உறங்கிக் கொண்டிருந்த படுக்கையில் வைத்து பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (11) அதிகாலை ஹொரணை, மேவனபலான பிரதேசத்தில் உள்ள சிரில்டன் வத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் அவரது சகோதரியுடன் குறித்த வீட்டில் வசித்த வந்துள்ளார்.
மூன்று வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்த பெண்ணின் வீட்டில் தங்குவதற்காக சகோதரி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு 7.30 மணியளவில் இரு பெண்களும் கதவுகளை மூடிக்கொண்டு உறங்கச் சென்றுள்ளனர். பின்னர் அதிகாலை 1.45 மணியளவில் கறுப்பு முகமூடி அணிந்திருந்த இனந்தெரியாத இருவர் வீட்டிற்கு வந்துள்ளனர்.
இறந்த பெண்ணின் சகோதரியின் கைகளை கட்டி வாயில் துணியை திணித்து அறையில் வைத்துவிட்டு இறந்த பெண் தூங்கும் அறைக்கு சென்றுள்ளனர்.
சிறிது நேரத்தில் உயிரிழந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
பின்னர், உயிரிழந்த பெண்ணின் சகோதரி, கைகள் கட்டப்பட்ட நிலையில், பக்கத்து வீட்டுக்குச் சென்று நடந்தவற்றை கூறியுள்ளார்.
பின்னர், அக்கம் பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளதை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.
உயிரிழந்த பெண்ணின் நகைகள் மற்றும் பணத்தை சந்தேகநபர்கள் எடுத்துச் செல்லவில்லை எனவும், ஆனால் அவரது அறையில் இருந்த அலமாரியை உடைத்து ஆடைகளுக்கு தீ வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையாளிகள் வீட்டிற்குள் எப்படி நுழைந்தார்கள் என்பது இதுவரை வெளிவராத நிலையில், இந்த கொலையின் நோக்கம் என்ன என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.