கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரியலில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களை அடுத்து பாதாள உலகக் குழுவினரின் அட்டகாசம் தீவிரம் அடைந்துள்ளது.
கிளப் வசந்த படுகொலை செய்யப்படுவதை, கொலைத் திட்டத்தை செயல்படுத்தியதாக கூறப்படும் சஞ்சீவ புஸ்பகுமார அல்லது லொக்கு பெட்டி நேரலையில் பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதை அவர் தனது கைப்பேசி மூலம் நேரலையில் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கிளப் வசந்த குறித்த நிலையத்தை திறக்க வந்ததில் இருந்து சுட்டுக் கொல்லப்படும் வரை நேரலையாக காட்சிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை அத்துருகிரிய பச்சை குத்தும் நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட சுரேந்திர வசந்த பெரேரா எனப்படும் கிளப் வசந்தவின் சடலம் பொரளை மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சடலத்தை அங்கு வைக்கக் கூடாது என்றும் அப்படியிருந்தால் மலர்ச்சாலை வெடித்து சிதறும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பின் மூலம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த மலர் சாலையின் பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.