Search
Close this search box.

நாட்டின் எதிர்கால நலன் கருதி அனைத்து தரப்புகளும் ஒன்றிணைய வேண்டிய காலம்…!கரு ஜயசூரிய வலியுறுத்து…!

நாட்டின் எதிர்கால நலன் கருதி அனைத்து தரப்புகளும் ஒன்றிணைய வேண்டிய காலம் தற்போது ஏற்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின்  தலைவருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு மற்றும் தெற்கின் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தவும், இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்ட மோதல்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கும், அனைத்து பிரஜைகளுக்கும் கண்ணியத்துடன் வாழக்கூடிய உரிமையை வழங்குவதும், இந்த பிரச்சனைகளை எதிர்கால தலைமுறைகளுக்கு விட்டு வைக்காமல் இருப்பதும் எமக்குள்ள பாரிய கடமையாகும். ஆகையால் இவ்விடயம் தொடர்பில்  கவனம் செலுத்தி அதற்கான தலையீடுகளை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் மேற்கொள்ள வேண்டும் என்பது எமது நம்பிக்கையாகும். மேலும் 09  ஆவது பாராளுமன்றத்தின் கால எல்லை தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு கௌரவ ஜனாதிபதி அவர்கள் உள்ளிட்ட ஆளும் கட்சிக்கும், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிக்கும் சமூக நீதிக்கான  தேசிய இயக்கம் வேண்டுகோள் விடுக்கின்றது. 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதின் முக்கியத்துவம் தொடர்பில் அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி அவர்களும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க , மஹிந்த ராஜபக்ஷ  ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது பாராளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்பட்டு வரும் அதிக அளவிலான உறுப்பினர்களும் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட எண்ணி இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களும் இந்த கருத்தில் உறுதியாக இருப்பது எமக்கு தெரியும். இது போன்ற முற்போக்கான அபிலாசைகளை பாராட்டபட வேண்டும். இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொள்கையில் தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து தாமதமின்றி வட்டமேசை மாநாடை கூட்டி  இவ்விடயங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறோம். மேலும் தமிழ் டயஸ்போராவில் குறிப்பிடத்தக்க குழுவினர் இதற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதும் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். இவ்விடயத்திற்கு நாட்டின் முதன்மை தரப்புகள் ஆதரவு தெரிவித்திருப்பது பாராட்டத்தக்கது. மேலும் இந்த பேச்சு வார்த்தைகளை புறக்கணிக்காமல் இருப்பதற்கான கடமை தமிழ் அரசியல் கட்சிகளுக்கு போன்றே அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது. குறுகிய அரசியல் காரணங்களுக்காக இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால்  துரோகிகள் என்று எதிர்கால சந்ததியினர் குற்றச்சாட்ட வழி வகுக்கும். ஆகையால் ஜனாதிபதி உள்ளிட பாராளுமன்றம் உன்னத நோக்கத்துடன் உடையத்தில் தலையிட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

இலங்கையில் அதிகரித்த டெங்கு அபாய வலயங்கள்..!

நிலவும் மழையுடன் கூடிய வானிலையுடன் டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இம்மாதம் கடந்த 11 நாட்களில் மாத்திரம் 971 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, இதுவரை நாடளாவிய ரீதியில் 25,891 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த காலப்பகுதியில் 9 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கையும் 14 ஆக அதிகரித்துள்ளது. அதிக டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், 5,624 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர், அதிக டெங்கு நோயாளர்கள் யாழ்.மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், 3,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 2,487 பேரும், கண்டி மாவட்டத்தில் 1,986 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 1,441 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 1,372 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்தில் சிக்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம்..!

மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதான வீதியின் தளங்குடா பகுதியில் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றதாக கத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம், வீதியை விட்டு விலகி, மின்தூண் ஒன்றில் மோதுண்டுள்ளது. விபத்து நேரும் சந்தர்ப்பத்தில் வாகனத்தில் சிவமோகன் உள்ளிட்ட மூவர் பயணித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்த நபர், தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதுடன், மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உயர்தரப் பரீட்சை நடத்துவது குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார அத்துடன் 2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை  செப்டெம்பர் மாதம் நடத்த முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். மேலும் பிள்ளைகளின் நேரத்தை வீணடிப்பதைத் தடுப்பதற்காக பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தரக் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் பல்கலைக்கழக நுழைவை விரைவுபடுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பெண் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை!

உறங்கிக் கொண்டிருந்த படுக்கையில் வைத்து பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக  ஹொரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (11) அதிகாலை ஹொரணை, மேவனபலான பிரதேசத்தில் உள்ள சிரில்டன் வத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அவரது சகோதரியுடன் குறித்த வீட்டில் வசித்த வந்துள்ளார். மூன்று வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்த பெண்ணின் வீட்டில் தங்குவதற்காக சகோதரி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு 7.30 மணியளவில் இரு பெண்களும் கதவுகளை மூடிக்கொண்டு உறங்கச் சென்றுள்ளனர். பின்னர் அதிகாலை 1.45 மணியளவில் கறுப்பு முகமூடி அணிந்திருந்த இனந்தெரியாத இருவர் வீட்டிற்கு வந்துள்ளனர். இறந்த பெண்ணின் சகோதரியின் கைகளை கட்டி வாயில் துணியை திணித்து அறையில் வைத்துவிட்டு இறந்த பெண் தூங்கும் அறைக்கு சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் உயிரிழந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. பின்னர், உயிரிழந்த பெண்ணின் சகோதரி, கைகள் கட்டப்பட்ட நிலையில்,  பக்கத்து வீட்டுக்குச் சென்று நடந்தவற்றை கூறியுள்ளார். பின்னர், அக்கம் பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளதை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது. உயிரிழந்த பெண்ணின் நகைகள் மற்றும் பணத்தை சந்தேகநபர்கள் எடுத்துச் செல்லவில்லை எனவும், ஆனால் அவரது அறையில் இருந்த அலமாரியை உடைத்து ஆடைகளுக்கு தீ வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கொலையாளிகள் வீட்டிற்குள் எப்படி நுழைந்தார்கள் என்பது இதுவரை வெளிவராத நிலையில், இந்த கொலையின் நோக்கம் என்ன என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பற்ற புகையிரத கடவையினை புனரமைக்ககோரி போராட்டம்

கிளிநொச்சி பச்சிலை பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இந்திராபுரம் பிரதான வீதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையினை பாதுகாப்பான புகையிரதக் கடவையாக புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள் குடியேற்ற கிராமமான முகமாலை இந்திராபுரம் மக்கள் கடந்த 2000 ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து. கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமது சொந்த இடங்களில் குடியேறியுள்ளனர். இந்த நிலையில் குறித்த பிரதேசத்தில் உள்ள புகையிரத கடவையானது இதுவரை புனரமைக்கப்படாமலும் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையாகவும் காணப்படுவதனால் இதனை பாதுகாப்பான நிரந்தரமான கடவையை அமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்துள்ளனர். இந்த பிரதேசத்தில் 350 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் குறித்த பிரதேசங்களில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு வருவதனால் மாற்றுவழிப்பாதை எதனையும் பயன்படுத்த முடியாது உள்ளதாகவும் பிரதேச மக்கள் இவ்வீதியையே பயன்படுத்த பயன்படுத்த வேண்டிய நிலை இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே குறித்த பாதையை பாதுகாப்பான புகையிரதக் கடவையாக அமைத்து தருமாறு கோரி இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதுடன் புகையிரத திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றிற்கு மனுக்களையும் கையளித்துள்ளனர்.

யாழில் தமிழரசு கட்சியினரை சந்தித்தார் சஜித்பிரேமதாச

யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தலைமையிலான குழுவினர் இன்று திங்கட்கிழமை தமிழரசு கட்சியினரை சந்தித்தனர். இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் குறித்த சந்திப்பு திங்கட்கிழமை (10) இரவு இடம்பெற்றுள்ளது. கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் கட்சியின் சிரேஸ்ட தலைவர் சிவிகே சிவஞானம், நிர்வாக செயலாளர் குலநாயகம் ஆகியருடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தலைமையிலான குழுவினர் சந்திப்பை மேற்கொண்டனர்.

மாவா விற்பனை அதிகரிப்பு ; நடவடிக்கை எடுக்காத வவுனியா பொலிஸார்

வவுனியாவில் மாவா எனப்படும் போதைப்பொருளை கலந்த பாக்கு விற்பனை அதிகரித்து வருவதாகவும் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கி இருந்த போதிலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர் . வவுனியா பூந்தோட்டம் வீதியில் தென்னந்தோட்டத்தடி மற்றும் பூந்தோட்டம் சாந்தி, கற்குழி, தேக்கவத்தை உட்பட வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான மாவா எனப்படும் போதை கலந்த பாக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கியிருந்த போதிலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதமையால் குறித்த பகுதிகளில் இளைஞர் குழுக்கள் அதிகளவில் கூடி நின்று குறித்த போதை பார்க்கினை கொள்வனவு செய்து உண்பதை அவதானிக்க முடிந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் . மேலும் , போதை ஒழிப்பு தொடர்பான யுக்திய நடவடிக்கை இலக்கங்களுக்கு தகவல் வழங்கிய போதிலும் பொலிஸார் இவ்வாறான விடயங்களை கண்டும் காணாது இருப்பதாகவும் மக்கள் சுட்டிகாட்டியுள்ளனர் .

விடுதியில் தனியாக இருந்தவர் சடலமாக மீட்பு..! மரணத்தில் மர்மம்?

பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் நபர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (11) காலை 9 மணியளவில் சடலம் மீட்கப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விடுதியில் பணிபுரிந்து வந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் விடுதியில் தனியாக இருந்ததாகவும், அவர் அந்த இடத்தை கவனித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் ஆறு மாதங்களில் 153 பொலிஸார் மீது தாக்குதல்

இவ்வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் இலங்கைத்தீவின் ஒன்பது மாகாணங்களில் பணியாற்றும் ஐந்து பொலிஸ் பரிசோதகர்கள் ,13 உப பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட 153 பொலிஸார் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களுள், 81 சார்ஜன்ட்களும் 54 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 143 பேர் உத்தியோகபூர்வமாக பொலிஸ் கடமைகளில் ஈடுபடும் போது தாக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பதியத்தலாவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை அவரது மனைவி எனக் கூறப்படுபவர் அவரது வீட்டில் வைத்து தாக்கிய சம்பவத்தை தவர்த்து , ஏனைய ஒன்பது சம்பவங்களும் அவர்களது வீடுகளுக்குச் செல்லும் வழியிலும் மற்றும் ஏனையவை கடமையில் இல்லாதபோதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாகும். இவ்வருடத்தின் , இந்த ஆறு மாதங்களில் கொழும்பை மையப்படுத்திய மேல் மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 28 சம்பவங்களில் 31 பேர் தாக்கப்பட்டுள்ளனர். 13 சார்ஜன்ட்கள், 14 கான்ஸ்டபிள்கள், மூன்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் ஒரு உப பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இவர்களில் உள்ளடங்குவர். அடுத்தபடியாக வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அதிக எண்ணிக்கையான பொலிஸார் தாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் இரு மாகாணங்களிலும் சுமார் 12 முறைப்பாடுகள் என 24 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. கண்டியை மையமாகக் கொண்ட மத்திய மாகாணத்தில் 10 தாக்குதல் சம்பவங்களும், கிழக்கு மாகாணத்தில் 8 தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட வடக்கு மாகாணத்தில் 5 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த மாகாணத்தில் ஒரு உப பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஒரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிளும் தாக்கப்பட்டனர். இதேவேளை, கடமைகளை செய்யும்போது அதிகாரிகளை தாக்கும் நபர்களைக் கைது செய்து சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனைத்து பொலிஸ் மா அதிபர்களுக்கும் அறிவித்துள்ளார். இதேவேளை, பணிக்கு புறம்பான சம்பவங்கள் காரணமாக தாக்கப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிடியாணை கைதுகள், சட்ட அமுலாக்க போதைப்பொருள் சோதனைகள் மற்றும் பிற கடமைகளின்போதும் பலர் கடமையில் தாக்கப்பட்டுள்ளனர்.