மாலைத்தீவு அரசாங்கம் இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளை தடைசெய்யும் வகையில் நாட்டின் சட்டங்களை மாற்றுவதற்கான முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற அவசர செய்தியாளர் சந்திப்பில் உள்துறை அமைச்சர் அலி இஹுசன் (Ali Ihusaan) இந்த முடிவை அறிவித்துள்ளார்.
அவரின் கூற்றுப்படி, நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் கடவுச்சீட்டில் மாலைத்தீவிற்குள் நுழைவதைத் தடைசெய்ய தேவையான சட்டத் திருத்தங்களை விரைவில் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காசா மீதான இஸ்ரேலியப் படைகளின் பேரழிவுத் தாக்குதல்கள் பெருகிவரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.