Search
Close this search box.

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் கட்டுநாயக்கவில் கைது..!

மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்தாண்டு இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் சிறுவர் கடத்தல் கும்பலின் பின்னணியில் இருந்த பிரதான உள்ளூர் உதவியாளர், நேற்று மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார். இதன் போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டார். இலங்கை எல்லை முகவர் நிலையம் ஊடாக ஒரு வருட கால விசாரணையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை 14 வயது சிறுவனை அவரது தந்தையுடம் மலேசியாவுக்கு அழைத்து சென்றபோது குறித்த நபர்  கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நீண்ட காலமாக இரகசியமாக கண்கானிக்கப்பட்டு வந்தவர் என தெரியவந்துள்ளது.

மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவு…!

கடந்த இரண்டு மாதங்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக மஸ்கெலியா மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட சுமார் 45 அடி குறைந்துள்ளது. நீர் தேக்கத்தின் நீர் மட்டம் குறைந்துள்ளதால் 1968 ம் ஆண்டில் நீரில் மூழ்கிய அனைத்து வணக்க ஸ்தலங்களும் தற்போது பார்க்க கூடிய அளவில் உள்ளது. குறிப்பாக சண்முக நாதர் ஆலயம், பௌத்த விகாரையில் இருந்த புத்தரின் சிலை, அதன் அருகில் இருந்த போதி மரம், இஸ்லாமிய பள்ளியின் தூபி மற்றும் கங்கேவத்தை நகரில் இருந்த சித்தி விநாயகர் ஆலயம் என்பன வற்றுடன்  வெள்ளையர்களால் கட்டப்பட்ட பாலம் என்பன தற்போது பார்க்க கூடிய அளவில் உள்ளது. காசல்ரீ, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது.

போதைப்பொருளுடன் கைதான ஊடகவியலாளரின் மகன்..

போதைப்பொருளுடன் கைதான ஊடகவியலாளரின் மகனிற்கு 14 நாட்கள் விளக்கமறியல் போதைப் பொருளுடன் கைதான ஊடகவியலாளரின் மகனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 08 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி ஒன்றில் கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆந் திகதி பெரிய நீலாவணை விசேட அதிரடிப்படையினரால் தகவல் ஒன்றின் அடிப்படையில் போதைப் பொருட்களுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் சட்ட நடவடிக்கைக்கமைய 07 நாட்கள் தொடர்ச்சியாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் குறித்த வழக்கு புதன்கிழமை(24) விசாரணைககு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை சந்தேக நபருக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அப்துல் கையூம் பிசால் அகமட் (வயது-24) என்ற சந்தேக நபர் நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகம் செய்து வந்ததுடன் அவற்றை உபயோகித்தும் வந்துள்ளார். இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த சந்தேக நபர் கைதாகி உள்ளதுடன் போதைப்பொருள் பாவனைக்காக புனர்வாழ்வு முகாம்களில் சிகிச்சை பெற்றிருந்தார். அத்துடன் சந்தேக நபரின் தந்தையார் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிறை எப்.எம். இன் கட்டுப்பாட்டாளராகவும் அம்பாறை மாவட்டத்தில் சிரேஸ்ட ஊடகவியலாளராகவும் செயற்பட்டு வருகின்றார். மேலும் குறித்த சந்தேக நபர் வசம் இருந்து 1 கிராம் 90 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பெரிய நீலாவணை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் கடந்த வெள்ளிக்கிழமை 17 ஆந் திகதி கைது செய்யப்பட்டு பெரிய நீலாவணை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பால்மா விலை தொடர்பில் வௌியான புதிய தகவல்

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை மீண்டும் குறைப்பதற்கு சங்கம் என்ற ரீதியில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பால்மாவின் விலை திருத்தம் தொடர்பில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என அதன் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார். கடந்த மாதம் பால்மா இறக்குமதியாளர்கள், 400 கிராம் பால்மாவின் விலை 60 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 150 ரூபாவாலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர். அதன்படி, தற்போது பால்மா, சந்தையில் பல்வேறு விலைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அசோக பண்டார குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பால் மாவின் விலையை குறைப்பதாக நியூசிலாந்தில் இருந்து பால்மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று நேற்று (24) அறிவித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலை 250 முதல் 350 ரூபா வரையிலும், 400 கிராம் பால்மா பொதியின் விலை 100 முதல் 140 ரூபா வரையிலும் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கைக்கும் பால்மா இறக்குமதியாளர் சங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதாக கூறி சட்டவிரோதமான முறையில் பணத்தை பெற்றுக்கொள்ளும் ஆட்கடத்தல்காரர்களை கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை பிரிவிற்கு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) உத்தரவிட்டுள்ளார். இதேவேளை உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பணத்தைப் பெறும் அதிகாரம் இல்லை எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அநுராதபுரத்தை அண்மித்த விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதாக பணம் வசூலித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முறைப்பாட்டுடன் தொடர்புடைய தரப்பினரை கைது செய்யுமாறு விசாரணைக் குழுக்களுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். இவ்வாறு பணம் பெறும் மோசடிகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை விரைவாகவும் வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கு சகல வசதிகளையும் வழங்குமாறு மனுஷ நாணயக்கார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலிகளுக்கு எதிராக போராடிய இலங்கை இராணுவம் பிளவுபட்டுள்ளது: உக்ரைன் – ரஷ்யப் போரில் கூலிக்கு வேலை செய்யும் பரிதாபம்

விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒன்றாகப் போராடிய இலங்கை இராணுவம், உக்ரைன் – ரஷ்யப் போரில் இரு தரப்பாக பிளவுபட்டு போரிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று புதன்கிழமை உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வுப் பெற்றவர்கள் மோசடியான முறையில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதில் பெரும் நிதி மோசடிகளும் இடம்பெறுகின்றன. முகாம் உதவியாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டு ரஷ்ய-உக்ரேனிய போரில் கூலிப்படைகளாக தள்ளப்படுகிறார்கள். இதில் பல இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை இராணுவத்தின் சிறந்த வீரர்களாக இருந்த பலர் உக்ரைன் – ரஷ்யப் போரில் கூலிப்படைகளாக செயற்படுகின்றனர். இலங்கை இராணுவம் இன்று இரண்டு தரப்புகளாக பிளவுபட்டுள்ளது. ஓய்வு பெற்ற நமது இராணுவ வீரர்களுக்கு சரியான வருமானம் இல்லாததால் இப்படி நடக்கின்றது. ஏனெனில் இன்று உக்ரைன் – ரஷ்ய போரில் இலங்கை இராணுவத்தின் ஓய்வுப் பெற்ற வீரர்கள் இரு தரப்பிலும் பிரிந்து இரு தரப்பிலும் இருந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் ஒன்றாகப் போராடினோம். எனினும், இன்று நிலைமை வேறு விதமாக மாறியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் மிக தீவிரமாக பரவும் டெங்கு!

பிரான்சில் டெங்கு காய்ச்சல் பரவல் மிக தீவிரமாக பரவி வருகிறது. ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 1,700 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் வெறுமனே 131 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் பதிவாகியிருந்த நிலையில், இவ்வருடம் ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 23 ஆம் திகதி வரை 1,679 டெங்கு காய்ச்சல் பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் பொது சுகாதாரத்துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் பரவும் டெங்கு காய்ச்சல் போன்று பிரான்சிலும் பரவுகிறது. ஒலிம்பிக் போட்டிகளின் போது மிகுந்த விளிப்புணர்வுடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.