சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகை மற்றும் பணத்தை மோசடி செய்த முகாமையாளர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹட்டன் மல்லிகைப்பூ சந்தி பகுதியில் தனியார் தங்க நகை அடகு கடை ஒன்றில் பணிபுரிந்த முகாமையாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசேட குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நேற்று (26) ஹட்டன் நீதவான் எம்.பறூக்தீனிடம் ஆஜர்படுத்திய பின்னர், அவரை ஜூலை 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேகநபர் அடகுக் கடையின் முகாமையாளராக பல வருடங்களாக கடமையாற்றி வந்ததாகவும், அடகுக் கடையின் உரிமையாளர் மூன்று மாதங்களுக்கு வெளிநாட்டிற்குச் சென்று மீண்டும் நாடு திரும்பிய நிலையில், அடகுக் கடையில் அடகு வைக்கப்பட்ட நகைகள் மற்றும் பணத்தைச் சோதனையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அடகுக்கடையில் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் காணாமல் போயிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அடகுக்கடையின் உரிமையாளர், முகாமையாளருக்கு எதிராக ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசேட குற்ற விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதற்கமையவே சந்தேகநபரான முகாமையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.