ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில், நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இலவச உணவு வழங்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகின்றார்.
அந்தவகையில் நேற்றையதினம்(12) யா/ சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் ஆயிரத்து 200 மாணவர்கள் கல்வி கற்கின்றீர்கள். 3 மாணவர்கள் மருத்துவத்துக்கும், 2 மாணவர்கள் பொறியியல் பீடத்துக்கும், 5 மாணவர்கள் முகாமைத்துவ பீடத்துக்கும் தெரிவாகியுள்ளனர்.
விக்ரோரியாக் கல்லூரிக்கான பேருந்து நான் வழங்கிய 88 ஆவது பேருந்தாக உள்ளது.
இலவசக் கல்வியை வளர்ச்சியடையச் செய்ய இது முக்கியமான காரணமாக உள்ளது.
சிலர் எனது இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கின்றார்கள். ஏனென்றால் அவர்களால் இதைச் செயற்படுத்தமுடியாது.
இலங்கை வரலாற்றில் எதிர்கட்சியால் நாடு அபிவிருத்தி செய்யபட்டமை எமது காலத்திலேயே ஆகும்.
அதேவேளை, எனது ஆட்சியில் நாட்டிலுள்ள 10ஆயிரத்து 906 பாடசாலைகளுக்கும் இலவச உணவை வழங்குவேன் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.