Search
Close this search box.
ராஜபக்சர்களுக்கு துணை போகும் ஜே.வி.பி: சஜித் குற்றச்சாட்டு

ராஜபக்சர்களை ஆட்சிக்கு கொண்டு வர வாக்குத் திரட்டும் திட்டத்தை ஜே.வி.பி. தரப்பினரே முன்னெடுத்தனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) குற்றஞ்சாட்டியுள்ளார்.

களுத்துறையில்  நேற்று (14.07.2024) நடைபெற்ற மக்கள் அரண் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ராஜபக்சர்களை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு வீடு வீடாகச் சென்று அடிமட்ட பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்தது ஜே.வி.பி. தரப்பினரே. அவர்கள் ராஜபக்சர்களை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு டீல் போட்டு வீடு வீடாகச் சென்று சுவரொட்டிகளை ஒட்டினர்.

இவர்களைப் போன்று திருடர்களுடன் எனக்கு எந்த டீலும் இல்லை. மகிந்த ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டு வர கிராமத்தில் வீடு வீடாகச் சென்று வாக்குத் திரட்டும் திட்டத்தை இந்த மக்கள் விடுதலை முன்னனணியினரே முன்னெடுத்தனர்.

நாட்டை அழித்த திருடர்களை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக மக்கள் விடுதலை முன்னனணியினர் செயற்பட்டாலும், அந்தத் திருடர்களுடன் இணைந்து பதவிகளை ஏற்றுக்கொள்ள நான் ஒருபோதும் விரும்பவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முழு நாட்டுக்கும் நகைச்சுவைகளை முன்வைத்து வருகின்றார்.

புண்ணியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான ஒருவர், தேர்தலுக்குப் பயந்து தேர்தலை நடத்தாமல் அதிகாரத்தில் இருந்து கொள்வதற்குப் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றார்.

இவ்வாறான ஒருவரை நான் எனது வாழ்க்கையில் பார்த்தில்லை. போட வேண்டிய ஒவ்வொரு முடிச்சுக்களையும் அவர் போடுகின்றார். சிறப்புரிமைகளை வைத்து பயனடைய நினைக்கின்றார்.

சலுகைகள், வரப்பிரசதாசங்களை வழங்கி கட்சித் தலைவர்களை வளைத்துப் போடும் வேலையிலும் அவர் இறங்கியிருக்கின்றார். கட்சித் தலைவர்களும் அவ்வாறான நடவடிக்களையும் முன்னெடுத்துள்ளனர்.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சலுகைகளை அடிப்படையாகக் கொண்டு தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் மோசமான அரசியல் கலாசாரத்துக்கும், அவ்வாறான அரசியலை முன்னெடுப்பவர்களையும் நிறுத்துகின்ற இந்தப் பேராசை அரசியலையும் முடிவுக்குக் கொண்டு வரும் காலம் நெருங்கி விட்டது.

ஜனாதிபதியும் அரச தரப்பினரும் தேர்தலைக் கண்டு அஞ்சமடைந்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியால் ஐக்கிய தேசியக் கட்சி பூச்சியத்துக்கு வீழ்ந்ததுடன், புண்ணியத்தால் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தாலும் அதனை ஏற்று கொள்வதற்கு கூட பல மாதங்கள் பிடித்தன.

மூலோபாய ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக அவர்கள் தங்கள் இருப்பைப் பாதுகாக்கும் விதமாகவே இவ்வளவு காலமும் செயற்பட்டு வந்துள்ளனர்.

இத்தகைய சுயநல போக்குகளை விடுத்து, மக்களின் யுகத்தை உருவாக்கி, சாரதாண மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் அரசொன்றே தற்போது நாட்டுக்கு அவசியம்” என சுட்டிக்காட்டியள்ளார்.

Sharing is caring

More News