Search
Close this search box.
சர்வதேச நாணய நிதயத்தின் நிபந்தனைகளால் தயங்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள்

ஜனாதிபதித் தேர்தலை எதிர்நோக்கவுள்ள இலங்கைத்தீவு அதற்கான ஆயத்தங்களிலும் ஈடுபட்டு வருகிறது.

இம்முறை நடத்தப்படவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் உறுதியாக போட்டியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

எனினும், இவர்களுள் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் நாட்டை முன்னேற்றமான பாதையில் கொண்டு செல்வது கடினமாக அமையுமா என்ற கேள்வி தற்போது அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் தொகையை வழங்கும் போது மேற்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் ஒரு போதும் மீள மாற்றியமைக்கப்படாது என்பது மேற்குறிப்பிட்ட நிலைப்பாட்டுக்கான காரணமாக அமைந்துள்ளது.

இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இரு கட்சிகளினதும் வேட்பாளர்கள் தயக்கத்தில் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

சில சந்தேர்ப்பங்களில் பதவி கிடைத்தால் தன்னுடைய தலைவர்களுக்கு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியமா என்ற கேள்வி கட்சிகளுக்குள்ளும் எழுந்துள்ளதாக அறியப்படுகின்றது.

சிந்தித்து செயற்பட வேண்டிய வாக்காளர்கள்

இவ்வாறான நிலையில் பொது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ஒருபோதும் மாற்றப்படாது என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனை மாற்றுவதாகவும் சட்டமூலங்கள் கொண்டு வருவதாகவும் எதிர்க்கட்சிகள் பொதுமக்களுக்கு கொண்டுவரும் உறுதிகள் நம்பத்தகுந்தவையா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

“அரகலய” போராட்டத்தின் பின்னர் கூட பொதுஜன பெரமுனவின் கீழ் இருக்கும் இந்த அரசாங்கம் மாறுபட வேண்டும். அதாவது மீண்டும் ஒரு “அரகலய” போராட்டத்தை உருவாக்காத வகையில் நாட்டின் தலைமைத்துவம் இருக்க வேண்டிய வகையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை பயன்படுத்த வேண்டும்.

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டது என்பதால் திறமை இல்லாதவர்களுக்கு இடம் வழங்காமல் பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடனை மீள செலுத்தக் கூடிய வகையில் மீண்டும் வரிசை யுகம் உருவாகாத வகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் தலைவரை உருவாக்குவது அனைத்து தேர்தல் வாக்காளர்களினதும் கடமையாக உள்ளது.

அப்போது காணப்பட்ட பல சிக்கல்களிலிருந்து தற்போது பொதுமக்கள் விடுவிக்கப்பட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

ஆகவே, வாக்களிக்கும் போது வாக்காளர்கள் அதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும், நாட்டின் தற்போதைய நிலைமையின் படி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டை பொறுப்பேற்கும் தலைவருக்கு நாட்டை தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமா என்ற தயக்கம் கட்சிகள் மத்தியில் காணப்பட்டாலும் கூட, ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான தயக்கம் வாக்காளர்களுக்கு இருக்க கூடாது எனவும் பல அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Sharing is caring

More News