Search
Close this search box.
இலங்கையில் ஆறு மாதங்களில் 153 பொலிஸார் மீது தாக்குதல்

இவ்வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் இலங்கைத்தீவின் ஒன்பது மாகாணங்களில் பணியாற்றும் ஐந்து பொலிஸ் பரிசோதகர்கள் ,13 உப பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட 153 பொலிஸார் தாக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுள், 81 சார்ஜன்ட்களும் 54 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் உள்ளடங்குகின்றனர்.

இவர்களில் 143 பேர் உத்தியோகபூர்வமாக பொலிஸ் கடமைகளில் ஈடுபடும் போது தாக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, பதியத்தலாவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை அவரது மனைவி எனக் கூறப்படுபவர் அவரது வீட்டில் வைத்து தாக்கிய சம்பவத்தை தவர்த்து , ஏனைய ஒன்பது சம்பவங்களும் அவர்களது வீடுகளுக்குச் செல்லும் வழியிலும் மற்றும் ஏனையவை கடமையில் இல்லாதபோதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாகும்.

இவ்வருடத்தின் , இந்த ஆறு மாதங்களில் கொழும்பை மையப்படுத்திய மேல் மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

28 சம்பவங்களில் 31 பேர் தாக்கப்பட்டுள்ளனர். 13 சார்ஜன்ட்கள், 14 கான்ஸ்டபிள்கள், மூன்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் ஒரு உப பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இவர்களில் உள்ளடங்குவர்.

அடுத்தபடியாக வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அதிக எண்ணிக்கையான பொலிஸார் தாக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் இரு மாகாணங்களிலும் சுமார் 12 முறைப்பாடுகள் என 24 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

கண்டியை மையமாகக் கொண்ட மத்திய மாகாணத்தில் 10 தாக்குதல் சம்பவங்களும், கிழக்கு மாகாணத்தில் 8 தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட வடக்கு மாகாணத்தில் 5 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த மாகாணத்தில் ஒரு உப பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஒரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிளும் தாக்கப்பட்டனர்.

இதேவேளை, கடமைகளை செய்யும்போது அதிகாரிகளை தாக்கும் நபர்களைக் கைது செய்து சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனைத்து பொலிஸ் மா அதிபர்களுக்கும் அறிவித்துள்ளார்.

இதேவேளை, பணிக்கு புறம்பான சம்பவங்கள் காரணமாக தாக்கப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிடியாணை கைதுகள், சட்ட அமுலாக்க போதைப்பொருள் சோதனைகள் மற்றும் பிற கடமைகளின்போதும் பலர் கடமையில் தாக்கப்பட்டுள்ளனர்.

Sharing is caring

More News