காணாமல் போன அரசுக்கு சொந்தமான வாகனங்களை அடையாளம் காண்பதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிசாந்த வீரசிங்க (Nishantha Weerasinghe) குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில வருடங்களில் சில பொது நிறுவனங்களில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 5,000 இற்கும் மேற்பட்ட அரசுக்கு சொந்தமான வாகனங்களை கண்டுபிடிப்பதன் அவசியத்தை தேசிய கணக்காய்வு அலுவலகம் அண்மையில் வலியுறுத்தியுள்ளது.
தொலைந்து போன வாகனங்களின் இருப்பிடங்கள் மற்றும் அவற்றின் தவறான இடம் தொடர்பான ஏதேனும் முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கணக்காய்வு அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், காணாமல் போன வாகனங்களை அடையாளம் காண திணைக்களம் விரிவான விசாரணையை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அதிபர் செயலகத்திற்கு சொந்தமான பல வாகனங்களும் காணாமல் போன வாகனங்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் மற்றும் இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு விரைவில் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கணக்காய்வாளர் நாயகத்தின் ஆய்வு அறிக்கையின் படி சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 கார்கள் மற்றும் 1,115 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 1,794 வாகனங்கள் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.