொன்னது என்ன?: கொழும்புடன் புதிய இராஜதந்திர உறவுக்கு வழி

இந்தியப் பொதுத் தேர்தலில் தமது கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இலங்கையுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனது வெற்றியைத் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு நன்றிகளையும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து ‘எக்ஸ்’ தளம் ஊடாக அனுப்பிய செய்திக்கு பதிலளித்த மோடி, “இந்தியா-இலங்கை பொருளாதார கூட்டுறவில் எங்களது தொடர்ச்சியான ஒத்துழைப்பை நான் எதிர்பார்க்கிறேன்.” என்றார். பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியின் வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார், இது மோடியின் தலைமையின் கீழ் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் இந்திய மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்று கூறினார். அத்துடன், “நெருங்கிய அண்டை நாடான இலங்கை இந்தியாவுடனான கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளது” என்றும் ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டிருந்தார். மேலும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த மோடி, இலங்கையுடனான எமது உறவுகள் சிறப்பானது மற்றும் தனித்துவமான சகோதரத்துவமானது என்றார். எங்கள் அண்டை நாடு முதல் கொள்கைக்கு இணங்க எங்கள் பிரிக்க முடியாத பிணைப்புகளை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்,” என்று சஜித் பிரேமதாச வெளியிட்ட செய்திக்கு மோடி பதிலளித்துள்ளார். இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நண்பர் என விளித்திருந்த மோடி, இந்தியா-இலங்கை கூட்டாண்மை புதிய எல்லைகளை பட்டியலிடுகையில், உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்” என்று மோடி பதிலளித்தார். அத்துடன், சரத் பொன்சேகாவின் வாழ்த்து பதிவிற்கு பதிலளித்துள்ள மோடி, இலங்கையுடனான எமது உறவுகள் விசேடமானவை. மேலும் அதை ஆழப்படுத்தவும் வலுப்படுத்தவும் நாங்கள் தொடர்ந்து மக்களுடன் இணைந்து பணியாற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சோபித தேரரே கோட்டாவின் உயிரை காப்பாற்றினார் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

ஓமல்பே சோபித தேரரே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் உயிரை காப்பாற்றியதாக போராட்ட செயற்பாட்டாளர்களில் ஒருவரான ஸெஹான் மாலக்க தெரிவித்துள்ளார். காலி முகத்திடல் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தின் போது கோட்டாபயவை படுகொலை செய்யத் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார். கோட்டாபயவை சோபித தேரர் காப்பாற்றினார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார அழுது புலம்பி தலைவரை காப்பாற்றுமாறு சோபித தேரரிடம் கோரியதாகத் தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தேவையான ஆவணங்களை பெற்றுக்கொள்ள சோபித தேரர் நடவடிக்கை எடுத்திருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் இடம்பெறவிருந்த பாரிய இரத்த வெள்ளத்தை தாம் உள்ளிட்ட சிலர் தடுத்ததாக செஹான் மாலக தெரிவித்துள்ளார்.

கனேடியரிடம் இலட்சக்கணக்கில் மோசடி – யாழில் சிக்கி போலி வைத்தியர் – விசாரணையில் அதிர்ச்சி

கனேடியர் ஒருவரிடம் பல இலட்ச ரூபாய் மோசடியில் செய்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் (Jaffna) கைதான போலி வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்பபாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த இளைஞன் தன்னை வைத்தியர் என அறிமுகப்படுத்தி , அதற்கான போலியான ஆவணங்களையும் தயாரித்து வெளிநாடுகளில் வசிக்கும் நபர்களை இலக்கு வைத்து பல இலட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். குறித்த நபர், பாடசாலை மாணவிகள் பலருடன் காதல் தொடர்புகளை பேணி வந்துள்ளமையுடன் வெளிநாடுகளில் வசிக்கும் தன்னை விட வயது அதிகமான பெண்களுடனும் காதல் தொடர்புகளை பேணி அவர்களை மிரட்டி , பல இலட்ச ரூபாய் மோசடி செய்துள்ளார். அத்துடன், இளைஞனிடம் இருந்து மீட்கப்பட்ட தொலைபேசிகளில் பல பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் காணொளிகள் உள்ளதாகவும் காவல்துறை விசரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் குறித்த இளைஞனை நேற்றுமுன்தினம் (03) யாழ்.நகர் பகுதியில் அதிசொகுசு காரில் பயணித்துக்கொண்டிருந்த வேளை காவல்துறையினர் இடைமறித்து கைது செய்தனர். இதனைதொடர்ந்து, இளைஞனை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல போலி உறுதி முடிப்புக்கள் , காணி மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்பு பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. இதன் படி, நேற்றைய தினம் (04) கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை மன்று இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.