Search
Close this search box.

பல்கலைக்கழக ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பணிப்புரை…!

நாட்டைக் காக்கும் நாளைய தலைவர்களின் எதிர்காலம் கருதி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரையும் உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பணித்துள்ளார். சம்பள முரண்பாடுகளைத் தீர்த்தல் உட்படப் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இம்மாதம் இரண்டாம் திகதி முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக நிர்வாக உத்தயோகத்தர்கள் மற்றும் போதனைசாராப் பணியாளர்களை உடனடியாகப் பணிக்குத் திரும்பப் பணித்து அந்தந்தத் தொழிற்சங்கங்களின் தலைவர்களுக்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் போதனைசாரா ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் பல இணைந்து தங்களது சம்பள முரண்பாடு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 27 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கமைய இது தொடர்பாக பல அமைச்சரவைப் பத்திரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டு கல்வி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் தொடர்சியாக ஆராய்ந்த அமைச்சரவை, நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர் அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நிபுணர்கள் குழு ஒன்றை அமைப்பதற்குப் பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் உங்களுக்குப் பொருத்தமான தீர்வு கிட்டும் என நம்பப்படுகிறது. தொழிற்சங்கப் போராட்டத்தினால் பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதில் பல இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர். நாட்டைக் காக்கும் நாளைய தலைவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நாட்டின் நற்பிரஜைகளாக உங்கள் பொறுப்புணர்ந்து செயற்பட்டு, பல்கலைக் கழகங்கள் இடையூறின்றி இயங்குவதற்காக உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, தங்களுடைய கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தாம் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும், இனிவரும் காலங்களில் போராட்டத்தை மேலும் வலுப்படுத்த உள்ளதாகவும் அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு நேற்றிரவு அறிவித்திருந்தது. எனினும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரின் பணிப்புரை பற்றி ஆராய்வதற்காக அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் பிரதிநிதிகள் இன்று (30) இரவு நிகழ்நிலையில் கூடவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவிலிருந்து யாழிற்கு போதைப்பொருள் கடத்தல்…! இளைஞன் கைது…!

முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்திய இளைஞரொருவர் புலனாய்வு பிரிவினரால் யாழில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையில் போதைப் பொருளுடன் இளைஞரை கைது செய்துள்ளனர். முல்லைதீவு மாவட்டத்தின் விஸ்வமடுப் பகுதியிலிருந்து பஸ் மூலம் ஸ்பிறிற் எனும் போதைப்பொருளை கடத்த முற்பட்ட பொழுது யாழ் நகரில் வைத்து குறித்த இளைஞரை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது  செய்துள்ளனர். இதன் போது விஸ்வமடு பகுதியைச் சேர்ந்த இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை மேலதிக விசாரணைக்காக குறித்த சந்தேக நபரை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் பாரப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்குதேவையான ஒத்துழைப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் – கனேடிய உயர்ஸ்தானிகர்

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh), கனடாவின் சர்வதேச அபிவிருத்திகளுக்கான பிரதி அமைச்சர் கிரிஸ்டோபர் மக்லணன் (Christopher MacLennan) உள்ளிட்ட குழுவினர் நேற்று (29/05/2024) சந்தித்து கலந்துரையாடினார்கள். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. நல்லிணக்கச் செயற்பாடுகள், மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல், காணிவிடுவிப்பு, கல்வித்துறை மேம்பாடு, தொழில் முனைவோருக்கான ஒத்துழைப்புகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. கல்வி முறையில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்த ஆளுநர், அதற்கான மாதிரி செயற்பாடுகளை முன்னெடுக்க  திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். மேன்மை தங்கிய ஜனாதிபதி கடந்த வாரம்  வடக்கிற்கு விஜயம் செய்தபோது, வைத்தியசாலைகளுக்கான புதிய பிரிவுகளை திறந்துவைத்ததுடன், பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களையும், மக்களுக்கான காணி உறுதிகளையும் வழங்கி வைத்தார். இதனூடாக வடக்கு மாகாண மக்களுக்கு சிறந்த கல்வி மற்றும் சுகாதார சேவை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண  ஆளுநர் தெரிவித்தார். காணி உறுதிகளை வழங்கியமையால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கும், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் அதிக  நன்மைகள் கிட்டும் என தெரிவித்த கௌரவ ஆளுநர் தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளும், கடன் வசதிகளும் தேவைப்படுவதாக கூறினார். இந்த விடயங்களை கேட்டறிந்த கனேடிய தூதுக்குழுவினர் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்க தாம் தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.

வைத்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை: மூடப்படும் அபாயத்தில் ஆதார வைத்தியசாலைகள்…

இலங்கைத் தீவில் அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அதற்கு பொறுப்பான தரப்பினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் வைத்தியர்களின்றி முடங்கிக் கிடக்கும் ஆதார வைத்தியாசாலைகளை மூடுவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (Government Medical Officers Association – GMOA) இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்போது மேற்படி சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சம்மில் விஜேசிங்க, எதிர்வரும் வைத்தியர் சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்திற்காகவே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மருத்துவமனை அமைப்புக்கான அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாததால், நாட்டின் மருத்துவமனை அமைப்பில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிகமான மருத்துவர்களுக்கு பயிற்சியளித்து தேவையான வசதிகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி தொடர்ந்து கூறுகின்றபோதிலும் அதிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. காரணம் புதிய வைத்தியர்களுக்ககு நாட்டில் வேலை வழங்க முடியாது எனவும் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 1390 வைத்தியர்களைக் கொண்ட குழு, அவர்களின் வேலைவாய்ப்புப் பயிற்சியை முடித்த பின்னர் வேலைவாய்ப்புக்கான பிந்திய நியமனங்களைப் பெறுவதற்கு எட்டு மாதங்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டும். நோயாளிகளின் பராமரிப்பு சேவைகளுக்கு உதவக்கூடிய இந்த மருத்துவர்களுக்கு இதுவொரு துரதிர்ஷ்டமான சூழ்நிலை. நியமனம் வழங்குவதில் ஏற்படும் கால தாமதம் குறித்து அறிந்திருந்தும் அதற்கு பொறுப்பான தரப்பினர் நடவடிக்கை எடுப்பதில்லை. இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை ஆறு வருடங்களாக புதுப்பிக்கப்படவில்லை. அரசானது புதிய மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை பிரிவுகளை விரிவுபடுத்திய போதிலும் அவற்றிற்கு மருத்துவர்களை நியமிக்க முடியவில்லை. அதிலும் சில புதிய மருத்துவமனைகளில் நவீன மருத்துவ உபகரணங்கள் கூட காலாவதியாகிவிட்டன. நிர்வாகச் சேவைகள் ஆணைக்குழுவின் கவனக்குறைவினால் நாட்டில் மருத்துவமனை அமைப்பு மிகவும் மோசமாகி வருகிறது. இது விரைவில் மருத்துவமரனை அமைப்பை முழுமையான மூடுவதற்கு வழிவகுக்கும். மருத்துவர் பற்றாக்குறையால் நாடு முழுவதும் உள்ள 400க்கும் அதிகமான மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு மருத்துவப் பிரிவுகள் ஆபத்தில் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு எச்சரித்துள்ளது. தற்போதைய பிரச்சினைக்க பொறுப்பானவர்கள் தீர்வு காணாவிட்டால் மருத்துவர்கள் இல்லாமல் முடங்கிக் கிடக்கும் ஆதார வைத்தியசாலைகளை மூடுவது குறித்து GMOA மத்திய குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.

கார்த்திகை பூ பதிக்கப்பட்ட காலணி விவகாரம்…! தமிழ் தேசப்பற்றார்கள் தகுந்த பாடத்தை வெளிப்படுத்த வேண்டும்…!அருட்தந்தை மா.சத்திவேல் வேண்டுகோள்…!

இலங்கையின் பிரபல காலணி உற்பத்தி நிறுவனத்தினால் விற்பனைக்கு விடப்பட்ட கார்த்திகை மலர் பதிக்கப்பட்ட காலணி தொடர்பில் தமிழ் உணர்வு மிக்க தேசப்பற்றார்கள் இதற்கு தகுந்த பாடத்தை வெளிப்படுத்த வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும்,  அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவரால் இன்று(30) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் பிரபல பாதணி உற்பத்தி நிறுவனம் அண்மையில் சந்தைப்படுத்தியுள்ள தனது உற்பத்தி ஒன்றில் கார்த்திகை மலரை பதிவிட்டுள்ளது. இது இலங்கையின் பேரினவாத அரசியல் முதலாளித்துவத்தினையும் எந்த அளவிற்கு ஆக்கிரமித்துள்ளது என்பதை  காட்டுவதோடு தமிழர்களின் அரசியல் அடையாளங்களில் ஒன்றான கார்த்திகை மலரை மிதிபடும், மிதிக்கப்படும் ஒன்றாக்கியதன் மூலம் தமிழர்களின் அரசியலை மிதித்தழிப்போம் என பகிரங்கமாகவே கர்ஜிப்பதாக உள்ளது. இதனை வன்மையாக கண்டிப்பதோடு தமிழ் உணர்வு மிக்க தேசப்பற்றார்கள் இதற்கு தகுந்த பாடத்தை வெளிப்படுத்த வேண்டும். யாழ் தெல்லிப்பளையில் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டி ஒன்றில் இம் மலர் அலங்காரத்துக்கு பாவிக்கப்பட்ட போது அப்பாடசாலையில் அதிபர் உட்பட ஆசிரியர்களை பொலிசார்  விசாரணைக்கு  உட்படுத்தினர். இதே போன்று மேற்படி குறித்த பாதணி நிறுவனத்தின்  திட்டமிடல் வடிவமைப்பு சந்தைபடுத்துனர்கள் விற்பனை முகவர்கள் என பலதரப்பினரையும் பொலிசார்  விசாரணைக்கு உட்படுத்துவார்களா? சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ள பாதணிகளை மீளப்பெற அதிகாரத்தை பயன்படுத்துவார்களா? என பொலிஸ் மா அதிபரை கேட்கிறோம். கடந்த ஒரு கிழமைக்கு முன்னர் கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்ட போது சுகாதாரத்தை காரணம் காட்டி அதனை தடுத்து நிறுத்தி அடவாடித்தனம் புரிந்த பொலிசார் அதற்கடுத்து  கடந்த கிழமை விசாக பண்டிகை  காலத்தில் அதே சுகாதாரத்தை காரணம் காட்டி எந்த ஒரு உணவு பகிர்களையும் தடுத்து நிறுத்தியதாக அடவாடித்தனம் புரிந்ததாக செய்திகள் வரவில்லை. இது தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்கள பௌத்தர்களுக்கு ஒரு நீதி எனும் பௌத்த பேரினவாதத்தின் அரசியலை வெளிப்படுத்தியது. ஒரு உற்பத்தி நிறுவனம் தன்னுடைய நீண்ட கால கள ஆய்வில் மக்களின் மனநிலையை அறிந்த பின்னரே உற்பத்தியினை வடிவமைக்கும். சந்தையில் விற்பனைக்கு விடும். அவ்வாறெனில் குறித்த நிறுவனம் நீண்ட கால திட்டமிடலின் அடிப்படையில் காலனியில் கார்த்திகை மலரை அடையாளப்படுத்தி உற்பத்தி செய்து சந்தைக்கு விட்டுள்ளது எனில் இலாபத்திற்கு அப்பால் அதன் அரசியல் நோக்கம் தெளிவானது. தமிழர்களை அடக்கி ஒடுக்கி அரசியல் ரீதியாக துவம்சம் செய்வோம் எனும் பேரினவாத மனநிலையை மக்கள் மயப்படுத்தி தமது அரசியல் கூலித்தன்மையை  வெளிப்படுத்தி உள்ளது எனலாம். அரச திணைக்களங்கள், சிங்கள பௌத்த பிக்குகள் தமது பேரினவாத செயற்பாட்டுக்குள் இழுத்து தமிழர்களின் நிலைகளை பறித்து ஆக்கிரமிக்கும் ஆட்சியாளர்கள் தனியார் உற்பத்தி நிறுவனங்கள் வேலைத் தளங்கள் என்பவற்றையும் தமது அரசியலுக்கு பாவிக்க தொடங்கிவிட்டனர் என்பதையே குறித்த நிறுவனம் வெளிப்படுத்தி உள்ளது. பேரினவாதம் பலம் வாய்ந்த ஒன்றாக கட்டமைக்கப்பட்டு  பல்வேறு முகங்களில் கிளைகளை பரப்பி சிங்கள பௌத்த அரச மரம் போல் வியாபித்திருக்கின்றது என்பதை நாம் உணர வேண்டும். இதற்கு தமிழர் தேசிய கொள்கை உருவாக்கிகள், பரப்புரையாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர் எவ்வாறு பதில் அளிக்க போகின்றனர்? தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள்  ஒன்றிணைய வேண்டும், மக்கள் திரட்சி கொள்ள வேண்டும், அடுத்த தேர்தலுக்கு மக்களை ஆயத்தப்படுத்த வேண்டும் என்று கூறுவார்கள்.  உடனடியாக பாதணி விடயத்தில் தலையிட்டு அரசுக்கும் கம்பெனிக்கும் தமது எதிர்ப்பினை  வடகிழக்கு தழுவிய ரீதியில் வெளிக் காட்டுதல் வேண்டும். எமது எதிர்ப்பு பாதணிக்கும், பாதணி கம்பெனிக்கும் எதிரானது மட்டுமல்ல. அது அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலுக்கும் அதன் சக்திகளுக்கும் எதிரானதுமாகும். பல இலட்சம் உயிர்கள் எமது அரசியலுக்காக கொல்லப்பட்ட பின்னரும் எமது அரசியலை கைவிடாத  தேசமாக ஒன்று திரண்டு எதிர்ப்பு காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.இச் சந்தர்ப்பத்தில் அமைதி காப்போம் எனில் எமது அரசியலுக்கு நாமே எதிரிகளாவோம் எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி…!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது வர்த்தக வங்கிகளில் இன்றையதினம்(30)  வீழ்ச்சியடைந்துள்ளது. அதனடிப்படையில், செலான் வங்கியில்-  அமெரிக்க டொலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 294.15 முதல் ரூ. 295.25 மற்றும் ரூ.303.65 முதல் ரூ. முறையே 304.75. மக்கள் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 295.13 முதல் ரூ. 296.16 மற்றும் ரூ. 305.12 முதல் ரூ. முறையே 306.18. கொமர்ஷல் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 293.58 முதல் ரூ. 295.34, விற்பனை விலையும் ரூ. 304.50 முதல் ரூ. 305.50. சம்பத் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் ரூ. 296 முதல் ரூ. 297 மற்றும் ரூ. 305 முதல் ரூ. முறையே 306 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய நாடாளுமன்றம் கலைப்பு- 5 வாரங்களில் பொதுத்தேர்தல்!

பிரித்தானிய நாடாளுமன்றம் உத்தியோகபூர்வமாக இன்று (வியாழக்கிழமை) கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி நடத்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் அண்மையில் அறிவித்திருந்தார் இதன்படி பிரித்தானிய நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் கடந்த 24ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதுடன் பொதுத் தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி தோல்வியடையும் என்று கூறப்பட்டிருந்தது இதனைத் தொடர்ந்து 5 வாரங்களின் பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளியானது அதிவிசேட வர்த்தமானி

குடியுரிமையை துறந்தவர்கள் உட்பட இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய ஒழுங்குமுறை வர்த்தமானி மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விதிமுறைகள் பொது பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த உத்தரவுகள் நிரந்தர வதிவிட விசா ஆணைகள் 2024 என அறியப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நபர் அல்லது குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 19, 20 அல்லது 21 இன் கீழ் குடியுரிமை நிறுத்தப்பட்டவர், அதே போல் ஒரு வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர் திருமணமாகி 6 மாதங்களுக்குப் பிறகு புதிய விதிமுறைகளின் கீழ் விண்ணப்பிக்கலாம். குறித்த வர்த்தமானி அறிவித்தலின் படி, 5 வருடங்களுக்கு முன்னர் திருமணம் இரத்து செய்யப்பட்டால், நிரந்தர வதிவிட அந்தஸ்து தானாகவே இரத்து செய்யப்படும். பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி இலங்கையில் பிறந்தவர்கள் அல்லது இன்னும் இலங்கையில் குடிமக்களாக உள்ள ஒருவர் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று அழைக்கப்படுகிறார். இதன் கீழ் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முதன்மை விண்ணப்பதாரருக்கு $1,000 கட்டணம் வசூலிக்கப்படும் மற்றும் இலங்கையர் அல்லாத வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளுக்கு $400 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்களுக்கு விசேட விசா சலுகை வழங்கும் நாடு: வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கை (srilanka ) சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட விசா சலுகைகளை தாய்லாந்து (thailan) அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான புதிய விசா நடைமுறைக்கு தாய்லாந்து அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த புதிய நடைமுறையின் கீழ் இலங்கை சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்துக்கு செல்ல முன்கூட்டியே விசா பெற்றுக் கொள்ள வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலாப் பயணிகள் 60 நாட்கள் வரையில் தாய்லாந்தில் விசா இன்றி தங்கியிருக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒன் அரைவல் விசா (One Arrival Visa), இலவச விசா என சில புதிய திட்டங்களின் அடிப்படையில் பல நாடுகளுக்கு விசா சலுகை வழங்கும் நடைமுறை இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலங்கைப் பிரஜைகள் ஒன் அரைவல் விசா (One Arrival Visa) மூலம் 60 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் இருந்து சென்ற பேருந்தை பயணிகளுடன் கடத்திய நபரால் பரபரப்பு

கலேவெல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் நிறுத்தப்பட்ட தனியார் பயணிகள் பேருந்து ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேருந்தானது நிறுத்தப்பட்டு சாரதி, நடத்துனர் உள்ளிட்ட பயணிகள் உணவருந்தச் சென்ற போது, ​​குடிபோதையில் நபர் ஒருவர் பேருந்தை இயக்கி இப்பன்கட்டுவ மயானத்திற்கு அருகில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தம்புள்ளை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநபர் ஒருவர் பேருந்தில் ஏறி, அதை இயக்கி ஓட்ட ஆரம்பித்ததாகவும், மற்ற பயணிகள் பயந்து அலறியதாகவும் கூறப்படுகிறது. கொழும்பு மற்றும் திருகோணமலை மூதூருக்கு இடையில் இயங்கும் இந்த தனியார் பயணிகள் பேருந்து மூதூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது, ​​நேற்று இரவு 12:00 மணியளவில் பலால வெவ ஹோட்டலுக்கு அருகில் உணவுக்காக நிறுத்தப்பட்டுள்ளது. பேருந்தில் இருந்த ஓட்டுநர், நடத்துனர் உட்பட சிலர் தேநீர் அருந்துவதற்காக ஹோட்டலுக்குச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அப்போது, ​​இப்பன்கட்டுவா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஹோட்டல் அருகே சாரதி மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் அவர், ஹோட்டலை விட்டு வெளியேறி, பேருந்தில் ஏறி, அங்கிருந்த சாவியுடன் பேருந்தை இயக்கியுள்ளார். அத்துடன், பயணிகள் மற்றும் பேருந்துடன் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். பேருந்தின் நடத்துனர் இதனை கண்ட பேருந்தின் நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் முச்சக்கர வண்டியில் ஏறி பலவந்தமாக எடுத்துச் சென்ற பேருந்தை துரத்திச் சென்றுள்ளனர். இந்த நிலையில் குடிபோதையில் இருந்த நபர் இப்பன்கட்டுவ மயானத்திற்கு அருகில் பேருந்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அதற்குள் பேருந்து 4 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் சென்றதாகவும் பயணிகள் மரண பீதியில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.