வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் மக்கள் குடிமனைக்குள் நாய்களுக்கான காப்பகம் ஒன்றினை பெண் ஒருவர் அமைத்து வரும் நிலையில் கிராம மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
குறித்த காப்பகத்திற்கு முன்னால் இன்று (27.06) காலை திரண்ட கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். எனினும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் பொது மக்களுடன் கலந்துரையாடி முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தனர்.
நோர்வே நாட்டில் இருந்து வந்துள்ள பெண் ஒருவர் வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் மக்கள் குடிமனைகளின் மத்தியில் உள்ள வெற்று காணி ஒன்றில் நாய்களுக்கான காப்பகம் ஒன்றினை அமைத்து வருவதுடன், தற்போது கட்டக்காலியாக வீதிகளில் திரிந்த 42 நாய்களை அக் காப்பகத்தில் தங்க வைத்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த காப்பகத்தினால் அப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், குடிமனைக்குள் நாய்கள் காப்பகத்தை அமைக்க யார் அனுமதி கொடுத்தது எனவும் தெரிவித்து அக் காப்பகத்தை மக்கள் இல்லாத பகுதியில் அமைக்குமாறு கோரி அக் கிராம மக்கள் காப்பகம் முன் ஒன்று கூடினர்.
அப்பகுதிக்கு வருகை தந்த வவுனியா பொலிசார் மற்றும் மகறம்பைக்குளம் பொலிசார் பொது மக்களுடன் கலந்துரையாடியதுடன், காப்பகத்தையும் பார்வையிட்டனர். அத்துடன் காப்பக உரிமையாளரிடம் காப்பகம் அமைப்பதற்கான அனுமதிகளை கேட்டிருந்தனர். எனினும் காப்பக உரிமையாளர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மற்றும் சுகாதார பிரிவினர், கால்நடை வைத்தியர் ஆகியோரின் அனுமதியை பெறவில்லை என்பது இதன்போது தெரிவய வந்தது. இதனையடுத்து புதிதாக நாய்களை கொண்டு வருவதை நிறுத்துமாறு அறிவுறுத்திய பொலிசார், முறையான அனுமதி பெற்ற பின் நடத்துமாறு உரிமையாளருக்கு தெரிவித்தனர்.
பொதுமக்கள் நாய் காப்பகத்திற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்ததுடன், வவுனியா பிரதேச செயலகம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பவற்கும் முறைப்பாடு செய்து கடிதம் வழங்கியுள்ளனர்