திரியாய் வைத்தியசாலை குண்டுவெடிப்பு – கைதானவருக்கு பிணை…!
திரியாய் வைத்தியசாலை குண்டுவெடிப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று புதன்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குச்சவெளி சுற்றுலா நீதிமன்றில் இடம்பெற்று வந்த குறித்த வழக்கானது விசாரணைக்காக நீதிவான் ஜீவராணி கருப்பையா முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார். குறித்த வழக்கில் எதிரி சார்பாக பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி தேவராஜா ரமணன் இன்றையதினம் முன்னிலையாகியிருந்தார். குறித்த கைதானது, கண்கண்ட சாட்சியங்கள், ஆதாரங்கள் எவையும் இன்றி ஊகத்தின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் குறித்த நபர் புல்மோட்டை – இல்மனைற் தொழிற்சாலையில் கடமையில் இருந்ததாகவும் குறித்த சந்தேக நபரிடம் இருந்து எவ்வித சான்றுப் பொருட்களும் கைப்பற்றப்படவில்லை போன்ற சமர்ப்பணங்களை எதிராளியின் சார்பாக சட்டத்தரணி முன்வைத்திருந்தார். இதையடுத்து சந்தேக நபரை இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திருகோணமலை, திரியாய், ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தில் மார்ச் 14ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. சம்பவம் தொடர்பாக அங்கு பணியாற்றிய வைத்தியரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் புல்மோட்டை இல்மனைட் தொழிற்சாலையில் பணியாற்றிவரும் நபர் ஒருவர் குச்சவெளி பொலிசாரினால் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு அரச சொத்துக்கு தீங்கு விளைவித்தமை மற்றும் தண்டனை சட்டப்பிரிவுக்குக்கீழும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் 67 நாட்களுக்குப் பின்னர் குறித்த நபர் இன்று (22) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பாக வெளியாகிய தகவல்..
தரம் 5 மாணவர்களுக்காக நடத்தப்படும் 2024 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பரீட்சை செப்டம்பர் 15, 2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அச்சத்தில் மன்னார் கிராம மக்கள் ! வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று புதன்கிழமை (22) மதியம் திடீரென கடல் நீர் உட்புகுந்துள்ளது. அத்துடன் மன்னார் மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில் இன்று (22) காலை மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் திடீரென கடல் நீர் உட்புகுந்ததோடு, கடற்கரையில் கட்டப்பட்டிருந்த படகுகள் மற்றும் வலைகள் நீரில் மிதந்துள்ளது. எனினும் படகுகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என மீனவர்கள் தெரிவித்தனர். திடீரென கடல் நீர் உள்வாங்கப்பட்டமையினால் வங்காலை மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் வங்காலை பங்குத்தந்தை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் குறித்த பகுதிக்குச் சென்று நிலமையை பார்வையிட்டதோடு, உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
ஷிரந்தியிடம் கையளிக்கப்பட்ட தமிழ் குழந்தைகளுக்கு என்ன நடந்தது?
இறுதி யுத்தத்தின்போது அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட, குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் துணைவியார் ஷிரந்தி ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்ன நடந்தது என சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnes Callamard கேள்வியெழுப்பியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் உரையாற்றிக்கொண்டிருக்கும் மாணவி ஒருவரின் புகைப்படத்தில் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமிழ் குழந்தை ஒன்று இருப்பதாக அந்த குழந்தையின் பெற்றோர் கூறுகின்றனர். அது தொடர்பான புகைப்படத்தை இந்த உயரியச் சபையில் நானும் காண்பித்திருந்தேன். எனினும், அது குறித்து விசாரித்தபோது அப்படியொரு மாணவி இல்லையென கூறப்படுகின்றது. இந்த குழந்தைகளுக்கு என்ன நடந்தது. இதனையே அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agens Callamardடும் கேட்டிருந்தார். 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, உள்ளக பொறிமுறை மூலம் ஒரு தீர்வை காணுகின்றோம் என தெரிவித்திருந்தார். அதற்காக வெளிநாட்டு நிபுணர்களிடம் இருந்து சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை இந்த மண்ணில் அவ்வாறு நடக்கவில்லை. இந்நிலையில், காணாமல் போன குழந்தைகள், படையினரிடம் சரணடைந்த போராளிகள் உள்ளிட்டவர்களை சர்வதேச நீதியின் மூலமாகவே கண்டுபிடிக்க முடியும். எனினும், இலங்கைக்குள் அது நடக்காது, இங்கு கொலை செய்தவர்கள் சுதந்திரமாக இருக்கின்றார்கள். சில சர்வதேச நாடுகளில் அவர்களுக்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இலங்கையில் உண்மை, நியாயம், சத்தியம் மரணித்துவிட்டது. சட்டம் இங்கு செயலில் இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு…! ஈரான் தூதரகத்திற்கு விஜயம் செய்த ரணில்
அதிபர் ரணில் விக்ரமசிங்க கொழும்பில் (colombo) உள்ள ஈரான் தூதரகத்திற்கு விஜயம் ஒன்றை செய்து ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்தார். ஈரான் தூதரகத்திற்கு இன்று (22.5.202) காலை வருகை தந்த ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலி ரெசா டெல்கோஷ் மற்றும் பணிப்பாளர்ககள் வரவேற்றனர். அதன் பின்னர், ரணில் விக்ரமசிங்க ஈரான்(iran) தூதுவருடன் ஒரு குறுகிய உரையாடலில் ஈடுபட்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் குறிப்பேட்டில் ஒரு குறிப்பை வைத்த, சிறிலங்கா அதிபர் ‘ஈரான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். கடந்த ஆம் திகதி ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்தார். ஈரான் அதிபரின் மறைவை தொடர்ந்து பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சபாநாயகரை சந்தித்த தென் கொரிய பிரதிநிதி
தென் கொரியாவின் ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உப தலைவரும் செயலாளர் நாயகமுமான சுங் சியுங்-யுன் (Chung Seung-yun) தலைமையிலான உயர் அதிகாரிகள் அடங்கிய தூதுக்குழுவினர் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை (Mahinda Yapa Abewarthana) சந்தித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற இச்சந்திப்பில் கடந்த வருடம் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்புச் சட்டம் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கு தென் கொரியாவில் நடைமுறைப்படுத்தப்படும் பொது நிறுவங்களுக்கான ஒருமைப்பாடு மதிப்பீட்டு முறைமையை (Integrity Assessment System) இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாக சுங் சியுங்-யுன் குறிப்பிட்டு்ள்ளார். குறித்த விடயம் தொடர்பில் கருத்துத்தெரிவித்த சபாநாயகர், சிறிலங்காவில் நிறைவேற்றப்ட்டுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டம் முற்றுமுழுதாக சுயாதீனமானது எனவும் அதன் மூலம் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு சுயாதீனமாக இயங்கக் கூடியதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.தென்கொரியாவின் ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் செயன்முறை, விசாரணை நடவடிக்கைகளின் தன்மை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் இந்நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
யாழில் அரங்கேறிய பயங்கரம்: இளைஞன் மீது காவல்துறை உத்தியோகத்தர் வாள்வெட்டு
யாழ்பாணத்தில் (Jaffna) இளைஞர் ஒருவர் மீது சிவில் உடையில் வந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரால் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் யாழ்.தொல்புரம் மத்தியில் நேற்றையதினம்(21) இடம்பெற்றுள்ளது. இதன்படி, வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டவர் காங்கேசன்துறை காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது. மேலும், சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடுதியாக குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள்..!
நாடளாவிய ரீதியில் லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த விலை குறைப்பை லங்கா சதொச நிறுவனம் மேற்கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இப் பொருட்களை அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இன்று (22) முதல் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெத்தலி (தாய்லாந்து) ஒரு கிலோ 145 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 950.00 ரூபா, பெரிய வெங்காயம் (இந்தியன்) ஒரு கிலோ 40 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 250.00 ரூபா. மேலும், ஒரு கிலோ கடலை (பெரியது) 38 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 450.00 ரூபா, ஒரு கிலோ வெள்ளைச் சீனியின் புதிய விலை 275.00 ரூபாவாகவும் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ரணில் அதிரடி அறிவிப்பு..!
ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. முதலில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படும் எனவும் நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை குறைக்குமாறு சஜித் வேண்டுகோள்!
கனமழை காரணமாக நீர்மின் நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை, விக்டோரியா, ரன்தெனிகல மற்றும் சமனல வெவ ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டங்கள் அதிகரித்துள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இவ்வாறான நிலையில், மின்சார அலகொன்றின் விலையை குறைப்பதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு 2 தடவைகள், மின்சார சபையிடம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது. என்றாலும் அந்த முன்மொழிவுகள் இதுவரையில் சமர்ப்பிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 15-20 சதவீதமாக இருந்த நீர்மின் உற்பத்தி மட்டம் இம்மாதம் 20 ஆம் திகதி ஆகும் போது 31 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவும் இலங்கை மின்சார சபையும் ஒன்றிணைந்து இந்த நன்மையை மின்சார பாவனையாளர்களுக்கு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.