பல கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று (13) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டணி தீர்மானித்துள்ளது.
கோரிக்கைகளுக்கு அரசு உரிய பதில் அளிக்காவிட்டால் எதிர்வரும் 22ம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என கூட்டணியின் இணை ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் இன்று (13) அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு முதல் நிலவும் மாதாந்த கொடுப்பனவு மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பிலான முன்மொழிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த “அத தெரண” வினவிய போது தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் 11ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.
இன்று தமது பிரச்சினைகளுக்கு திட்டவட்டமான தீர்வு வழங்கப்படாவிடின் வேலை நிறுத்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தி அத்தியாவசிய சேவைகள் வாபஸ் பெறப்படும் என அனைத்து பல்கலைக்கழகங்க தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைச் செயலாளர் கே.எல்.டி.ரிச்மண்ட் எச்சரித்துள்ளார்.