Search
Close this search box.

மயில் வேட்டையில் சிக்கிய பழங்குடியினர்…!

மாதுரு ஓயா வனப்பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்து மயிலை வேட்டையாடி சமைத்து உண்ட காணொளியில் தோன்றிய ஐந்து ஆதிவாசிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஐவரும் சரணடைந்த நிலையில், கைது செய்யப்பட்டதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு வெளிநாட்டவர் ஒருவருக்குச் சொந்தமான பெஸ்ட் எவர் புட் ரிவ்யூ சோவ் எனும் யூடியூப் சமூக ஊடகத்தில், மாதுரு ஓயா வனப்பகுதியில் மயிலொன்றை வில் மற்றும் அம்புகளை பயன்படுத்தி வேட்டையாடி சாப்பிடும் கணொளி உருவாக்கப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளது. பழங்குடியினர் மயிலை வேட்டையாடி, அதனை எவ்வாறு சமைத்து உண்பது என்பதை இந்த காணொளி ஊடாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதி வனவிலங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மஹியங்கனை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து, வெளிநாட்டவர் உள்ளிட்ட ஆறு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, மஹியங்கனை – தம்பன பிரதேசத்தில் வசிக்கும் குறித்த ஐந்து பழங்குடியினரும் ஹெனானிகல வனஜீவராசிகள் அலுவலகத்தில் சரணடைந்துள்ளனர். தொடர்ந்து, அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், தலா ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த மயிலை தாங்கள் கொல்லவில்லை என சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட மயிலை தம்பனை பாடசாலைக்கு அருகில் வசிக்கும் ஒருவர் காணொளி பதிவுசெய்வதற்காக கொண்டுவந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். விசாரணையில் பழங்குடியினர்களுடன் வெளிநாட்டு பிரஜையை குறித்த நபர்தான் அறிமுகப்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. இதன்படி, சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை வனஜீவராசிகள் திணைக்களம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

வாரத்திற்கு 1,700 பேர் கொரோனா நோயால் இறக்கின்றனர்

கொவிட் வைரஸின் தீவிரம் குறைந்துள்ள போதிலும், அது இன்னும் உலகிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ஜெனீவாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதும் உலகம் முழுவதும் ஒரு வாரத்தில் 1,700 பேர் கொவிட் தொற்றால் உயிரிழப்பதாக அவர் தெரிவித்தார். பல நாடுகளில் கொவிட் வைரஸுக்கு எதிராக நோய்த்தடுப்பு மருந்துகளைப் பெறுவதில் குறைந்துள்ளதாகவும் வைரஸைத் தொடர்ந்து பலவீனப்படுத்தத் தடுப்பூசிகளைப் பெறுவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.  

மலேசியாவில் இலங்கையர் உட்பட 88 வெளிநாட்டவர்கள் கைது.

மலேசியாவில் ஈப்போ நகரின் மூன்று இடங்களில் சட்டவிரோத விபச்சார நடவடிக்கைகளுக்கு  எதிரான சுற்றிவளைப்பில் 88 வெளிநாட்டவர்களை அந்நாட்டு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள  அதிகாரிகள் கைது செய்துள்ளனர். செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் விபச்சார தொழில் நடைபெறுவதாக சந்தேகிக்கப்படும் ஹோட்டல் மற்றும் இரண்டு களியாட்ட விடுதிகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, 21 மற்றும் 46 வயதுக்குட்ட 78 பெண்கள் மற்றும் 10 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் தாய்லாந்தைச் சேர்ந்த 64 பேரும், வியட்நாமைச் சேர்ந்த 13 பேரும், நேபாளத்தைச் சேர்ந்த 4 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 3 பேரும், பங்களாதேஷைச் சேர்ந்த 3 பேரும் மற்றும்  இலங்கைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பேராக் மாநிலத் தலைநகரான ஈப்போ, தாய்லாந்து எல்லைக்கும் கோலாலம்பூருக்கும் இடையில் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் சோங்க்லாவில் உள்ள சடாவ் மாவட்டத்திலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தாய்லாந்தைச் சேர்ந்தவர்களின்  விபச்சார நடவடிக்கைகளை தடுக்கும்  இரண்டாவது பாரிய சுற்றிவளைப்பு இதுவாகும். கடந்த வெள்ளிக்கிழமை, மலேசிய தலைநகர் மற்றும் அண்டை நாடான சிலாங்கூர் மாநிலத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 22 தாய்லாந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை (12) விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். முன்னதாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர், தொடர்ந்து, சுன்னாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் நிலைய கட்டிட திறப்பு விழா, கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு மீன்பிடி சாதனங்கள் மற்றும் உலர் உணவுகள் விநியோக நிகழ்வு, தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அரச ஊழியர் குழுவிற்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். அவற்றினை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள புதிய வர்த்தக சேவை நிலைய திறப்பு விழா, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்பார்.

இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு பதிலாக புதிய திட்டத்தை நகர்த்தும் இந்தியா.

இலங்கையின் (Sri Lanka) பொருளாதாரத்தின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு புதிய கடன் அல்லது கடன் வரி (எல்ஓசி) திட்டங்களை இந்தியா நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அதற்குப் பதிலாக, மானியத் திட்டங்கள் மற்றும் இணைப்புத் திட்டங்களைப் போன்ற முதலீடுகளில் இந்தியா தமது கவனத்தைத் திருப்பும் என்று தெரியவந்துள்ளது மாஹோவில் இருந்து அனுராதபுரம் வரையிலான இலங்கை தொடருந்துக்கான சைகை விளக்கு அமைப்பை வடிவமைத்தல், நிறுவுதல், சோதனை செய்தல் மற்றும் இயக்குதல் என்ற தற்போதைய கடன் இந்த திட்டங்களில் முதன்மையானது. இந்த திட்டம் 14.90 மில்லியன்  அமெரிக்க டொலர்கள் கடன் வரியில் மேற்கொள்ளப்படுகிறது. எனினும் புதிய முடிவால் இதுபோன்ற செயல் திட்டங்கள் பாதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டப்படி இந்தியா, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தியை மானிய திட்டமாக மாற்றியுள்ளது.இதற்காக 60 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக இந்தியாயாவால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதும், தற்போது அது மானியமாக மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக, ஜப்பானும் நிறுத்தப்பட்ட 11 திட்டங்களை மீண்டும் தொடங்குவதாக அறிவித்தது, ஆனால் நாட்டில் நிலைமை திருப்திகரமாக மேம்படும் வரை எந்த புதிய யென் கடனுக்கும் ஒப்புதல் அளிக்கப்போவதில்லை என்று பின்னர் அறிவித்து விட்டது.

ருமேனியாவுடனான ஒப்பந்தம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம்.

பல்வேறு துறைகளில்  இலங்கை (Sri Lanka) மற்றும் ருமேனியாவுக்கு (Romania) இடையிலான ஒத்துழைப்பு திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட  இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கிணங்க, கல்வி, அறிவியல், கலாச்சாரம், வெகுஜன ஊடகம், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறைகளில் முதல் ஒத்துழைப்புத் திட்டத்திற்கான கட்சிகளின் விருப்பத்தை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் (Ali Sabry) ருமேனியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ​​ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. மேலும், இதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச புலனாய்வு பிரிவின் தகவலிற்கமைவாக யாழில் 17 பேர் கைது.

யாழ். (Jaffna) நெல்லியடி பகுதியில் பொலிஸாரினால்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (12.07.2024) அதிகாலை நெல்லியடி – துன்னாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரச புலனாய்வாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், இராணுவம் பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, நீதிமன்றால் உத்தரவிடப்பட்ட திறந்த பிடியாணைகள், பிடியாணைகள், சட்டவிரோத மதுபானமான   விற்பனையாளர்கள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் என 17 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் பருத்திதுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளனர்.

விடுதலை புலிகளின் குண்டுகள் தொடர்பில் – சபையில் கல்வி அமைச்சர் பகீர்…!

நாட்டில் ஏற்பட்டுள்ள பல சவால்களுக்கு மத்தியிலும் பரீட்சிக்களை நடத்தி காட்டியுள்ளோம் என கல்வி அமைச்சர் சுஷில் பிரேமா ஜெயந்த தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற பாராளுமன்ற உரையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 1991 நகர சபைக்கு நான் சென்றேன். 2001 ஆம் ஆண்டுதான் பாராளுமன்றத்துக்கு வந்தேன். அதையும் கூட தவறாக தான் சொன்னார்கள். நகர உறுப்பினராக அதே போல கோட்டை துணை மேயராக இருந்திருக்கின்றேன். அதைப் போல 5 வருடங்கள் மேல் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தேன். எந்த விதமான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை. அதை போல 2009 ஆம் ஆண்டு 9 மாதங்கள் தான் நான் கல்வி அமைச்சராக இருந்தேன். எதுவும் பெரிதாக என்னால் செய்ய முடியவில்லை. 2005 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரை கல்வி அமைச்சராக இருந்தேன். நாட்டில் யுத்தம் உக்கிரம நிலையில் இருந்தது. வடக்கு கிழக்கில் எந்த ஒரு பரீட்சையும் நாங்கள் நிறுத்தவில்லை. அதே போல தீவு பிரதேசங்களில் வினாத்தாள்களில் நாங்கள் உண்மையில் கடல் படையினரின் உதவியுடன் தான் நாங்கள் கொண்டு சென்றோம். அதே போல ltte குண்டு வெடித்து கொழும்பு புறக்கோட்டையில் டி.எஸ் சேனாநாயக்க கல்லூரியை சேர்ந்த 6 மாணவர்கள் கொல்லப்பட்டார்கள். அவ்வாறான சவால்களுக்கு மத்தியில் தான் நாங்கள் அமைச்சின் நடவடிக்கைகளை முன்னெடுத்து சென்றோம். இந்த முறை நான் இதனை பொறுப்பேற்கின்ற பொழுது அமைச்சரவை விலகியிருந்தது. ஜனாதிபதி கூட விலகியிருந்தார். பிரதமரின் அழைத்து அவருக்கு முன்னால் தான் நான் இதனை பொறுப்பேற்றேன். அதனை பொறுப்பேற்ற பொழுது அந்த நிறுவனத்தின் தலைவரின் ஆலோசனையின் பேரில் அவர்கள் செயற்பட்ட காரணத்தினாலேயே முன்னாள் ஜனாதிபதி பதவியை விட்டு விலக வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. 5 நாட்கள், 6 நாட்கள் பெற்றோல், டீசல் வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அரசியல் நிறுவன தலைவர்கள் ஒளிந்து கொண்டிருந்தார்கள். அதனுடைய நிறுவன தலைவர்கள் கூட ஒளிந்து கொண்டிருந்தார்கள். போராட்ட காரர்கள் அவருடைய நிறுவனத்துக்கு உள்ளே சென்றார்கள். நாங்கள் நேரடியாக இதனை கண்டோம். யாரும் இதனை பொறுப்பேற்று கொள்ள வேண்டிய இல்லாத சந்தர்ப்பத்திலே தான் இந்த அமைச்சை பொறுப்பேற்று கொண்டேன். இரண்டு வருடங்களுக்கு மேல் பொருளாதார பிரச்சினை, கொவிட் பிரச்சினை போன்றவற்றால் வீழ்ச்சிப்பாதையில் இருந்த கல்வியினை நாங்கள் உயர்த்தியிருக்கிறோம். என அவர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 17ம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதி.

எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதியொருவர் நியமிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படும் காலம் தொடர்பாக பாராளுமன்றத்தை ஒத்திப்போடுதல் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார். ஜனாதிபதித் தேர்தல் உட்பட சகல தேர்தல்களும் நிர்ணயிக்கப்பட்ட தினத்தில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்குத் அறிவித்துள்ளார்.

பேருந்தில் பயணித்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை யாழ்ப்பாணம் – பூநகரி 15 ஆம் கட்டை சந்திப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்திலிருந்து மல்லாவிக்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் சாவகச்சேரி பகுதியில் இருந்து ஆசிரியர் ஒருவர் ஏறியுள்ளார். இதன்போது பேருந்து பூநகரி பகுதியில் பயணித்துகொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறிய ஆசிரியர் பேருந்தின் பின்கதவால் கீழே விழுந்துள்ளார். சம்பவத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆசிரியர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.