இலங்கையின் கடற்பரப்பில் சுமார் 200 கிலோ கிராம் போதைப்பொருட்களுடன் பயணித்தபோது கைப்பற்றப்பட்ட படகின் சொந்தக்காரர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கட்டுநாயக்க(Katunayake) விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டில் இருந்து தப்பித்துச் செல்ல முயற்சித்தபோதே அவர் இன்று(26.06.2024) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் 200 கிலோகிராம் போதைப்பொருளை ஏற்றிய உள்ளூர் பல நாள் கடற்றொழில் இழுவை படகு கைப்பற்றப்பட்டதுடன் 06 பேரை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை நேற்று(25) தெரிவித்திருந்தது.
இலங்கைக்கு மேற்கே சுமார் 121 கடல் மைல் தொலைவில் இலங்கையின் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இந்த படகு இடைமறிப்பு செய்யப்பட்டதாகவும் கடற்படை அறிவித்திருந்தது.
இதனையடுத்து போதைப்பொருட்கள் ஏற்றப்பட்ட படகுடன் கைது செய்யப்பட்ட 6 பேர், இலங்கையின் கரையை நோக்கி அழைத்து வரப்பட்டு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்திருந்தது.
இந்தநிலையிலேயே கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட குறித்த போதைப்பொருள் ஏற்றப்பட்ட படகின் உரிமையாளர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் இன்று விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.