Search
Close this search box.
இலங்கையில் போருக்குப் பின்னரும் தமிழர்களுக்கு எதிராக சித்திரவதை”

இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும், தமிழ் மக்களுக்கு எதிரான் சித்திரவதைகள் தொடர்வதாக சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (International Truth and Justice Project – ITJP) தெரிவித்துள்ளது.

இதன்படி, 2015 – 2022 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சித்திரவதைகளுக்கு உள்ளானதாகக் கூறப்படும் 123 தமிழர்களின் விபரங்களையும் ITJP வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டை அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் நேற்றைய தினம் முற்றாக மறுத்திருந்தார்.

போருக்கு பின்னர் இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் துஷ்பிரயோகங்களை ஆவணப்படுத்தி வரும் லண்டனை தளமாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (International Truth and Justice Project – ITJP) அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

2022 ஜூலை மாதம் இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர், மேற்குறிப்பிட்ட 123 பேரில் 11 தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்கள் பிரித்தானியாவில் புகலிம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கைக்கு எதிராக சர்வதேச சமூகம் அழுத்தத்தை பிரயோகிக்காத வரையில் தமிழர்களுக்கு எதிராக அடக்குமுறை தொடரும் என ITJP இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய,

“யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், மனித உரிமைகள் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கும், தமிழர்களுக்கு காணிகளை விடுவிப்பது, இராணுவத்தை முகாம்களுக்கு மட்டுப்படுத்துவது உள்ளிட்ட நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கை பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது அத்துடன், காணாமற்போனதாகக் கூறப்படும் மக்கள் தொடர்பான வழக்குகளை ஆராய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்” கூறியுள்ளார்.

Sharing is caring

More News