கிளிநொச்சியில் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 5 பேர் கைது…
கிளிநொச்சியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டினுள் இருந்த உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் தங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிசார் அந்த வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது வீட்டில் 2700 மில்லிகிராம் ஐஸ்போதைப்பொருள் இருந்தமையால் அங்கிருந்தவர்கள் பொலிஸாரால் கைது |செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் மட்டக்களப்பை சேர்ந்தவர் எனவும் யாழ்ப்பாணம் ஊர்க்காவற்துறை பொலிஸில் பணிபுரிபவர் என்பதும் அவர் கிளிநொச்சியில் உள்ள குறித்த வீட்டிற்கு போதைப்பொருள் பயன்படுத்துவதற்காக வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவர் உள்ளிட்ட குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போது,போதைப்பொருள் வியாபாரி தவிர்ந்த ஏனைய நால்வரும் போதையில் இருந்தமைதெரியவந்துள்ளது. உப பொலிஸ் பரிசோதகர் தனது நண்பரான இந்த போதைப்பொருள் வியாபாரிக்கு வியாபாரத்தை பராமரிக்க உதவியிருப்பதும் போலீஸ் விசாரணையில்தெரியவந்துள்ளது. போதைப்பொருள் வியாபாரத்துடன் அவர் தொடர்புபட்டிருந்தது.உறுதியானதையடுத்து, அவர் மீது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும்வழக்கு தொடரப்படவுள்ளது. இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரையும் இன்று (30) கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்த கிளிநொச்சி பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
எதிர்க்கட்சி எம்.பிகளுக்கு மதுபான உரிமங்கள்…!
அரசாங்கத்திடம் இருந்து மதுபான அனுமதிப்பத்திரங்களை பெற்றதாகக் கூறப்படும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவிற்கு அந்த உரிமங்களை உடனடியாக அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சி கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இதுவரையில் தமது மதுபான அனுமதிப்பத்திரத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, பதுளை ரிதிமாலியத்தவில் 6 மதுபானசாலைகளை திறப்பதற்கு அரசாங்கம் அண்மையில் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த உரிமங்களில் ஒன்று, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் தலையீட்டின் மூலம் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் மனைவி பெயரில் பெறப்பட்டதாக தெரியவருகிறது. இது தொடர்பில் அந்த தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை நேரில் சந்தித்து முறைப்பாடு செய்துள்ளனர். இதனால், மதுபான அனுமதிப்பத்திரத்தை உடனடியாக அரசாங்கத்திடம் கையளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் உறுப்பினரிடம் தெரிவித்த போதிலும், அதற்கும் அவர் செவிசாய்க்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை புதிய மதுபானசாலைகளை திறப்பது தொடர்பில் பதுளை ரிதிமாலியத்தே பிரதேச மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதேவேளை, தமது அரசாங்கத்தின் கீழ் புதிதாக வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படுவதாகவும், தேர்தல் அறிவிக்கப்படவுள்ள இந்த நேரத்தில் மதுபான உரிமங்களை வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் ‘ஓ பொசிட்டிவ்’ குருதி சிறு தட்டுக்கு தட்டுப்பாடு…!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள குருதி வங்கிப் பிரிவில் ‘ஓ பொசிட்டிவ்’ வகை குருதிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் குருதி வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஓ பொசிட்டிவ் குருதி வகை உடையவர்கள் குருதித்தானம் செய்வதன் மூலம் இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தித்துக் கொள்ளமுடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூதூரில் வாய்க்காலுக்குள் பாய்ந்த ஹயஸ் வாகனம்…! அதிகாலையில் நடந்த விபரீதம்…!
மூதூரில் ஹயஸ் வாகனமொன்று வாய்க்காலுக்குள் தடம் புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலத்தோப்பூர் பகுதியிலுள்ள வாய்க்காலுக்குள் ஹயஸ் வாகனமொன்று தடம் புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று(30) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த ஹயஸ் வாகனத்தில் சாரதி மாத்திரமே பயணித்திருந்த நிலையில் விபத்தின் போது சாரதி எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை…! இளைஞன் கைது…!
யாழில் பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் 250 லிட்டர் கோடா மற்றும் 15 லீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் அச்சுவேலி வாகையடி பகுதியிலுள்ள வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக நேற்றையதினம்(29) மாலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அச்சுவேலி உதவி பொலிஸ் பொறுப்பதிகாரியும் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியுமான பொலிஸ் பரிசோதகர் பாலசூரிய தலைமையிலான குழுவினரால் குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது. இதன்போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் அடுப்பு, காஸ் சிலிண்டர், கொள்கலன்கள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டன. அதேவேளை கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வாகையடி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரை இன்றையதினம்(30) மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
யாழில் கடற்படைக்குக் காணி சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் முறியடிப்பு…!
சுழிபுரம் திருவடிநிலையில் கடற்படைக்குக் காணி சுவீகரிக்கும் முயற்சி மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருவடிநிலையில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமிற்கு பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தினரால் இன்று(30) காணி அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அக் காணிகளின் உரிமையாளர்கள் மற்றும் அப் பகுதி மக்கள் உட்பட அரசியல்வாதிகள் என பலரும் அங்கு திரண்டு காணி அளவீடு செய்வதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இவ்வாறு பொது மக்கள் தொடர்ச்சியான எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்த போது அங்கு காணி அளவீடு செய்வதற்கு வருகை தந்த நில அளவைத் திணைக்களத்தினர், காணி அளவீடு செய்யாமலே திரும்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், காணியின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டில் சிகரெட் பாவனையால் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பு!
சிகரெட் பாவனையால் இந்நாட்டில் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 பேர் புகைப்பிடிப்பதால் உயிரிழப்பதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டுகிறது. நாளை (31) அனுசரிக்கப்படும் உலக புகையிலை எதிர்ப்பு தினம் தொடர்பாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிலைத் தொழிலின் குறுக்கீட்டிலிருந்து நமது குழந்தைகளைப் பாதுகாப்பதே இந்த ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் தொனிப்பொருளாகும். தற்போது இலங்கையில் சிகரெட் பாவனை 9.1 வீதத்தால் குறைந்துள்ளதுடன் இளைஞர்கள் மத்தியில் சிகரெட் பாவனை வேகமாக குறைந்து வருவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. புகையிலை நிறுவன அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டில் சிகரெட் உற்பத்தி 19 சதவீதம் குறைந்துள்ளது. உலகில் சிகரெட் பாவனை குறைவடைந்து வரும் நாடுகளில் இலங்கையில் நல்ல போக்கு காணப்பட்டாலும் இன்னும் சுமார் 1.5 மில்லியன் மக்கள் சிகரெட் பாவனையில் ஈடுபடுவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சிகரெட் பயன்படுத்துவதற்கு பன்னாட்டு புகையிலை நிறுவனங்கள் பல தந்திரங்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதேவேளை, பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய் வைத்திய நிபுணர் சந்தன டி சில்வா தெரிவித்துள்ளார்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற இலங்கை திரைப்படம்!
2024 கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடனத் திரைப்படத்திற்கான விருதினை இலங்கைத் திரைப்படமான “சேஷ” வென்றுள்ளது. “ஷேஷ” திரைப்படம் இசுரு குணதிலக்கவின் உருவாக்கமாகும். இதில் மூத்த நடனக் கலைஞர் சந்தன விக்ரமசிங்க முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
எரிபொருள் கசிவு ஏற்பட்ட கப்பல் பொறுப்பேற்பு…
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த நிலையில் எரிபொருள் கசிவு ஏற்பட்ட கப்பலை பொறுப்பேற்றுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த கப்பலில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டமை தொடர்பில் கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் மற்றும் காப்புறுதி நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ் குறித்த சம்பவத்திற்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் இந்திய நிறுவனமொன்றுக்கு சொந்தமான கப்பல் பழுதுபார்ப்பதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள நிலையில், எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் இது தொடர்பில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையால் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், கப்பலில் இருந்து ஹைட்ராலிக் எண்ணெய் கசிந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கப்பலுக்கு சொந்தமான நிறுவனமும் தவறை ஏற்றுக் கொண்டு இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த இந்திய கப்பலின் கெப்டன் நாட்டை விட்டு வௌியேறுவதை தடுக்கும் வகையில் அவருக்கு பயணத்தடை விதிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு துறைமுக பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண் ஒருவரின் சடலம் கொழும்பில் மீட்பு…
கொழும்பு பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகானிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (29) பிற்பகல் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ்புர பகுதியில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 45 முதல் 50 வயதிற்கு இடைப்பட்ட 4 அடி 09 அங்குல உயரமுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் பூக்கள் கொண்ட சிவப்பு நிற ஆடையை (கவுன்) அவர் அணிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன