சர்வதேச நாணய நிதிய (IMF) திட்டத்தின் கீழ் கண்காணிக்கக்கூடிய 100 உறுதிமொழிகளில் 29ஐ இலங்கை பூர்த்தி செய்துள்ளதுடன், 2023 மே மாத இறுதிக்குள் அவற்றின் மூன்று உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாகவும் வெரிடே ரிசர்ச்சின் ‘IMF கணிப்பான்’ எனும் கருவி தெரிவித்துள்ளது.
நிறைவேற்ற தவறியுள்ள இரண்டு உறுதிமொழிகள் வருமானம் தொடர்பானவை. முதலாவதாக, வரி வருவாயை 2023 மார்ச் மாதத்திற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2.1% அல்லது 650 பில்லியன் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பதாகும். ஆனால் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 578 பில்லியன் ரூபாவா மாத்திரமே ஆகும்.
இரண்டாவது உறுதிப்பாடு மே மாதம் 30ம் திகதியன்று பிரகடன படுத்தப்பட்ட வரி முன்மொழிவின் அடிப்படையில் பந்தயம் மற்றும் சூதாட்ட வரி தொடர்பான வரி விகிதங்களை அதிகரிப்பதாகும். சூதாட்டத்திற்கான வருடாந்த வரியை ரூ.500 மில்லியனாகவும், முகவர்கள் மூலம் பந்தயம் கட்டுவதற்கான வருடாந்த வரி ரூ.5 மில்லியனாகவும், நேரடி ஒளிபரப்பு மூலம் பந்தயம் கட்டுவதற்கான வருடாந்த வரி ரூ. 75,000, மற்றும் மொத்த வசூல் மீதான வரி 15% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4 ஆம் திகதி முன்வரைவு சட்டம் பிரகடன படுத்தப்பட்டாலும், முன்வரைவு சட்டத்திற்கு எந்த திருத்தமும் சமர்ப்பிக்கப்படவில்லை.
மே மாத இறுதிக்குள், நிகழ்நிலையில் நிதி வெளிப்படைத்தன்மையை காட்டும் வகையிலான தளத்தை அமைப்பதற்கான உறுதிமொழி பகுதியளவு நிறைவேற்றப்பட்டுள்ளது. (i) குறிப்பிடத்தக்க பொதுக் கொள்முதல் ஒப்பந்தங்கள், (ii) முதலீட்டுச் சபையால் வழங்கப்பட்ட வரி விலக்களிப்புகளால் பயனடையும் நிறுவனங்களின் பெயர் பட்டியல் மற்றும் (iii) சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வரி விலக்களிப்புகளுக்கு உட்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதே இந்த தளத்தின் நோக்கமாகும். இத் தகவல்களை அரையாண்டு அடிப்படையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஊழியர்களுடன் கலந்தாலோசித்து தயாரிக்கப்பட்ட புதிய மத்திய வங்கிச் சட்டத்திற்கு பாராளுமன்ற அங்கீகாரம் வழங்குவது நிறைவேற்றப்படாத மூன்றாவது உறுதிமொழியாகும். மார்ச் 7ம் திகதி முன்வரைவுச் சட்டம் வெளியிடப்பட்டாலும், சட்டத்திற்கு எவ்வித திருத்தமும் செய்யப்படவில்லை.
மே மாத இறுதியில், கணிப்பான் மூலமாக அடையாளம் காணப்பட்ட ஆறு உறுதிமொழிகளின் முன்னேற்ற நிலை தெரியவில்லை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த உறுதிமொழிகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு தேவையான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதை இது காட்டுகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுடன் ஒப்பிடுகையில் சில முன்னேற்றங்கள் காணப்பட்ட போதிலும், தரவுகள் இல்லாதது கவலையளிக்கக் கூடியதாகும்.
சர்வதேச நாணய நிதிய (IMF) நிகழ்ச்சிதிட்டத்தில் சரியான நேரத்தில் முன்னேற்றம் காண்பது இரண்டு நன்மைகளைப் பெற்றுத்தரக்கூடியது என்று வெரிடே ரிசர்ச் குறிப்பிடுகிறது. முதலாவதாக, பெரும்பாலான (அனைத்தும் அல்ல) செயல்கள் பொருள் நன்மைகளை விளைவிக்கும். இரண்டாவதாக, இலங்கையின் ஆட்சி மீதான நம்பிக்கையை மேம்படுத்தி, அதன் மூலம் கடந்தகால கடன் சுமைகளை மறுசீரமைக்கப் பேச்சுவார்த்தைகளுக்கு உதவுவதுடன் எதிர்கால பொருளாதார மீட்சிக்கான பாதையை விரைவுபடுத்த தேவையான பேச்சுவார்த்தைகளுக்கும் உதவுகிறது.
2023 மார்ச் 20 அன்று அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக சர்வதேச நாணய நிதியத்திற்கான (IMF) இலங்கையின் உள்நோக்கக் கடிதத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள 100 அடையாளம் காணப்பட்ட உறுதிமொழிகளை முறையாகக் கண்காணிக்கும் இலங்கையின் முதல் மற்றும் ஒரே தளம் ‘IMF கணிப்பான்’ ஆகும். இத்தளம், அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம், (IMF) தங்களது உறுதிமொழிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நன்கு புரிந்துகொண்டு அவற்றை கண்காணிப்பதற்கு உதவும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.