Search
Close this search box.
டிக்டாக் செயலிக்கு தடை!! வெளியான தகவல்

அமெரிக்காவில் டிக்டாக் நிறுவனம் செய்த மேல் முறையீடு தோல்வியுற்றதைத் தொடர்ந்து, அது தடையை நோக்கி நெருங்கிக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்டாக், சீனாவில் தளம் கொண்டுள்ள ‘பைட்டான்ஸ்’ (ByteDance) நிறுவனத்திற்குச் சொந்தமானது.

‘பைட்டான்ஸ்’ நிறுவனம் டிக்டாக்கை சீன நாட்டவருக்கு உரிமையில்லாத நிறுவனத்திடம் வரும் ஜனவரி 19ஆம் தேதிக்குள் விற்கவேண்டும் அல்லது அமெரிக்காவில் டிக்டாக்கிற்குத் தடை செய்யப்படும் என்ற சட்டத்தை எதிர்த்து டிக்டாக் மேல்முறையீடு செய்தது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்தச் சட்டத்தை இயற்ற, கடந்த ஏப்ரல் மாதம் அதில் கையெழுத்திட்டார்.

டிக்டாக் ஒருவிதப் பொழுதுபோக்குத் தளம், அதன் பயனீட்டாளர்களுக்கு லாபம் ஈட்டக்கூடியது ஆகியவற்றைத் தாண்டி, மற்ற காரணங்கள் இருக்கக்கூடும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.

தேசிய கருத்துகள், தேர்தல்கள், பொதுக் கொள்கை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்த சீன அரசாங்கம் டிக்டாக்கைப் பயன்படுத்தலாம் என்ற காரணத்தைக் குறிப்பிட்டு, தடைக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

அத்தகைய அச்சங்கள் அடிப்படையற்றவை என்று டிக்டாக் கூறியதை அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அமெரிக்க தேசிய நலனைப் பாதுகாக்க, டிக்டாக்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க காங்கிரசுக்கு அதிகாரம் உண்டு என்று நீதிமன்றம் கூறியது.

இதற்கிடையே, டோனல்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி அதிபர் பதவியை ஏற்கவிருக்கும் நிலையில், அந்த உத்தேசத் தடை அமெரிக்க – சீன உறவுகளை பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக டிக்டாக் தெரிவித்துள்ளது.

டிக்டாக், டிரம்ப்பை நாடவிருப்பதாகவும் அதனைத் தடை செய்வதால், மார்க் ஸக்கர்பெக்கிற்குச் சொந்தமான ஃபேஸ்புக்கின் முதன்மை நிறுவனமான ‘மெட்டா’ பெரும் பலனடையும் என்று அது விவாதிக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புதிய சட்டத்தை அமெரிக்க நீதிபதிகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, டிக்டாக் பயனீட்டாளர்கள் தங்கள் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

“எனக்கு மிகக் கோபமாகவும் கவலையாகவும் உள்ளது. காரணம், டிக்டாக் என் வாழ்க்கையையே மாற்றியது,” என்றார் 38 வயது நூல் செய்தியாசிரியர் கேட்டி வுல்ஃப்.

அந்தச் செயலியின் மூலமாக தமது வாடிக்கையாளர்களில் 80 விழுக்காட்டினரைத் திரட்டுவதாக அவர் கூறினார்.

Sharing is caring

More News