Search
Close this search box.

O/L பரீட்சையில் முறைகேடு – CID யில் முறைப்பாடு!

நடைபெறும்  கல்விப் பொதுத்தராதர பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடு செய்யவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள 2 பரீட்சை நிலையங்களிலும் ஹசலக்க பிரதேசத்தில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்திலும் இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தேர்வு எழுதியவர்கள் நேற்று வழங்கப்பட்ட ஆங்கில வினாத்தாளை கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி படம் எடுத்து மற்ற தரப்பினருக்கு அனுப்பி விடை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த நேரத்தில் பரீட்சை நிலையங்களில் இருந்த அதிகாரிகள் கையடக்கத் தொலைபேசிகளைக் கைப்பற்றியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர எம்மிடம் தெரிவித்துள்ளார்.

முஜிபுர் ரஹ்மான் இன்று பாராளுமன்றத்திற்கு!

முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினராக இன்று (10)  பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார். இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற கூட்டத்தின் பின்னர் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதால் வெற்றிடமான ஐக்கிய மக்கள் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நியமிக்க கட்சி தீர்மானித்தது. எவ்வாறாயினும்  டயானா கமகேவிடம் இருந்து வெற்றிடமாகவுள்ள உறுப்பினர் பதவிக்கு பொருத்தமான பெண் ஒருவரை நியமிக்குமாறு இலங்கை மகளிர் பாராளுமன்ற உறுப்பினர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை மகளிர் பாராளுமன்ற உறுப்பினர் மன்ற தலைவி, பாராளுமன்ற உறுப்பினர்  சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனியாருக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு!…

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா, பாவிலான்பாட்டன் குடியிருப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுமார் 160 ஏக்கர் பனை மரங்களை கொண்ட காணிகள் சட்ட விரோதமான முறையில் இந்திய தனியார் கம்பெனி ஒன்றிற்கு கனிய மணல் அகழ்வுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வரும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.     இவ்விடயம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், குறித்த காணியில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனை மரங்கள் அழிக்கப்பட்டு கனிய மணல் அகழ்வு இடம் பெற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால்  பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது குறித்த காணிக்கான சுற்று வேலி அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் குறித்த காணியின் உரிமையாளர்கள் அங்கு சென்ற நிலையில் பொலிஸார் கைது செய்வோம் என அச்சுரூத்துவதாகவும் அடாவடித்தனத்துடன் காணி அபகரிப்பு இடம் பெற்று வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். தமது பூர்வீக காணிகளே அடாத்தாக பிடிக்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.இவ்விடயம் குறித்து தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. இதனால் எமது சமூகமும் பாரிய அளவில் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர். பனை உற்பத்தியை நம்பி வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பனை மரங்கள் உள்ள காணி அபகரிக்கப்பட்டு பனை மரங்களும் வெட்டப்பட்டு வருகிறது. தற்போது எமது வாழ்வாதாரத்திற்கான பனை மரங்களும் வெட்டப்பட்டுள்ளது.தனியார் நிறுவனம் ஒன்றிற்கு மணல் அகழ்வுக்காக குறித்த காணியை விற்பனை செய்துள்ள நிலையில் தற்போது எங்களை உள்ளே நுழைய விடாது காணிக்கு சுற்று வேலி அடைக்கப்பட்டு வருகின்றது. எனவே உரிய உயர் அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு எமக்கு  எமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த காணியை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.      

100 மி.மீ மழைவீழ்ச்சி இன்று எதிர்பார்ப்பு…

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் பல இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடல் நிலை:  புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.