போலி தங்கத்தைப் பயன்படுத்தி 19,670,000 ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மோசடி தொடர்பில் பதுளையில் (Badulla) உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் தங்கப் பொருட்களை அடமானப் பிரிவின் அதிகாரி ஒருவரை பதுளை காவல்துறை பிரிவின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த தனியார் நிதி நிறுவன மேலாளர் செய்த முறைப்பாட்டின் பேரில், காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி, சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 41 போலி நகைகளான மாலைகள், மோதிரங்கள், வளையல்கள், பென்டன்ட்கள் என்பன காணப்பட்டதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிதி நிறுவனத்திற்கு பல்வேறு நபர்கள் வந்து நகைகளை அடகு வைத்த போது, சந்தேக நபர் அவர்களிடம் போலி ஆவணம் தயாரித்து, நிகழ்நிலை மூலம் போலி நகைகளை இறக்குமதி செய்து உண்மையான தங்க பொருட்களை அடகு வைத்து பணம் பெற்றது தெரியவந்துள்ளது.
அத்துடன், அடகு வைக்கப்பட்ட நகைகள் தொடர்பான வட்டியை சந்தேகநபர் அதன் உரிமையாளர்களின் பெயரில் செலுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.