எனது குழந்தை இறக்க காரணம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை மருத்துவர்கள் என கிளிநொச்சி விசுவமடுவைச் சேர்ந்த ராஜாதுரை சுரேஸ்(Rajathurai Suresh) என்பவர் மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
குழந்தை பேற்றிற்கான மருத்துவ ஆலோசனை நிலையமாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையினை பயன்படுத்தி வந்த தன்னை முறையற்ற முறையில் தவறாக வழிநடத்தியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் குழந்தையை இழந்ததோடு தன் மனைவியின் கருப்பையையும் இழந்து, சந்ததி எதிர்காலத்தை தொலைத்து விட்டு நிற்பதாகவும் அதற்கு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்களின் அக்கறையற்ற செயற்பாடுகளே காரணமாகும் எனவும் அவர் குற்றம் சாட்டுகின்றார்.
வடக்கின் தன்னார்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிலரின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட ஊழலுக்கு எதிரான பிரஜைகள் புலனக் குழுவில் தனக்கு நேர்ந்த துயரை, இழைக்கப்பட்ட அநீதியை ராஜதுரை சுரேஸ் பதிவிட்டிருந்தார்.
இலங்கையின் வடக்கில் இடம்பெற்ற பல முறைகேடுகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் அறிந்தவர்கள் அல்லது அவற்றால் பாதிக்கப்பட்டவர் ஊழலுக்கு எதிரான பிரஜைகள் புலனக் குழுவில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
குறித்த புலனக் குழுவில் ராஜதுரை சுரேஸ் இட்டிருந்த அந்த பதிவு பின்வருமாறு அமைந்திருந்தது. கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்களால் தன் குழந்தையையும் தன் மனைவியின் கருப்பையும் தான் இழந்து நிற்பதாக குறிப்பிடுகின்றார்.
எனது மனைவி கர்ப்பமாக இருந்ததால் முதல் பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சென்றிருந்தேன்.
மனைவியை பரிசோதித்த வைத்தியர், குழந்தை பிறக்கும் என 24.06.2023 திகதியை வழங்கினார். 09.06.2023 அன்று எனது மனைவியை இறுதிப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.
அங்கு பரிசோதனை செய்த BOG மருத்துவரால் 12.06.2023 திகதி கொடுக்கப்பட்டு, இந்த திகதியில் குழந்தையை பெற்றுக்கொள்ள தயாராகுங்கள் என்று கூறினார். எங்கள் கிளினிக் கோப்புறையிலும் திகதியை பதிவு செய்தார். அதேபோல் 12.06.22023 அன்று குழந்தையைப் பெற்றெடுக்கத் தயாராக என் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.
முதலில் பரிசோதித்த மருத்துவர் இல்லாத போது அதே தரத்தில் உள்ள மற்றொரு BOG மருத்துவர் பரிசோதனை செய்து விட்டு இந்த திகதியில் உங்களை யார் வரச் சொன்னார்கள்? என்று கேட்டார்.அவருக்கு கிளினிக்கை கொப்பியை காட்டினோம். பின்னர் அவர் திகதியை மாற்றி விட்டு 26.06.2023 அன்று வருமாறு கூறினார்.
மீண்டும் 26.06.2023 அன்று என் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அன்றைக்கு குழந்தை பிறக்கவில்லை. வயிற்று வலி இல்லாத காரணத்தால் அவர்கள் 27.06.2023 காலை மருந்து ஏற்றினார்கள்.
காலையிலிருந்து மாலை வரை முயற்சித்தார்கள்.ஆனால் எந்த மருத்துவரும் பிரவச அறைக்கு வரவில்லை.
நான் சென்று குழந்தை இன்னும் பிறக்கவில்லையா? என்று கேட்டேன். நாங்கள் மீண்டும் மருந்து ஏற்றியுள்ளோம். காத்திருங்கள் என்று தாதியர் ஒருவர் என்னிடம் கூறினார்.
இரவு 7 மணி வரை குழந்தையை பிரசவிப்பதற்காக மனைவி முயற்சி செய்தும் முடியவில்லை.மனைவி தன் சுய நினைவினை இழந்து கொண்டிருந்ததால் குழந்தையின் துடிப்பும் குறைந்து கொண்டே வந்தது.
அப்போது என் மனைவி,என்னால் முடியாதுள்ளது.குழந்தையை காப்பாற்றுங்கள் என்று கத்தியுள்ளார்.பின்னர் இரவு 7:30 மணிக்கு அவசர அவசரமாக ஆப்ரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்றார்கள்.
பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக ஆறு வைத்தியர்கள் வந்தார்கள். மிக வேகமாக சத்திர சிகிச்சை செய்தார்கள். அவர்களின் முயற்சியின் முடிவில் நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் என்னிடம் வந்த குழந்தை இறந்து விட்டது. கர்ப்பப்பையை நீக்கி விட்டோம். அம்மாவை மட்டும் காப்பாற்றி விட்டோம் என்று சொன்னார்கள்.
10 மாதம் வரை பிள்ளையின் வரவிற்காக காத்திருந்த, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையை நம்பியிருந்த எனக்கும் எனது மனைவிக்கும் கிளிநொச்சி வைத்தியசாலையால் சொல்லப்பட்ட பதில் இவ்வளவு மோசமானதாக இருந்தது.
பின்னர் அறிந்தேன். 12ம் திகதி மனைவியை பரிசோதித்து பார்த்த வைத்தியர் விடுமுறையில் சென்று இருந்ததால் அவருக்கு பதிலாக பதில் கடமைக்கு வந்த வைத்தியர் (இரு வைத்தியர்களும் ஒரே தகைமை கொண்டவர்கள்) அவர் விடுமுறை முடிந்து மீண்டும் வரும் திகதியைத் தான் 26 என மாற்றி எனது மனைவியை வைத்தியசாலைக்கு கொண்டு வரும்படி எழுதியிருந்தார்.
இவர்களுடைய திகதி மாற்றமும் நேர காலத்தை கவனத்திற்கு கொள்ளாமல் செயல்பட்டதும் எனது குழந்தை இறக்க காரணம்.
அது மட்டும் இல்லாமல் எனக்கு இனி ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடியாமல் மனைவி உடைய கருப்பையைக் கூட அகற்றியுள்ளார்கள்.
இது தொடர்பாக கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தேன்.இது வரைக்கும் எனக்கு தகுந்த பதில் எதுவும் அவர்களிடம் இருந்து கிடைக்கவில்லை.
எனவே துறைசார்ந்த பொறுப்பான பொறுப்பதிகாரிகள் சம்பந்தப்பட்ட வைத்தியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதோடு அது, இது போன்று வேறு யாருக்கும் இனிவரும் காலங்களில் நடக்காதிருக்க உதவும் படி அந்த நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என தன் கருத்துக்களை மனமுருகி அவர் முன் வைத்திருந்தார்.
இந்த நிகழ்வுகள் தொடர்பிலான பதிவுகளை அவர் தன்னகத்தே வைத்திருப்பதாகவும் யாரொருவர் இது தொடர்பில் வினவும் போதும் தன்னால் நடந்தவற்றை எடுத்துக்கூற முடியும் என அவருடன் உரையாடிய வேளை குறிப்பிட்டிருந்தார் என்பது இங்கே சுட்டிக் காட்டத்தக்கது.
கர்பகால பராமரிப்பு மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கான ஏற்பாடாக குடும்பநல உத்தியோகத்தர்களின் சேவை இருந்து வரும் சூழலில் அது ஏன் இவர்களுக்கு சரிவர கிடைக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
விசுவமடுவில் வாழ்ந்து வரும் அவர்கள் மாவட்ட வைத்தியசாலைக்கு சென்று ஆலோசனை பெற்று குழந்தை பெற முயற்சிக்கப்பட்டது ஏன்? குழந்தையை பெற்றுக்கொள்ள கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையினை தெரிவு செய்திருந்த போதும் ஆலோசனை வழிகாட்டல்களை பிரதேச குடும்ப நல உத்தியோகத்தர்கள் செய்திருக்கலாம்.
குடும்ப நல உத்தியோகத்தர்கள் சரிவர தங்கள் கண்காணிப்பை மேற்கொண்டு அவர்களுக்கு வழிகாட்டல்களை செய்திருக்க வேண்டும்.
அப்போது குழந்தை பெற்றுக்கொள்வதற்கான உரிய நேரத்தினை அவர்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கலாம்.அத்தோடு குழந்தையின் வளர்ச்சி மற்றும் தாயின் சுகாதார நிலைமைகளை அவதானித்தவாறு இருந்திருக்கலாம்.
அத்தகைய செயற்பாடுகள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான இறுதி நேரத்தில் பெருமளவில் உதவியாக இருந்திருக்கும் என குடும்ப நல உத்தியோகத்தர் ஒருவருடன் இது தொடர்பில் கருத்துக்களைக் கேட்டபோது அவர் இவ்வாறு விபரித்திருந்தார்.
மதிப்பு மிக்க துறையாக வைத்தியத்துறை இருப்பதோடு புவியில் வாழும் கடவுளாக வைத்தியர்கள் மதிக்கப்பட்டு வரும் சூழலில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியர்களின் செயற்பாடு மன்னிக்க கூடியதல்ல என தம் விசனத்தினை வெளிப்படுத்தும் சமூக ஆர்வலர்கள் பலர் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை வேண்டும் என குறிப்பிடுகின்றனர்.
வடக்கில் பல துறைகளில் ஊழல் மோசடிகள் நடைபெற்று வருகின்றதும் அது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியும் பல சந்தர்ப்பங்களில் அவை தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் மோசடிகள் உறுதி செய்யப்பட்டும் எத்தகைய சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படாதது ஏன் என்ற கேள்வியும் அவர்களிடையே எழுவதனையும் சுட்டிக்காட்டலாம்.
சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது மீண்டுமொரு தடவை அது போல் ஊழல் மோசடிகள் நடைபெறுவதை தடுப்பதற்காகவே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
வடக்கில் உள்ள தமிழர்களிடம் உள்ள ஊழலுக்கு எதிராக போராடும் ஆற்றலும் ஊழலற்ற ஒரு தேசம் வேண்டும் என்ற ஆர்வமும் தெளிவும் இலங்கை அரசாங்கத்திற்கு இருப்பதாக தெரியவில்லை. அதன் செயற்பாடுகள் அதனை வெளிப்படுத்துவதாகவும் இல்லை என சமூக விடய கற்றலாளர் குறிப்பிடுவது பற்றியும் சிந்திக்க தலைப்பட வேண்டும்.