Search
Close this search box.
ஏற்றுமதி தொடர்பான தடைகளை நீக்க முன்மொழிவு!

கள்ளு உள்ளிட்ட கித்துள், பனை மற்றும் தென்னை சார்ந்த தயாரிப்புகளை உள்ளூரில் உற்பத்தி செய்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல் தொடர்பான தடைகளை நீக்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய குழுவினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

நீண்ட காலமாக கள்ளு உள்ளிட்ட கித்துள், பனை மற்றும் தென்னை சார்ந்த தயாரிப்புகளை உள்ளூரில் உற்பத்தி செய்தல், விநியோகித்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல் என்பவற்றுக்கு சிக்கல்கள் காணப்படுவதாகவும், இதனை நிவர்த்தி செய்வதன் மூலம் பாரியளவு வருமானத்தை அரசுக்குப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சினால் இதற்கு முன்னர் இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கமைய, இது தொடர்பில் காணப்படும் சிக்கல்கள் பற்றி கலந்துரையாடி அவற்றைத் தீர்ப்பதற்கு மதுவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குழுவினால் அழைக்கப்பட்டிருந்தது. இதன்போது இந்த திணைக்களங்களுடன் கலந்துரையாடி இது தொடர்பில் காணப்படும் தடைகளை நீக்குவதற்கு இணக்கம் காணப்பட்டது.
தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய குழு அதன் தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் அண்மையில் (04) கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், வட மாகாணத்தில் தயாரிக்கப்படும் பனங்கள்ளை மொத்தமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விநியோகிப்பதற்குக் காணப்படும் தடைகளை நீக்குவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஏற்றுமதியாளர்களுக்கு வசதியாகவும் முறையாகவும் கித்துள், பனை மற்றும் தென்னை சார்ந்த தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கான பொறிமுறை ஒன்றை தயாரிக்குமாறும் குழுவினால் ஆலோசனை வழங்கப்பட்டது.

கித்துள், பனை மற்றும் தென்னை சார்ந்த தயாரிப்புகளுக்கு வெளிநாட்டில் பாரிய சந்தை வாய்ப்புக்கள் காணப்படுவதாக குழு சுட்டிக்காட்டியது. அதனால் இந்தத் தடைகளை நீக்குவதன் மூலம் எதிர்காலத்தில்  பாரியளவு வருமானம் அரசாங்கத்துக்கு வரும் என குழு சுட்டிக்காட்டியது.

அத்துடன், கித்துள், பனை மற்றும் தென்னை சார்ந்த தயாரிப்புகள் தொடர்பான அனைத்து முன்மொழிவுகளும் அடங்கிய அறிக்கையை குழுவுக்கு வழங்குமாறும் இதன்போது அறிவுறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான  அஷோக் அபேசிங்க,  ஹர்ஷண ராஜகருணா ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன், கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, இலங்கை சுங்கம், மதுவரித் திணைக்களம், பனை அபிவிருத்தி சபை, கித்துள் அபிவிருத்தி சபை, தென்னை அபிவிருத்தி சபை, தென்னைப் பயிர்ச்செய்கை சபை மற்றும் தென்னை ஆராய்ச்சி நிலையம் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Sharing is caring

More News