Search
Close this search box.
வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்ட 5000 கோடி: அவசரமாக இலங்கைக்கு விரையும் சர்வதேச பொலிஸ்

இலங்கையில் 5000 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பிய இணையக் குற்றவாளிகள் தொடர்பில் விசேட விசாரணைக்காக சர்வதேச பொலிஸ் மற்றும் சீன பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நாட்டிற்கு வரவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று (18) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த இணையக் குற்றவாளிகள் நீர்கொழும்பு பெய்த்துகல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கணனி ஆய்வு கூடம் ஒன்றை நடத்தி பல இலட்சம் ரூபாவை இணையம் மூலம் மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்  நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

பல நாடுகளைச் சேர்ந்த சந்தேகநபர்கள் சுற்றுலா விசாவில் நாட்டுக்கு வந்து இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்ட சீனப்பிரஜைகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் டுபாயில் சைபர் முகாம் ஒன்றை நடத்தி வருவதாகவும், டுபாய் பொலிஸார் அந்த முகாமை சோதனையிட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றவாளிகள் டுபாயில் மக்களை ஏமாற்றி பெரும் தொகையை மோசடி செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்த குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள், இது தொடர்பான 100 வங்கிக் கணக்குகளையும் விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சீன பிரஜை ஒருவர் நீர்கொழும்பில் 30 அறைகள் கொண்ட மூன்று மாடிகள் கொண்ட ஹோட்டலை 80 இலட்சம் ரூபா வாடகை அடிப்படையில் 3 மாத காலத்திற்கு பெற்று அதனை பயன்படுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கணக்குகளை பயன்படுத்தி 5000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தேகநபர்கள் சில நாட்களில் 800 இலட்சம் ரூபாவிற்கு மேல் சம்பாதித்துள்ளதாகவும் அதனை கொண்டாடும் வகையில் நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விருந்து ஒன்றையும் நடத்தியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 39 சந்தேக நபர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sharing is caring

More News