25 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வீதித்தடையை பயன்படுத்தி வாகனங்களை சோதனை செய்த போது போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் ராகம, வல்பொல பட்டலந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சோதனைக்கு உட்படுத்திய காரில் 102 கிராம் 940 மில்லி கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 45 வயதுடைய ‘பாஸ் ரொஷான்’ என பொலிஸார் தெரிவித்தனர். இவர் ராகம, கெண்டலியத்த பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சந்தேக நபர் ஹெரோயின் கடத்தல் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் உள் விவகாரங்களில் அத்துமீறி தலையிடுகிறது அமெரிக்கா..!!
காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிப்பது முதல் நடப்பு மக்களவைத் தேர்தல் வரை, இந்தியாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா அத்துமீறி தலையிடுவதாக ரஷ்ய வெளியுறவித்துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா குற்றம்சாட்டி உள்ளார். அமெரிக்கா – ரஷ்யா இடையிலான வளரும் மோதலின் அங்கமாக, இந்தியாவை முன்வைத்தும் அமெரிக்கா மீது ரஷ்யா பாய்ந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நடவடிக்கையில், உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர ஆதரவளித்து வருகின்றன. ஆயுதங்கள், உளவு தகவல்கள், போர் பயிற்சிகள் உள்ளிட்ட அமெரிக்காவின் இந்த ஆதரவு மூலமே, ரஷ்யாவின் பெரும்படை தாக்குதலுக்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் தாக்குப்பிடித்து வருகிறது. உக்ரைன் விவகாரத்தில் தொடங்கிய அமெரிக்க – ரஷ்ய மோதல் வேறுப்பலவற்றை முன்னிறுத்தியும் வளர்ந்து வருகிறது. அவற்றில் ஒன்றாக தற்போது இந்தியாவை முன்வைத்து, அமெரிக்காவை ரஷ்யா கடுமையாக சாடி உள்ளது. அதில் முதலாவதாக, இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு அமெரிக்காவின் ஆதரவு அமைந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கொல்லும் சதித்திட்டத்தை முறியடித்ததாக அமெரிக்கா பெருமிதம் தெரிவித்தது. பன்னூனை கொல்லும் முயற்சியில் ஈடுபட்ட நிகில் குப்தா, இந்திய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர். பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் இந்தியாவில் தேடப்படும் பன்னூன், அமெரிக்கா மற்றும் கனடாவின் இரட்டை குடியுரிமை பெற்றவர். பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ், மத்திய உள்துறை அமைச்சகம் அவரை பயங்கரவாதியாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பன்னூனுக்கு எதிரான கொலை முயற்சியில் இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா சுமத்துவதாக ரஷ்யா சாடி உள்ளது. மேலும்’ நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சிக்கலாக்கும் வகையில் இந்தியாவின் உள் அரசியல் சூழ்நிலையை சமநிலை இழக்கச் செய்வதாகவும், இதன் மூலம் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட முயற்சிப்பதாகவும்’ அமெரிக்கா மீது ரஷ்யா குற்றச்சாட்டுகளை பட்டியலிடுகிறது. ரஷ்யா மற்றும் சவூதி அரேபியா போன்ற தேசங்களின் கொள்கைகளை இந்தியா ஏற்க முயற்சிப்பதாக, ‘வாஷிங்டன் போஸ்ட்’ வெளியிட்டுள்ள செய்திக்கு பதிலளிக்கும் வகையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா பேசுகையில் இவற்றை பட்டியலிட்டுள்ளார்.
தடுப்பூசி இறக்குமதி மோசடி : முன்னாள் நிறைவேற்று அதிகாரிக்கு விளக்கமறியல்!
சர்ச்சைக்குரிய ஹியூமன் இம்மியூனோகுளோபியூலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர, நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். இதன்போது, ஹியூமன் இம்மியூனோகுளோபியூலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பாக அவர் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
பரிஸ் ஒலிம்பிக் சுடரை ஏந்த ஈழத் தமிழனுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு.
பிரான்ஸ் முழுவதும் இடம்பெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக் தீபத்தை 10,000 பேர் கரங்களில் ஏந்தி ஓடவிருக்கும் நிலையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜாவுக்கும் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சலோட்ட சுற்றுப்பயணம் பிரான்ஸ் முழுவதும் இடம்பெறவுள்ள நிலையில் பரிஸ் பிராந்தியத்தில் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு ஈழத் தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. பரிஸ் நகரில் கடந்த வருடம் சிறந்த பாண் தயாரிப்பில் முதலிடம் பெற்று பிரான்ஸ் அதிபரின் வசிப்பிடமாகிய எலிஸே மாளிகைக்குப் பாண் விநியோகம் செய்யும் பெருமையைப் பெற்றவரான தர்ஷன் செல்வராஜா என்பவரே ஒலிம்பிக் தீப்பந்தம் ஏந்துவதற்குத் தெரிவாகியிருக்கிறார். நேற்று (2024.05.09) மார்செய் நகருக்கு சென்றடையும் தீப்பந்தத்தை பிரான்ஸின் பெருநிலப்பரப்பிலும் கடல் கடந்த நிர்வாகத் தீவுகளிலும் சுமார் 12 ஆயிரம் கிலோமீற்றர்கள் தூரத்துக்கு ஆயிரக்கணக்கானவர்கள் அஞ்சல் ஓட்டமுறையில் மாறிமாறிச் சுமந்து செல்லவுள்ளனர். பிரான்சின் பாரிசில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் 2023ஆம் ஆண்டுக்கான விருதை வென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜா பரிஸ் ஒலிம்பிக் சுடரை (Olympic torch) ஏந்தவுள்ளார். ஒலிம்பிக் தீபத்தை 10,000 பேர் கரங்களில் ஏந்தி ஓடவிருக்கும் நிலையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜாவுக்கும் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
போலி வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்..! வலியுறுத்தும் நாமல்.
நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பை முன்னெடுப்பதற்காக பலர் மே 9 காலிமுகத்திடல் பேராட்டத்திற்கு வழிவகுத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கக் கருத்தத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மே 9 தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 2 வருடங்கள் பூர்த்தியாகின்றன. போராட்டத்தை விட அதனை முன்னெடுத்தவர்கள் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் காயமடைந்தவர்கள் இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சொத்துக்கள் வாகனங்கள் என்பன சேதமாக்கப்பட்டன. இந்த நாட்டில் சுயலாப தேவைக்காக ஜனாநாயக உரிமைகளைப் பயன்படுத்துகின்றனர். நாட்டு மக்கள் புத்திசாலிகள். எனவே போலி வாக்குறுதிகளை வழங்கி அரசியல் இலாபம் தேடுபவர்களிடம் ஏமாற மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. என நாமல் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ள நிர்வாக முறைகேடு!
வடமாகாண கல்வித் திணைக்களத்தின்(Northern Provincial Department of Education) மேலதிக மாகணக் கல்விப் பணிப்பாளர் த.உமாவின்(Uma) பதவி முத்திரை தலைகீழாக பொறிக்கப்பட்டு அனுப்பப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, வட மாகாண கல்வித் திணைக்களத்தின் மேலதிக மாகாண கல்வி பணிப்பாளரின் கையெழுத்துடன் அனுப்பப்பட்ட கடிதத்திற்கே இவ்வாறு தலைகீழாக அவரது பதவி முத்திரை பொறிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த கடிதத்தில் பதவி முத்திரையை பொறித்தவர் தலைகீழாக பெறிக்கப்பட்டுள்ளது என தெரிந்தும் கடிதத்தை புதிதாக வரையாமல் தலைகீழாக பொறிக்கப்பட்ட பதவி முத்திரைக்கு மேலாக மீண்டும் பதவி முத்திரை பொறிக்கப்பட்டு அனுப்பியுள்ளார். வடக்கு மாகாண கல்வி அமைச்சில் நிர்வாக முறைகேடுகள் இடம் பெறுவதாக பல்வேறு தரப்பினர்களும் குற்றச்சாட்டு வரும் நிலையில் கடிதத்துக்கு கூட ஒழுங்காக பதவி முத்திரை இடப்படாமை கல்வி அமைச்சு மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஆதாரப்படுத்துவதாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டுமக்களுக்கு விடுக்கபட்ட முக்கிய அறிவித்தல்.
நாட்டில் கிறிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் நாணய அலகு சட்ட ரீதியானதல்ல என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நலந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார். கிறிப்டோ நாணயம் இலங்கையில் வெகுவாக பயன்படுத்தப்படுவதில்லை எனவும் இந்த நாணய அலகு பயன்பாட்டில் ஆபத்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேசயம கிறிப்டோ நாணயங்களில் முதலீடு செய்த சிலர் நட்டமடைந்துள்ளதாகவும் இவ்வாறான முதலீடுகளின் மூலம் சிலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் இலங்கையில் கிறிப்டோ நாணய அலகினை பயன்படுத்துவது குறித்து மத்திய வங்கி தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக ஆளுனர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை அணி அறிவிப்பு; மேலதிக வீரர்கள் பட்டியலில் விஜயகாந்த் வியாஸ்காந்த்..
T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை அணி இன்று (09) அறிவிக்கப்பட்டது. எதிர்வரும் ஜூன் 1 முதல் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில், போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியின் பெயர் விபரங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வௌியிட்டுள்ளது. அணித்தலைவராக வனிந்து ஹசரங்கவும் துணை தலைவராக சரித் அசலங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். குசால் மெண்டிஸ், பெத்தும் நிஷங்க, கமிந்து மென்டிஸ், சதீர சமரவிக்ரம, அஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க, தனஞ்சய டி சில்வா, மஹீஸ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரண, நுவன் துஷாரா, தில்ஷான் மதுஷங்க ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அசித்த பெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக்க ராஜபக்ஸ, ஜனித் லியனகே ஆகியோர் மேலதிக வீரர்களுக்கான தெரிவில் இடம்பெற்றுள்ளனர்.
வியாஸ்காந்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து தெரிவிப்பு!
வியாஸ்காந்த் தனது கிரிக்கெட் பயணத்தில் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆளுநர் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தி குறிப்பில், இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சன் ரைசஸ் ஹைதரபாத் அணிக்காக விளையாடியுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரரும் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு வடக்கு மாகாணம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். வடக்கு மாகாணத்திலிருந்து தனது கிரிக்கெட் பயிற்சியை பெற்ற இவர் இலங்கைக்கு பெருமிதத்தை பெற்றுக்கொடுத்துள்ளதுடன், யாழ். மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார். பல்வேறுபட்ட சமூக சீர்கேடான செயற்பாடுகளில் கவனம் செலுத்தும் இளைய தலைமுறையினருக்கு, விளையாட்டின் மூலம் சாதனை படைக்கும் 22 வயதேயான வியாஸ்காந்த் ஒரு சிறந்த முன்னுதாரணமாவர். இவரை முன்மாதிரியாகக் கொண்டு எமது இளைஞர், யுவதிகள் விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. கற்றல் மூலம் மட்டுமல்ல விளையாட்டின் மூலமும் உயரங்களை எட்ட முடியும் என்பதை உணர்த்தியுள்ள விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு மீண்டும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் அகமகிழ்வடைகின்றேன் என்றுள்ளது.
காணி உறுதிப் பத்திரங்களை பதிவு செய்யும் நிகழ்வு…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இவ் ஆண்டில் இருபது லட்சம் காணி உறுதிகள் வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பூரண அளிப்பு வழங்கும் திட்டத்தின் (உருமய) கீழ் காணிகளை பதிவு செய்யும் நிகழ்வு நேற்று (09) சாந்திபுரம் மற்றும் செளத்பார் கிராமங்களில் இடம் பெற்றுள்ளது. நீண்ட காலமாக அரச காணிகளில் தற்காலிக காணி ஆவணங்களுடன் வாழ்ந்து வரும் மக்களின் காணி உரிமைகளை உறுதிப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்படும் குறித்த செயற்திட்டத்தின் கீழ் மன்னார் பிரதேசத்தில் நடமாடும் சேவை ஊடாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக பிணக்குகள் இன்றி உரிமையாளர் மாற்றம் ஏதும் இடம் பெறாத காணிகளின் உரிமையாளர்களுக்கு விரைவாக பூரண அளிப்பு வழங்குவதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதே நேரம் மன்னார் பிரதேச செயலக பிரிவில் பூரண அளிப்பை பெற்றுக்கொள்ளகூடிய விதமாக எந்த ஒரு பிணக்குகளும் அற்ற உரிமை மாற்றம் செய்யப்படாத தற்காலிக காணி ஆவணங்களைக் கொண்டுள்ள காணி உரிமையாளர்கள் தற்காலிக காணி பத்திரத்தின் மூலப்பிரதி,பிறப்பு சான்றிதழ்,திருமண சான்றிதழ்,அடையா அட்டை பிரதி என்பவற்றை சமர்பித்து பூரண அளிப்புக்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.