Search
Close this search box.
கனடா வாசியை இலக்கு வைத்து பல கோடி ரூபாய் மோசடி – யாழில் சிக்கிய போலி வைத்தியர்!

யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களை தயாரித்து மருத்துவர்  என தன்னை அறிமுகப்படுத்தி கனடாவில் உள்ள ஒருவரிடம் மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு கோடியே 42 இலட்சம் ரூபா இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர், யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்தவர் என்றும், 29 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்தவின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான பொலிஸ் குழுவால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து அதிசொகுசு கார் ஒன்றும், 15 பவுண் நகைகளும், 5 இலட்சம் ரூபா பணமும், 5 கைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர் தான் ஒரு மருத்துவர் என்பதற்குரிய போலி ஆவணங்களையும், அடையாள அட்டையையும் உருவாக்கி மோசடிகளை மேற்கொண்டுள்ளார்.

கனடாவில் உள்ள ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட இவர், மருத்துவ மேற்படிப்புக்காக புலமைப்பரிசில் கிடைத்துள்ளது என்றும், அதனால் வெளிநாடு செல்லவுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் காணி ஒன்று தனக்கு உள்ளது என தெரிவித்து, அதற்குரிய ஆவணங்களையும் அனுப்பியதுடன், அதை ஒரு கோடியே 42 இலட்சத்துக்கு விலைபேசியியுள்ளார்.

அதை நம்பி கனடாவில் இருந்து உண்டியல் பண பரிமாற்றம்  மூலமும், வங்கிக் கணக்கு ஊடாகவும் ஒரு கோடியே 42 இலட்சம் ரூபா கைமாற்றப்பட்டுள்ளது.

பின்னர் இவர் அனுப்பிய காணி ஆவணங்கள் போலியானவை என்பதை அறிந்துகொண்ட கனடா தரப்பு இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனைதொடர்ந்து யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்தவின் கீழ் இயங்கும் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன்படி விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், சந்தேகநபர் நேற்று யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சேவை மேற்கொள்கின்றேன் என தெரிவித்து வெளிநாடுகளில் உள்ள பலரிடம் பணம் பெற்றுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

சந்தேகநபரால் மேலும் பல கோடி ரூபா மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்றும், மேலதிக  விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Sharing is caring

More News