நாடாளுமன்றத்தில், எதிர்வரும் வாரங்களில் 22ஆம் திருத்தச்சட்டமூலம் கொண்டு வரப்படமாட்டாது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலுக்கு பின்னர், 22ஆம் திருத்த சட்டமூலம் முன்வைக்கப்படும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் 22ம் திருத்த சட்டத்திற்கு நாடாளுமன்றில் ஆதரவு கிடைக்காவிட்டால் அன்றைய தினமே நாடாளுமன்றை கலைப்பதற்கு வர்த்தமானி அறிவித்தல் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பான வர்த்தமானியில் வெளியிடுவதை தவிர்க்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நீதியமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இந்த சட்ட மூலத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவினை பெற்றுக்கொள்வதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சவால்களை எதிர்நோக்குவதால் நாடாளுமன்றை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.