Search
Close this search box.

பிரான்ஸ் தூதுவர் மரணம்! கொழும்பில் இருந்து மீட்கப்பட்டுள்ள சடலம்

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்சுவா பேக்டெட் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இன்று (26) பிற்பகல் ராஜகிரியவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறக்கும் போது அவருக்கு 53 வயதாகும். 1970 ஆம் ஆண்டு பிறந்த Jean-François Pactet, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல்  இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவராக பணியாற்றியுள்ளார். இந்தநிலையில், சடலம் தொடர்பான நீதவான் விசாரணையின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை விட்டு வெளியேறிய ஏழு இலட்சம் இலங்கையர்கள்..!

கடந்த இரண்டு வருடங்களில் சுமார் ஏழு இலட்சம் இலங்கையர்கள் நாட்டை  விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமையே இதற்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தரவுகளின்படி, 2022 ஜனவரி முதல் 2024 மார்ச்  மாதம் வரையான காலப்பகுதியில், குறைந்தபட்சம் 683,118 இலங்கையர்கள்  சட்ட ரீதியில் வெளிநாட்டு வேலைக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் .

வவுனியாவில் யானையுடன் மோதி தடம்புரண்ட ரயில் : தாய் யானை பலி, யானைக் குட்டி காயங்களுடன் மீட்பு !

வவுனியா கனகராயன்குளம் காட்டு பகுதியில் யானையுடன் மோதி ரயிலொன்று  தடம்புரண்டுன்டுள்ளது. இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (25)  மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் யாழில் இருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற ரயில் கனகராயன்குளம் காட்டு பகுதியில் புகையிரத பாதையினை ஊடறுத்து சென்ற யானை மற்றும் குட்டியுடன் மோதுண்டுள்ளது. இதன் காரணமாக யானை சம்பவ இடத்திலே பலியாகியுள்ளதுடன், யானை குட்டி காயங்களுடன் பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் குறித்த விபத்து காரணமாக நான்கு மணி நேரத்தின் பின்னர் சம்பவ இடத்துக்கு பிறிதொரு புகையிரத சேவை ஊடகவே பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் இறுதிப் போட்டி: கிண்ணத்தை வெல்லப் போவது யார்?

2024 ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. கடந்த மார்ச் 22 ஆம் திகதி சென்னையில் முதல் போட்டியுடன் ஆரம்பமான ஐபிஎல் தொடர் இன்றிரவு சென்னையில் இடம்பெறும் இறுதிப் போட்டியுடன் முடிவுக்கு வரும். இறுதிப் போட்டியின் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு இடம்பெறும். இந்த இரு அணிகளும் லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்திருந்தது. இரு அணிகளும் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என சமபலத்துடன் இருப்பதால் கிண்ணத்தை கைப்பற்றும் முனைப்பில் மிகவும் தீவிரம் காட்டியுள்ளன. இதுவரையில் கொல்கத்தா அணி இரண்டு முறையும் (2012 மற்றும் 2014) சன்ரைசர்ஸ் அணி ஒரு முறையும் (2016) ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளன. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் இந்த இரு அணிகளும் இறுதி லீக் போட்டியில் விளையாடியிருந்தது. இதில் கொல்கத்தா அணி அபார வெற்றியை பதிவுசெய்திருந்தது. அந்த தோல்விக்கு சன்ரைசர்ஸ் அணி இன்று பதிலடி கொடுக்கும் என பலரும் எதிர்ப்பார்க்கின்றனர். இதனிடையே சென்னை M.A. சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2012 ஆம் ஆண்டு முதல் பட்டத்தை வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வைத்தியசாலைக்குள் மதுபோதையில் சண்டித்தனம் – மூவர் கைது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மதுபோதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டுக் குழப்பத்தில் ஈடுபட்ட மூவர்  நேற்று கைது செய்யப்பட்டனர். வைத்தியசாலையில் நோயாளிகளைப் பார்வையிடும் நேரம் முடிந்த பின்னர் தம்மை உள்நுழைய அனுமதிக்குமாறு பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டுக் குழப்பத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். வைத்தியசாலை நிர்வாகம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்த நிலையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து மதுபோதையில் குழப்பத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தீவிரமடையும் ‘ரீமல்” புயல்! இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியின் மத்தியுடன் இணைந்ததாக உருவாகிய தாழ் அமுக்க நிலையானது மிக வலுவான தாழ் அமுக்கமாக மாற்றமடைந்து பின்னர் சூறாவளியாக வலுவடைந்து மணித்தியாலத்திற்கு 12 கிலோமீற்றர் வேகத்தில் வட திசையை நோக்கி நகர்கிறது. இந்த  ‘ரீமல்’ புயலானது மேலும் தீவிரமடைந்து மிகவும் சக்திமிக்க சூறாவளியாக மாற்றமடைந்து இன்று நள்ளிரவளவில் வங்காள தேசத்திற்கும் அதனை சூழ உள்ள மேற்கு வங்காள கரையோரப் பிரதேசத்திற்கும் இடையாக ஊடறுத்து செல்லக்கூடும். இதன் காரணமாக இலங்கைக்கு நேரடியாக எந்தவித தாக்கங்களும் இல்லாத போதிலும் காற்றும் மழையுடனான வானிலையும் அதிகரித்துக் காணப்படும். மன்னார் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்தும் காணப்படும். ஆகையால் கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். இதேவேளை  நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக அதிகரித்து வருகின்றமை காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வளிமண்டலவியல் திணைக்களம் இன்று  வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும். கிழக்கு மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.  மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.