பல கோரிக்கைகளை முன்வைத்து தொடருந்து இன்ஜின் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பினால் தொடருந்து சேவைகள் சில இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று (06) நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ளதாக தொடருந்து பொறியாளர் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம்.சேனாநாயக்க (S.R.C.M. Senanayake) கூறியுள்ளார்.
இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், ஆட்சேர்ப்பு தாமதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு இந்த தொழில் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஐந்து தொடருந்து நிலையங்களில் இரண்டின் சாரதிகள் மாத்திரமே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தொடருந்து இயங்காது என தொடருந்து பொறியாளர் சங்கத்தின் செயலாளர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக காலை வேளையில் இயங்கும் அலுவலக தொடருந்துகள் அதிகம் பாதிக்கப்படாது எனினும் இன்று பிற்பகல் இயங்கும் அனைத்து தொடருந்துகளும் இரத்து செய்யப்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், 84 தொடருந்து சாரதிகளின் பதவி உயர்வு பிரச்சினையின் அடிப்படையில் அந்த சாரதிகளே இந்த தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த தொழில்சார் நடவடிக்கையானது தொடருந்து பொறியியலாளர்கள் சங்கததின் (Association of Locomotive Operating Engineers) நிர்வாகக் குழுவால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல, சங்கத்தின் செயலாளரின் முடிவின்படி வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது என்று சங்கத்தின் தலைவர் சந்தன லால் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.