டிக்டாக் செயலிக்கு தடை!! வெளியான தகவல்
அமெரிக்காவில் டிக்டாக் நிறுவனம் செய்த மேல் முறையீடு தோல்வியுற்றதைத் தொடர்ந்து, அது தடையை நோக்கி நெருங்கிக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்டாக், சீனாவில் தளம் கொண்டுள்ள ‘பைட்டான்ஸ்’ (ByteDance) நிறுவனத்திற்குச் சொந்தமானது. ‘பைட்டான்ஸ்’ நிறுவனம் டிக்டாக்கை சீன நாட்டவருக்கு உரிமையில்லாத நிறுவனத்திடம் வரும் ஜனவரி 19ஆம் தேதிக்குள் விற்கவேண்டும் அல்லது அமெரிக்காவில் டிக்டாக்கிற்குத் தடை செய்யப்படும் என்ற சட்டத்தை எதிர்த்து டிக்டாக் மேல்முறையீடு செய்தது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்தச் சட்டத்தை இயற்ற, கடந்த ஏப்ரல் மாதம் அதில் கையெழுத்திட்டார். டிக்டாக் ஒருவிதப் பொழுதுபோக்குத் தளம், அதன் பயனீட்டாளர்களுக்கு லாபம் ஈட்டக்கூடியது ஆகியவற்றைத் தாண்டி, மற்ற காரணங்கள் இருக்கக்கூடும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். தேசிய கருத்துகள், தேர்தல்கள், பொதுக் கொள்கை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்த சீன அரசாங்கம் டிக்டாக்கைப் பயன்படுத்தலாம் என்ற காரணத்தைக் குறிப்பிட்டு, தடைக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. அத்தகைய அச்சங்கள் அடிப்படையற்றவை என்று டிக்டாக் கூறியதை அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அமெரிக்க தேசிய நலனைப் பாதுகாக்க, டிக்டாக்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க காங்கிரசுக்கு அதிகாரம் உண்டு என்று நீதிமன்றம் கூறியது. இதற்கிடையே, டோனல்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி அதிபர் பதவியை ஏற்கவிருக்கும் நிலையில், அந்த உத்தேசத் தடை அமெரிக்க – சீன உறவுகளை பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக டிக்டாக் தெரிவித்துள்ளது. டிக்டாக், டிரம்ப்பை நாடவிருப்பதாகவும் அதனைத் தடை செய்வதால், மார்க் ஸக்கர்பெக்கிற்குச் சொந்தமான ஃபேஸ்புக்கின் முதன்மை நிறுவனமான ‘மெட்டா’ பெரும் பலனடையும் என்று அது விவாதிக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதிய சட்டத்தை அமெரிக்க நீதிபதிகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, டிக்டாக் பயனீட்டாளர்கள் தங்கள் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். “எனக்கு மிகக் கோபமாகவும் கவலையாகவும் உள்ளது. காரணம், டிக்டாக் என் வாழ்க்கையையே மாற்றியது,” என்றார் 38 வயது நூல் செய்தியாசிரியர் கேட்டி வுல்ஃப். அந்தச் செயலியின் மூலமாக தமது வாடிக்கையாளர்களில் 80 விழுக்காட்டினரைத் திரட்டுவதாக அவர் கூறினார்.
14 வயது சிறுமியை கொலை செய்த தந்தை!
கம்பஹா, மாகவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 14 வயது சிறுமியை கொலை செய்து, நிர்மாணிக்கப்பட்டு வரும் கழிவறை குழியில் சடலத்தை வீசிய சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்களை பொலிசார் தற்போது வௌியிட்டுள்ளனர். டிசம்பர் 5 ஆம் திகதி, 14 வயதுடைய தனது மகளை காணவில்லை என தாய் ஒருவர் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். விசாரணையை தொடங்கிய பொலிசார் கொலைக்கான மூல காரணத்தை கண்டுபிடித்தனர். முறைப்பாட்டாளரான தாய், தனது இரண்டாவது திருமணமான தனது கணவர் மற்றும் மகளுடன், மாகவிட்ட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வேறு ஒருவருக்கு சொந்தமான மூன்று மாடி வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார். கணவர் கட்டுமான தொழிலும், மனைவி ஏக்கல பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திலும் பணிபுரிந்து வருகின்றனர். 02.12.2024 அன்று கணவனும் மகளும் வீட்டில் இருந்தபோது, காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய அந்தப் பெண் தன் மகள் இல்லாதது குறித்து கணவரிடம் விசாரித்துள்ளார். இதன்போது, மகள் நண்பரின் குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா சென்றிருப்பதாகவும், இன்று வரமாட்டார் மறுநாள்தான் வருவார் என்றும் கணவர் தெரிவித்துள்ளார். 05.12.2024 வரை மகள் வீட்டுக்கு வராததால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு, பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது, சிறுமி காணாமல் போனது குறித்து அவரது கணவர் சந்தேகம் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் முறைப்பாட்டாளரின் 42 வயதுடைய கணவரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 02.12.2024 அன்று கணவன் அடகு வைத்த தங்க நகையை விடுவிக்க மகளிடம் பணத்தை கொடுத்துவிட்டு, அந்த தங்க நகையை விடுவிக்க தந்தையுடன் செல்லுமாறு கூறிவிட்டு மனைவி பணியிடத்திற்கு சென்றுள்ளார். போதைக்கு அடிமையான கணவன், மகளிடம் தங்கப் பொருட்கள் வாங்க கொடுத்த பணத்தை கேட்டு, மகள் மறுத்ததால், மகளை தாக்கி, பணத்தை பறித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். வீட்டுக்கு வந்த அவர், மகள் தாக்கப்பட்ட இடத்திலேயே இறந்து கிடந்ததைக் கண்டு, சிறுமியின் சடலத்தை பொலித்தீன் பொதியொன்றில் போட்டு, கட்டி வீட்டின் கழிவறை குழியில் போட்டு மூடியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. கிடைத்த தகவலின் அடிப்படையில், கம்பஹா நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய, கழிவறை குழியில் போடப்பட்டிருந்த மகளின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 06.12.2024 அன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 16.12.2024 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் ஆற்றுப்பகுதியில் மீன்பிடித்த நபர் சடலமாக மீட்பு!
வவுனியா பேராறுநீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் வெள்ளிக்கிழமை (6) மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…. வெள்ளிக்கிழமை (6) மாலை பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் நபர் ஒருவர் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் நீருக்குள் தவறி வீழ்ந்து மூழ்கியுள்ளார். இதனை அவதானித்த மற்றொருநபர் சம்பவம் தொடர்பாக ஊர்மக்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தார். இதனையடுத்து குறித்த நபரை தேடும்பணி ஊர்மக்களால் முன்னெடுக்கப்பட்டது. நீண்டநேரமாக தேடுதல் இடம்பெற்றுவந்த நிலையில் சிலமணி நேரங்களின் பின்னர் அவரது சடலம் நீருக்குள் இருந்து மீட்கப்பட்டது. சம்பவத்தில் தரணிக்குளம் பகுதியை சேர்ந்த குரு என்ற இரு பிள்ளைகளின் தந்தையே மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
மாணவர்களுக்கு தைக்கப்பட்ட சீருடைகளை வழங்க அரசாங்கம் தீர்மானம்!
அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு தைக்கப்பட்ட சீருடைகளை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில் முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பாடசாலை சீருடைக்கான துணிகளை வழங்கும்போது அதில் பெருமளவிலான துணிகள் வீணடிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்களுக்கு தைக்கப்பட்ட சீருடைகளை வழங்கும் தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.