Search
Close this search box.
யாழ்ப்பாணத்தை சரத் பொன்சேகாவிடம் ஒப்படைத்த ரணில்

யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிடம் இருந்து  இலங்கை இராணுவம் தோல்விகளை சந்தித்தபோது யாழ்ப்பாணத்தை சரத் பொன்சேகாவிடம் ஒப்படைத்தைத்தேன் எனவும் அதுவே எமது போர் வெற்றிக்கு காரணம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவினால் “இராணுவ தளபதி தேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி – இந்த யுத்தம் அடுத்த தளபதி வரையில் நீடிக்க இடமளியேன்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழா நேற்று (28) கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கில் நடைபெற்றது.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”பீல்ட் மார்ஷல் அந்தஸ்த்தை சரத் பொன்சேகா மட்டுமே வகிக்கிறார். அவர் யுத்த சவால்களை வெற்றிக்கொண்ட அதேநேரம் அதற்கு வெளியில் அரசியல் சவால்களுக்கும் முகம்கொடுத்திருந்தார்.

யுத்த காலத்தில் ஜெனரல் சிசில் வைத்தியரத்ன ஊடாகவே இவரை நான் அறிந்துகொண்டேன். ஜெனரல் சிசில் வைத்தியரத்ன என்னோடு சமீபமாக பழகியவர். இந்த அதிகாரிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது அதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுக்குமாறு சிசில் வைத்தியரத்ன கூறினார்.

யுத்தம் ஆரம்பித்த காலத்திலும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் அரசாங்கத்திலிருந்த நான் யுத்தத்தில் பங்கெடுத்திருந்த பெரும்பாலான அதிகாரிகளை அறிவேன். அப்போது பல்வேறு சிறந்த அதிகாரிகள் உருவானதோடு அவர்களின் வரிசையில் சரத் பொன்சேகாவுக்கு சிறந்த இடம் காணப்பட்டது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஜயசிக்குரு போராட்டம் தோல்வியை தழுவியதால் இராணுவம் கைப்பற்றிய பலவற்றை இழக்க நேரிட்டது. அந்த நேரத்தில் நான் பிரதமராக பதவி வகித்ததோடு, யாழ்ப்பாணத்தை யாரிடம் கையளிப்பது என்ற கேள்வி காணப்பட்டது.

அப்போது பலர் இறந்து போயிருந்ததோடு, காயங்களுக்கும் உள்ளாகியிருந்ததால் படையினர் எண்ணிக்கை குறைந்திருந்தது. யாழ்ப்பாணத்துக்கான படைப்பிரிவொன்று அவசியமென சிலர் கூறினர்.

அப்போது நான் சரத் பொன்சேகாவிடம் யாழ்ப்பாணத்தை ஒப்படைப்போம் என இராணுவ தளபதியிடம் கூறினேன். அதன்படியே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அவர் வீழ்ந்த இடத்தில் எழுந்து யுத்த வெற்றியை நோக்கி நகர்ந்தார். அதற்காக கஷ்டமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது.

யுத்தம் என்பது கிரிக்கட் போட்டியை போன்றதல்ல. உயிரிழப்புக்கள் ஏற்படும். சொத்துக்கள் இழக்கப்படும். அதற்கு மத்தியிலும் யுத்தத்தை வழிநடத்திச் செல்லும் வல்லமை அவரிடம் இருந்தது. உலகத்தில் மிக் மோசமான யுத்தமொன்றுக்கே நாம் முகம்கொடுத்தோம்.

மற்றைய நாடுகளில் இன்றும் அவ்வாறான யுத்தங்கள் காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தான் யுத்தம் இலங்கைக்கு முன்னதாக ஆரம்பமானது. அந்த வகையில் சரத் பொன்சேகா தனது பொறுப்பை சரிவர செய்திருக்கிறார்” என்றார்.

Sharing is caring

More News