Search
Close this search box.

4 விளையாட்டு சங்கங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளனம், ரக்பி சங்கம், மோட்டார் வாகன சம்மேளனம் மற்றும் வலைப்பந்தாட்ட சம்மேளனம் ஆகிய சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் பதிவுகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் மேலதிக பணிகளை முன்னெடுப்பதற்கும், அது தொடர்பான தேர்தலை நடத்துவதற்கும் உரிய அதிகாரியாக விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

03 வருடங்களின் பின் வீடு திரும்பிய பெண் இடைநடுவே மரணம்…

3 வருடங்களுக்குப் பின்னர் வீடு திரும்பிய இடைநடுவே பெண்ணொருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். பசறை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஏறக்குறைய 03 வருடங்களாக குவைத்தில் பணிபுரிந்துவிட்டு தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பெல்மடுல்ல பகுதியில் இவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்து முச்சக்கர வண்டியுடன் மோதி வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரில்ஹேன பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயமடைந்தனர் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த உயிரிழந்த பெண் உட்பட மூன்று பயணிகளும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் பெல்மடுல்ல, கஹவத்தை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது பலத்த காயமடைந்திருந்த நாடு திரும்பிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தம்புள்ளையில் அடுத்தடுத்து உயிரிழந்த நால்வர்!

தம்புள்ளை பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் தம்புள்ளை விகாரை சந்தி பகுதியில்  பதிவாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் இதே சட்டவிரோத மதுபானத்தை அருந்தி இருவர் உயிரிழந்துள்ளதாகவும் இன்று அதே மதுபானத்தை அருந்தி இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இந்த சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பில் பல தடவைகள் பொலிஸாரினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். நீண்ட காலமாக நடைபெற்று வரும் இந்த சட்டவிரோத மதுபான விற்பனை மோசடியால் பிரதேசவாசிகள் தற்போது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைக்கு மேலதிகமாக, இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்று அவர்களின் மரணத்திற்கான உண்மை காரணங்களைக் கண்டறிய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை சாதக, பாதக அம்சங்களுடன் கூடியதாகவே காணப்படுவதாகவும், ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றவும் 30 வருட யுத்தத்தை வெற்றிகொள்ளவும் முடிந்ததுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். இளம் சட்டத்தரணிகளுடன் நடைபெற்ற What’s New சட்ட மறுசீரமைப்பு தொடர்பில் நேற்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் வகையில் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தற்போது நிறைவேற்று அதிகாரத்தின் பல பிரிவுகள் மாகாண சபைகளுக்கும் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் ஜனாதிபதியின், அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு பகிர்ந்தளிப்பதற்கான சட்டமொன்றை நிறைவேற்றவிருப்பதாகவும் தெரிவித்தார். எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதித் தேர்தலொன்று நிச்சயமாக நடத்தப்படும் என்றும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இயங்குநிலை தென்மேல் பருவப் பெயர்ச்சி,மழையும் காற்றும் மேலும் தொடரும்- வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் இயங்குநிலை தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடுவதுடன், வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள முன்னறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மல்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடமத்திய, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.