நாமல் கருணாரத்ன உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவிற்கு எதிராக இரண்டு நீதிமன்றங்கள் உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.
இன்று (03) கொழும்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் பாற்பண்ணையாளர்களை பாதுகாக்கும் மத்திய நிலையம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்தவுள்ள போராட்டம் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாமல் கருணாரத்ன, டி.பி.சரத், சுசந்த குமார, சுமித் அத்தநாயக்க, பண்டார ரம்புக்வெல்ல, சோசிறி ரணசிங்க, பால் பண்ணையாளர்களைப் பாதுகாக்கும் அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் நிலந்த சில்வா, பால் பண்ணையாளர்களைப் பாதுகாக்கும் மத்திய நிலையத்தின் செயலாளர், உள்ளிட்டவர்கள் பல வீதிகளில் பிரவேசிப்பதற்கு தடை விதித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஓல்கெட் மாவத்தை டெலிகொம் சந்தியிலிருந்து செராமிக் சந்தி வரையிலான வீதியையும், செராமிக் சந்தியிலிருந்து என்எஸ்ஏ சுற்றுவட்ட வீதி வரையும், , என்எஸ்ஏ சுற்றுவட்டத்திலிருந்து சாரணர் மாவத்தை வரையிலான காலி வீதி வரையும் காலி வீதி சுற்று வட்டத்தையும் மறிக்க வேண்டாம் என ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி மற்றும் ஜனாதிபதி மாளிகையிலும் மனுக்களை வழங்கவும் கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் பொறுப்பான அரச அதிகாரியின் முறையான அனுமதியுடன் மட்டுமே நுழைவதற்கு தடையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோதமாக நடந்து கொள்ளாமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான அடிப்படை உரிமையில் நீதிமன்ற உத்தரவு எந்தவொரு தடையையும் ஏற்படுத்தாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.