Search
Close this search box.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை தோண்டும் பணி மீள ஆரம்பம்: 40 எலும்புக்கூடுகள் இதுவரை மீட்பு

போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட வன்னியில் ஓராண்டுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழியின் அகழ்வுப் பணிகள், கடந்த எழு மாதங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளமையால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் எதிர்வரும் பத்து நாட்களுக்கு அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படாத, சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் பகுதிகளில் நாளை முதல் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் கனகசபாபதி வாசுதேவ இன்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

“கொக்குத்தொடுவாய் இதுவரை காலமும் போதிய நிதியுதவி இல்லாமை காரணமாக காலம் தாழ்த்தப்பட்ட அகழ்வுப் பணியானது போதிய நிதி ஒதுக்கீட்டின் பின்னர் இன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படுவதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரையில் 40 மனித எலும்புக்கூடுகள் முற்றாகவும் பகுதியளவிலும் மீட்கப்பட்ட நிலையில் இன்று பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுவரை அகழ்ந்து எடுத்த பகுதிகளைத் தவிர மிகுதி பகுதியில் மனித எலும்புக்கூடுகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பகுதி துப்புரவு செய்யப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் அகழ்வுப் பணி தொடரும்.” என்றார்.

 

கடந்த நவம்பர் மாதம் 29ஆம் திகதி அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நிலத்தடி ஸ்கேன் பரிசோதனைக்கு அமைய, முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதான வீதிக்கு கீழும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

குறித்த பகுதியின் அகழ்வு பணிக்காக நாளை மாற்று வீதி தயார்படுத்தப்படும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை இன்று உறுதியளித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

40 எலும்புக்கூடுகள் முழுமையாகவும், பகுதியளவிலும் எடுக்கப்பட்டுள்ள கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் அகழ்வுப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கு, நிபுணர் குழு கோரிய நிதி ஒதுக்கீட்டிற்கு நிதி அமைச்சு அனுமதி வழங்காத காரணத்தினால் காலவரையறையின்றி அந்த பணிகள் தாமதமாகியிருந்தன.

கடந்த ஏப்ரலில் எதிர்காலப் பணிகளுக்கு ஒரு கோடியே 37இலட்சம் ரூபாய் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டது. குறித்த தொகையை மீள்பரிசீலனை செய்யுமாறு நீதி அமைச்சினால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம், கோரப்பட்ட 97 இலட்சம் ரூபாவானது எழுத்து மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் மயில்வணகம் செல்வரட்ணம் கடந்த மே மாதம் உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டுள்ள மனித உடல்கள் தொடர்பான மேலதிக தடயவியல் பரிசோதனைகளுக்கு தேவையான பணம் கிடைக்குமா என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் இல்லை.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அண்மைய அறிக்கையானது, இலங்கையில் உள்ள பாரிய புதைகுழிகளை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அடையாளம் காணவும், பாதுகாக்கவும் மற்றும் விசாரணை செய்யவும் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

கொக்குத்தொடுவாய் விசாரணைக்கு முன்னோடியாக இருந்த தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ, பாரிய புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகள் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் சட்டவிரோதமாக புதைக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களின் எலும்புகள் என மார்ச் மாதம் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது அவரது அனுமானமாகும்.

2023ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில், கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்திலிருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில், நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய்களை அமைப்பதற்காக நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த போது, மனித உடல் உறுப்புகள் மற்றும் ஆடைத் துண்டுகள் தற்செயலாக வெளிப்பட்டன.

Sharing is caring

More News