யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இடையில் நாளை(13) முதல் மீண்டும் ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினத்திற்கு வரவேண்டிய பயணிகள் கப்பல் தாமதமானமை மற்றும் தவிர்க்கமுடியாத சில சட்டரீதியான அனுமதிகள் காரணமாகவே இவ்வாறு கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கப்பல் சேவையை முன்னெடுக்கவுள்ள நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்பதிவு செய்த பயணிகள் பயண திகதியை மாற்றிக்கொள்ள முடியும் எனவும் அல்லது கட்டணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசந்துறைக்கு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆந் திகதி முதல் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதியுடன் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, நாளை(13) முதல் இந்த கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது.