Search
Close this search box.
உலகம் முன்வைக்கும் புதிய சிந்தனைகள் புத்தரின் போதனைகளில்

பௌத்த மதத்திற்கும் நாம் தற்போது பயணித்துக்கொண்டிருக்கும் நவீன விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப உலகிற்கும் இடையில் பாரிய தொடர்பு இருப்பதாகவும், உலகம் எதிர்நோக்கும் எதிர்கால சவால்களை வெற்றிகொள்ளும் வழி புத்தரின் போதனைகளில் உள்ளடங்குவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

திரிபிடகம் உள்ளிட்ட பௌத்த தத்துவம், இலங்கை வரலாறு, நாகரிகம், உலகில் பௌத்தத்தின் பரவல் மற்றும் பாலி, கலாசாரம் மற்றும் பிற மொழிகள் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளக் கூடிய புதிய நிறுவனம் ஒன்றை இந்நாட்டில் நிறுவுவது குறித்து ஆலோசித்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வரலாற்றில் அநுராதபுரம் மகா விகாரை முன்னெடுத்த பணிகளை மீள ஆரம்பிப்பதே இதன் நோக்கமாகும். என்றும் தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று (08) இடம்பெற்ற இலங்கை அமரபுர மகா நிகாயவின் அமரபுர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

வண. வெலிதர, மஹகராவே ஞானவிமலதிஸ்ஸ தேரரின் மாபெரும் அர்ப்பணிப்பின் பின்னர் 1802 ஆம் ஆண்டு அமரபுர மகா நிகாய ஸ்தாபிக்கப்பட்டது. வண. மடிஹே பஞ்ஞாசீஹ, அக்கமஹா பண்டித வண. பலாங்கொட ஆனந்த மைத்ரி, வண. தவுல்தென ஞானீஸ்வர, வண. கொடுகொட தம்மாவாஸ, வண. தொடம்பஹல சந்தசிறி போன்றவர்கள் அமரபுர மகா நிகாயவை தலைமை தாங்கினர்.

222 வருடங்களாக புத்த சாசனத்திற்காக பெரும் பணியை ஆற்றிய அனைவரையும் நினைவுகூரும் வகையில் அமரபுர தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. சப்ரகமுவ அமரபுர சாமகிரி சங்க சபையினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கை அமரபுர மகா நிகாயவின் தலைவர், பதில் வண. கரகொட, உயங்கொட மைத்ரி மூர்த்தி மகாநாயக்க தேரர் நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் அமரபுர மகா நிகாயவை பிரதிநிதித்துவப்படுத்தும் 22 பீடங்களின் மகாநாயக்க தேரர்களும் பிரசன்னமாகியிருந்ததுடன் அவர்களுக்கு ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட்டு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கான பணியைப் பாராட்டி, அமரபுர பீடத்தின் அனைத்து தரப்பினரும் ஆசிர்வதித்து ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது. இதற்கு இணையாக, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சட்டத்தரணி நவீன் திஸாநாயக்கவுக்கு, இலங்கை அமரபுர மகா சங்க சபையின் தலைவர் வண. கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி தேரரால், ‘ஜனஹிதகாமீ சாசனபந்து’ என்ற கௌரவப் நாமம் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

அமரபுர மகா நிகாய ஸ்தாபிக்கப்பட்ட பின் , முன்னர் செயற்பட்டவர்களை நினைவு கூர்வது சம்பிரதாயமாக நடைபெறுபெறுகின்றது. அமரபுர நிகாய நவீன இலங்கையின் வரலாற்றின் ஒரு பகுதியாகும். இந்த அரமரபுர மகா நிகாய நமது மஹகராவே ஸ்ரீ ஞானவிமலதிஸ்ஸ தேரரின் முயற்சியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நாட்டில் ஏற்பட்ட பௌத்த மறுமலர்ச்சியையும், சிங்கள இயக்கத்தின் பலத்தையும் ஒருங்கிணைத்து, 20 ஆம் நூற்றாண்டில், மதம், அரசியல் மற்றும் சமூகம் என்ற அனைத்து துறையினதும் கருத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கையின் சமூகக் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டது.

அமரபுர மகா நிகாய ஆற்றிய சேவை மிகவும் முக்கியமானதாக கருதப்பட வேண்டும். இந்த நாட்டின் வரலாற்றை உருவாக்குவதற்கான ஒரு சக்தியாக அமரபுர நிகாயவைக் குறிப்பிடலாம்.

இன்று நாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகில் வாழ்கிறோம். இன்று உலகம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மாறிவிட்டது. குறிப்பாக உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவில் கவனம் செலுத்தும்போது நாமும் அதில் கவனம் செலுத்த வேண்டும்.

அடுத்த 05-10 ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கும் மனதிற்கும் இடையிலான தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். புத்த மதத்துக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் ஆரம்பிக்குமாறு தொழில்நுட்ப அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். மகா சங்கத்தினருடனும், பொது மக்களுடனும் கலந்துரையாடி இப்பணிகளைத் தொடர எதிர்பார்க்கின்றோம்.

இன்று நாம் ஒரு சமூகமாக முன்னேற வேண்டும். அதன்போது நாம் பின்வாங்க முடியாது. அனுராதபுர சகாப்தம் நமது நாட்டின் புகழ்பெற்ற சகாப்தமாக கருதப்படுகிறது. அநுராதபுர காலத்தில், மகாவிகாரை, ஜேதவனாராம மற்றும் அபயகிரிய போன்ற முக்கிய விகாரைகள் தோன்றின. அப்போது, பொது மக்கள், பௌத்த துறவிகளும் உட்பட அனைவரும் இந்தப் பிரிவெனாக்களில் கல்வி கற்றனர்.

மஹாசேய, ஜேதவானாராம, அபயகிரிய போன்ற பாரிய அற்புதங்களை நிர்மாணிக்கும் அறிவை எமது மக்கள் இப்பிரிவெனா கல்வியின் மூலம் பெற்றனர் என்பதைக் கூற வேண்டும். மேலும், தற்போதைய பொறியாளர்களையும் ஆச்சரியப்படுத்தும் நமது சிறந்த நீர்ப்பாசன கலாசாரமும், சீகிரியா போன்ற சிறந்த படைப்புகளும் பிரிவெனா கல்வி முறையால் உருவானது.

நவீன அறிவையும் இந்த சிறப்புகளையும் இணைத்துக்கொண்டு ஒரு நாடாக நாம் முன்னேற வேண்டும். இன்று, உலகின் கவனம் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் மீது குவிந்துள்ளது.

புத்தரின் போதனைகளில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் தேவையான அறிவு உள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாப்பது பற்றி சிறுவயதிலிருந்தே நாம் கற்றுக்கொண்டோம் இன்று உலகம் முன்வைக்கும் புதிய சிந்தனைகள் புத்தரின் போதனைகளில் இடம் பெற்றுள்ளன.

இன்று நாம் அறிவியலும் மதமும் ஒன்றாகச் சந்திக்கும் ஒரு கட்டத்தில் இருக்கிறோம். அரசாங்கம் என்ற வகையில், புத்தரின் போதனைகளுக்கும் திரிபிடகத்திலும் இன்றைய விஞ்ஞான உலகிலும் உள்ள உண்மைகளுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்வதில் நமது கவனம் குவிந்துள்ளது. இதை அரசாங்கத்தால் மாத்திரம் செய்ய முடியாது, அனைவரும் ஒன்றிணைந்து இப்பணிகளை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

மேலும், தற்போது மகாவிகாரையில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக பிரித்தானியாவில் உள்ள டர்கெம் பல்கலைக்கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

டர்கெம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கனிங்ஹெம் லும்பினி மகாமாயா தேவி விகாரையில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டார்.

மகாவிகாரையில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள அவருடன் கலந்துரையாடியுள்ளோம். இந்தச் செயற்பாடுகள் முடிவடைவதற்கு 20-25 வருடங்கள் தேவைப்பட்டாலும், எமது வரலாற்றை அடுத்த சந்ததியினருக்கு எடுத்துக் கூறும் வகையில் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன் யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அநுராதபுரம் முழுவதிலும் உள்ள அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடர்பாக அவரிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கிறேன். இதற்கு குறைந்தது 50 ஆண்டுகள் ஆகும் என்று நமது பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். எகிப்து அழிந்து 100 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அகழ்வாராய்ச்சி பணியை நிறைவடையவில்லை.

மேலும், அனுராதபுரம் மகா விகாரையின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கு புதிய நிறுவனமொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்க்கின்றோம். இது திரிபீடகம் உட்பட பௌத்த தத்துவத்தைப் படிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த செயற்பாடுகள் அதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை. மகாயான பௌத்தம் உட்பட அனைத்து தர்மங்களுக்கும் இங்கு கவனம் செலுத்தப்பட வேண்டும். புத்தர் போதித்த காலத்தில் இருந்த மதங்கள் அதாவது ஆலரா, காலாமா, உத்தகராம புத்ர தொடர்பில் ஆய்வு செய்ய வேண்டும். உலகில் தத்துவம், வரலாறு, நாகரிகம் மற்றும் பௌத்தத்தின் பரவல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

மேலும், பௌத்த தத்துவம் தொடர்பான மொழிகளிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். பாலி, கலாச்சாரம், சீனா உள்ளிட்ட மொழி அறிவு அவசியம். மேலும், இன்று உலகில் உள்ள ஏனைய மதங்களைப் பற்றிய அறிவைப் பெற வேண்டும். இன்னும் ஓராண்டில் இதற்கான புதிய நிறுவனத்தை உருவாக்குவது குறித்து தற்போது ஆலோசித்து வருகிறோம். பௌத்தத்திற்கும் நாம் வாழும் நவீன தொழில்நுட்ப உலகிற்கும் இடையே ஒரு பெரிய தொடர்பு உள்ளது. அந்த தொடர்பை புரிந்து கொண்டு முன்னேற வேண்டும்.

இலங்கை அமரபுர மகா நிகாயவின் தலைவர், பதில் மகாநாயக்க வண.கரகொட உயங்கொட மைத்ரி மூர்த்தி மகா நாயக்க தேரர்,இலங்கை அமரபுர மகா சங்கத்தின் முன்னாள் செயலாளர் அதி வணக்கத்திற்குரிய வெலிதர ஞானவிமலதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட முக்கிய மகாநாயக்க தேரர்கள் நினைச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அன்றிலிருந்து இன்றுவரை அமரபுர சங்க சபை எமது நாட்டுக்கு ஆற்றிவரும் சமயப் பணி மகத்தானது என்றே கூற வேண்டும். இந்நிகழ்விற்கு வருகை தந்த மகாநாயக்க தேரர்கள் உட்பட மகா சங்கத்தினரை நன்றியுடன் நினைவுகூருகின்றோம்.

உன்னத தர்மத்தை அழிக்கும் நபர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. விகாரையை கிராமத்தின் மையமாக கொண்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மேலும், அறநெறிப் பாடசாலைக் கல்வியை மேம்படுத்த பாடுபட வேண்டும்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Sharing is caring

More News