Search
Close this search box.
எவருக்கும் சம்பள அதிகரிப்பு இல்லை – பந்துல குணவர்தன !

சம்பள அதிகரிப்பு கோரி எவர் போராட்டத்தில் ஈடுபட்டாலும் இந்த ஆண்டு சம்பளம் அதிகரிக்க முடியாது. ஒரு துறையினருக்கு சம்பளத்தை அதிகரித்தால் பிறிதொரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாதுக்க புகையிரத நிலையத்தின் அபிவிருத்தி பணிகளை இன்று வெள்ளிக்கிழமை (31) காலை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சம்பன முரண்பாட்டுக்கு தீர்வு கோரி ஆசிரியர் – அதிபர் சங்கத்தினர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு இன்னும் வங்குரோத்து நிலையில் இருந்து மீளவில்லை என்பதை இவர்கள் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் உள்ள நிலையில் சகல அபிவிருத்தி பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு வெற்றிப் பெற்றால் மாத்திரமே அபிவிருத்தி பணிகளை தொடர முடியும். அரச செலவினங்களை முகாமைத்தும் செய்வதற்கு கூட அரச வருமானம் போதுமானதாக அமையவில்லை.

சம்பள அதிகரிப்பு கோரி எவர் போராட்டத்தில் ஈடுபட்டாலும் இந்த ஆண்டு எவருக்கும் சம்பளத்தை அதிகரிக்க முடியாது. 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு துறையினருக்கு சம்பளத்தை அதிகரித்தால் பிறிதொரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

தாம் ஆட்சிக்கு வந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்துடனான பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்வதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது நாட்டு மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடு என்றே குறிப்பிட வேண்டும். ஏனெனில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் தற்போதைய மறுசீரமைப்புக்களை தொடர வேண்டும். குறுகிய அரசியல் நோக்கத்துக்காக தற்போதைய மறுசீரமைப்புக்களை மாற்றியமைத்தால் ஒருவாரம் கூட நாட்டை நிர்வகிக்க முடியாது என்றார்.

Sharing is caring

More News