விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒன்றாகப் போராடிய இலங்கை இராணுவம், உக்ரைன் – ரஷ்யப் போரில் இரு தரப்பாக பிளவுபட்டு போரிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று புதன்கிழமை உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வுப் பெற்றவர்கள் மோசடியான முறையில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதில் பெரும் நிதி மோசடிகளும் இடம்பெறுகின்றன.
முகாம் உதவியாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டு ரஷ்ய-உக்ரேனிய போரில் கூலிப்படைகளாக தள்ளப்படுகிறார்கள். இதில் பல இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் சிறந்த வீரர்களாக இருந்த பலர் உக்ரைன் – ரஷ்யப் போரில் கூலிப்படைகளாக செயற்படுகின்றனர்.
இலங்கை இராணுவம் இன்று இரண்டு தரப்புகளாக பிளவுபட்டுள்ளது. ஓய்வு பெற்ற நமது இராணுவ வீரர்களுக்கு சரியான வருமானம் இல்லாததால் இப்படி நடக்கின்றது.
ஏனெனில் இன்று உக்ரைன் – ரஷ்ய போரில் இலங்கை இராணுவத்தின் ஓய்வுப் பெற்ற வீரர்கள் இரு தரப்பிலும் பிரிந்து இரு தரப்பிலும் இருந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் ஒன்றாகப் போராடினோம். எனினும், இன்று நிலைமை வேறு விதமாக மாறியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.