Search
Close this search box.

யாழில் நடந்த பயங்கரம் நடுவீதியில்பெண்ணை தீ மூட்டி கொளுத்திய நபர்

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி  வீதிப் பகுதியில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்த நபர் ஒருவர் குறித்த பெண்ணை தீ மூட்டி கொளுத்தியதால் பதட்ட நிலை ஏற்பட்டது. சாவகச்சேரியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே மேற்படி நபரால் எரியூட்டப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 42 வயது மதிக்கத்தக்க குடும்பப் பெண் ஒருவரை ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு யாழ் குருநகர் புனித பத்திரிசியார் கல்லூரி  வீதிப்  பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குறித்த ஆண் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார். பெண் தீயில்  எரிவதைக் கண்ட அயலவர்கள் தீயை அணைத்து பெண்ணை யாழ் போதன வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் துப்பாக்கி வெடித்ததில் இளைஞர் பலி

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டம் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துணுக்காய் கல்விளான் பகுதியில்  உடமையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி வெடித்ததில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு (31.05.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டுக்கு அனுப்புவதாக இலங்கையர்களை ஏமாற்றிய முகவர் : பெருந்தொகை கடவுச்சீட்டுக்கள் மீட்பு மேலதிக விசாரணை இந்த சம்பவத்தில் கண்ணையா அன்பழகன் என்ற 19 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் சடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குத்து சண்டை போட்டியில் பதக்கங்களை குவித்த வவுனியா ஒமேகா லைன் நிறுவனம்

வவுனியாவில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையான ஒமேகா லைன் நிறுவன ஊழியர்களுக்கு நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற குத்து சண்டை போட்டியில் பலர் வெற்றி பதக்கங்களை பெற்றுள்ளனர். மேலும் Omega Line (Ltd) Vavuniya Apparels நிறுவனத்தில் முதன்முறையாக குத்துச்சண்டை விளையாட்டினை ஊக்குவிக்கும் முகமாக பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவர்களுக்கான பயிற்சிகளை முன்னாள் குத்துச்சண்டை வீரரும் தற்போதைய தேசிய குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளருமான திரு.முடியப்பு நிக்சன் ரூபராஜ்மாதங்களாக பயிற்சி வழங்கியிருந்தார். முதன் முதலில் குத்துச் சண்டை பழகி களம் காணும் வீரர்களுக்காக 12.05.2024 தொடக்கம் 16.05.2024 வரை கொழும்பில் நடைபெற்ற BASL Novices – 2024 குத்துச்சண்டை போட்டியில் வவுனியா ஒமேகா லைன் நிறுவனத்திலிருந்து 16 வீரர்கள்; பங்குபற்றி அதில் ஐந்து வீரர்கள் பதக்கங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அதுமட்டுமல்லாது 25.05.2024 மற்றும் 26.05.2024 ம் திகதிகளில் முல்லைத்தீவில் இடம்பெற்ற வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் ஒமேகா நிறுவனத்தின் அணி வீரர்கள் தத்தமது மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டனர். பெரும்பான்மையானோர் வவுனியா மாவட்டத்தையும் ஒருவர் கிளிநொச்சி மாவட்டத்தையும் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டு பதக்கங்களை வெற்றியீட்டியுள்ளனர். சமூக மற்றும் தொழிலாளர் அக்கறை கொண்ட தொழிற்சாலையில் ஊழியர் சேவை மற்றும் திறன் அபிவிருத்தியை வெளிக்கொணரும் ஒரு செயற்பாடாக இது அமைந்துள்ளதுடன். மேலும் எதிர்காலத்தில் பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் முகமாகவும் இது காணப்படுவதாக இவ் நிறுவனத்தினர் கருத்து வெளியிட்டுள்ளனர். கொழும்பில் நடைபெற்ற BASL Novices – 2024 ,ல் பதக்கங்கள் பெற்றவர்கள் விபரம்ஆண்கள் : ர.டேஸ்மிகாந்த் (82-89Kg) – வெள்ளிப்பதக்கம் பு.மதிகரன் (48-51Kg) – வெண்கலப்பதக்கம் பெண்கள் : கு.கவியாழினி (57-60Kg) – வெண்கலப்பதக்கம் வி.காயத்திரி (48-51Kg) – வெண்கலப்பதக்கம் ரா.வளர்மதி (48-51Kg) – வெண்கலப்பதக்கம வடக்குமாகாண ரீதியில் பதக்கங்கள் பெற்றவர்கள் விபரம்: பெண்கள் : ஜெஸ்மிதா (64-69 Kg) – 1ம் இடம் (தங்கப்பதக்கம்) கு.கவியாழினி (57-60Kg)) – 2ம் இடம் (வெள்ளிப்பதக்கம்) வி.காயத்திரி (48-51Kg)) – 2ம் இடம் (வெள்ளிப்பதக்கம்) ந.ஜதுர்சிகா (64-69Kg)) – 2ம் இடம் (வெள்ளிப்பதக்கம்) ரா.வளர்மதி (48-51Kg) – 3ம் இடம் (வெண்கலப்பதக்கம்) வ.றோசினி (54-57Kg))- 3ம் இடம் (வெண்கலப்பதக்கம்) சு.சுதர்சினி (48-51Kg)) – 3ம் இடம் (வெண்கலப்பதக்கம்) ஆண்கள் : பு.மதிகரன் (48-51Kg)) – 1ம் இடம் (தங்கப்பதக்கம்) ச.துஷயந்தன் (67-71Kg)) – 3ம் இடம் (வெண்கலப்பதக்கம்) சு.சுபிட்ஸன் (60-63.5Kg)) – 3ம் இடம் (வெண்கலப்பதக்கம்) ச.யதுகுலன் (75-80Kg)) – 3ம் இடம் (வெண்கலப்பதக்கம்)

வெளியேறும் கனேடிய மக்கள் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

வீடு கொள்வனவு செய்வதில் நிலவி வரும் சிரமங்கள் காரணமாக கனடாவின் ரொறன்ரோ (Toronto )நகரை விட்டு அதிகளவான மக்கள் வெளியேற முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் நிறுவனமொன்று நடத்திய கருத்து கணிப்பினால் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பானது, சுமார் 900 கனடியர்களின் (Canada) மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ரொறன்ரோ நகரவாசிகள் கொள்வனவு செய்ய இயலுமை கொண்ட நகரங்களில் வீடு கொள்வனவு செய்ய முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அத்துடன், வீடுகளை கொள்வனவு செய்யவுள்ள நகரங்களில் தொழில் வாய்ப்புக்களை பெறவும் தொலைவில் இருந்து பணியாற்றக்கூடிய தொழில்களை பெறுவதற்கும் மக்கள் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், கனேடிய மக்கள் மிகவும் மிகவும் செலவு கூடிய நகரங்களில் இருந்து செலவு குறைந்த நகரங்கள் நோக்கி நகர்வதற்கான முயற்சிகள் எடுத்து வருவது தெரியவந்துள்ளது.

நூறுக்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுக்களுடன் முகவர் கைது

குருணாகல் சுரதிஸ்ஸ மாவத்தையில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றின் உரிமையாளர் நேற்று வெள்ளிக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார். அங்குச் சவுதி அரேபியா, ஓமன், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆட்சேர்ப்பு செய்து வருவதும் தெரியவந்துள்ளது. இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்திலிருந்து போலியான 110 கடவுச்சீட்டுகள், வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் மற்றும் பல ஆவணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று (31) குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எவருக்கும் சம்பள அதிகரிப்பு இல்லை – பந்துல குணவர்தன !

சம்பள அதிகரிப்பு கோரி எவர் போராட்டத்தில் ஈடுபட்டாலும் இந்த ஆண்டு சம்பளம் அதிகரிக்க முடியாது. ஒரு துறையினருக்கு சம்பளத்தை அதிகரித்தால் பிறிதொரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பாதுக்க புகையிரத நிலையத்தின் அபிவிருத்தி பணிகளை இன்று வெள்ளிக்கிழமை (31) காலை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, சம்பன முரண்பாட்டுக்கு தீர்வு கோரி ஆசிரியர் – அதிபர் சங்கத்தினர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு இன்னும் வங்குரோத்து நிலையில் இருந்து மீளவில்லை என்பதை இவர்கள் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் உள்ள நிலையில் சகல அபிவிருத்தி பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு வெற்றிப் பெற்றால் மாத்திரமே அபிவிருத்தி பணிகளை தொடர முடியும். அரச செலவினங்களை முகாமைத்தும் செய்வதற்கு கூட அரச வருமானம் போதுமானதாக அமையவில்லை. சம்பள அதிகரிப்பு கோரி எவர் போராட்டத்தில் ஈடுபட்டாலும் இந்த ஆண்டு எவருக்கும் சம்பளத்தை அதிகரிக்க முடியாது. 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு துறையினருக்கு சம்பளத்தை அதிகரித்தால் பிறிதொரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். தாம் ஆட்சிக்கு வந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்துடனான பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்வதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது நாட்டு மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடு என்றே குறிப்பிட வேண்டும். ஏனெனில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் தற்போதைய மறுசீரமைப்புக்களை தொடர வேண்டும். குறுகிய அரசியல் நோக்கத்துக்காக தற்போதைய மறுசீரமைப்புக்களை மாற்றியமைத்தால் ஒருவாரம் கூட நாட்டை நிர்வகிக்க முடியாது என்றார்.

வவுனியாவில் கடவுச்சீட்டு விநியோகத்தில் நடந்த பாரிய மோசடி அம்பலம்…

வெளிநாட்டில் தங்கியிருக்கும் பாதாள உலக குழுவினருக்கு கடவுச்சீட்டு வழங்கும் போது அவர்களின் உண்மையான பெயர்களுக்கு மேலதிகமாக போலியான பெயர்களிலும் தயார் செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இரண்டு வகையான கடவுச்சீட்டுகளிலும் ஒரே மாதிரியான கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு, குடிவரவுத் திணைக்களத்தின் தரவு அமைப்புக்குள் அனுப்பப்பட்டுள்ளதாக விசேட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதாள உலக குழுவினருக்கு போலி கடவுச்சீட்டு தயாரித்தல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட நீண்ட விசாரணையின் போதே இவ்வாறு தெரியவந்துள்ளது. பல அதிகாரிகளின் உதவியுடன் இந்தப் போலி கடவுச்சீட்டுகள் தயாரிக்கப்பட்டதாகவும், இவ்வாறு தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 20 எனவும் அதில் 14 டுபாய் பாதாள உலகக் குழுவினரின் பிடியில் சிக்கியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த போலி கடவுச்சீட்டிற்காக ஐந்து லட்சம் ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை வவுனியா அலுவலகத்தில் அச்சிடப்பட்டவை என விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது. இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் பணிபுரியும் நிர்வாக சேவை அதிகாரிகள் இருவரை குற்றப்புலனாய்வு திணைக்களம் அண்மையில் கைது செய்தது. இந்த மோசடியுடன் தொடர்புடைய வேறு சிலரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன, ஆனால் இரண்டு அதிகாரிகளையும் கைது செய்யும் போது சில தரப்பினர் பலத்த அழுத்தம் பிரயோகித்து கைது செய்வதைத் தடுக்க முயன்றனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தரவு அமைப்பு இருந்தும், டுபாயில் பாதாள உலகக் குழுவினர் தயாரித்த போலி கடவுச்சீட்டிலும் உண்மையான கடவுச்சீட்டிலும் ஒரே கைரேகையை ஊழல் அதிகாரிகள் பதித்துள்ளனர். கோடிக்கணக்கான மதிப்புள்ள தரவு அமைப்புகளை வாங்குவதில் எந்தப் பயனும் இல்லை எனவும் அவர்கள் பணத்திற்காக தரவு அமைப்புகளையும் மாற்றுவதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாணவிகளின் பெறுபேறு இடைநிறுத்தமானது இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு

திருகோணமலை(Trincomalee)  சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறு பேறு இடைநிறுத்தம் இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்(Imran Maharoof) தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, “பரீட்சை மண்டபத்தில் தமது காதுகளை மூடி பரீட்சை எழுதினார்கள் என்ற குற்றச் சாட்டின் பேரிலேயே இந்த இடைநிறுத்தம் இடம்பெற்றுள்ளது. காதுகளை மூடி பரீட்சை எழுதியமை பரீட்சை மண்டபத்தில் கவனித்திருக்க வேண்டிய விடயம். அது ஏனைய பரீட்சார்த்திகளை பாதிக்கின்ற விடயமும் அல்ல. இந்த விடயங்களை சகல தரப்பினருக்கும் தெளிவு படுத்திய பின்னரும் பெறுபேறு இடைநிறுத்த பட்டுள்ளமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. சாஹிரா கல்லூரியின் வளர்ச்சியை சகிக்க முடியாதவர்களின் இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு இதுவென்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. பரீட்சை மண்டபத்தில் தீர்க்கப் பட்டிருக்க வேண்டிய இந்த விடயத்தை பெறுபேற்றை இடைநிறுத்தும் அளவுக்கு கொண்டு சென்ற பரீட்சை மேற்பார்வையாளரின் மனநிலையை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது. ஒரேமொழியை பேசும் நாம் இப்படி பிள்ளைகளின் உரிமைகளில் தலையிடுவது ஆரோக்கியமானதல்ல. பிள்ளைகளினதும் பெற்றோரினதும் இன்றைய சோகமான மனநிலையை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து பரீட்சை ஆணையாளருடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளேன். இந்த விடயத்தில் சகல முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் ஒன்று பட வேண்டும். இது ஒரு சமூகப் பிரச்சினை. கிழக்கு மாகாண முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் மற்றொரு வடிவம் இது. என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவின் அரசியல் செல்வாக்கு: கால்தடம் பதித்த ஈழத்தமிழ் பெண்கள்

பிரித்தானியாவில் ஈழத் தமிழர்களின் அரசியல் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், ஈழத் தமிழ் பெண்னொருவர் லேபர் கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், உமா குமரன் (Uma Kumaran) என்னும் பெண்மணியே இவ்வாறு வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள தொகுதியானது லேபர் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு அதிக வெற்றிவாய்ப்புக்களை கொடுக்கும் தொகுதியாக எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக உமா குமரனுக்கு அதிக வெற்றி வாய்ப்புக்கள் இருப்பதாகவும், எதிர்வரும் ஜூலை மாதம் நான்காம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற்று நாடாளுமன்றம் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள உமா குமரனுக்கு கடந்த மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் போது பாப்பரசர் பிரான்ஸிஸை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததுள்ளது. அத்தோடு தங்கம் டெபோனையர் (Thangam Debbonaire) எனும் தமிழ் பெண்ணொருவரும் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு இவர் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இதற்கு முன்னரும் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இம்முறை இவர் வெற்றியீட்டுவாராயின் கெபினட் அந்தஸ்த்துள்ள மந்திரியாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவரும் ஈழத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்டவர் என்பதுடன் லேபர் கட்சியின் முக்கியஸ்தராகவும் திகழ்வதுடன் இவர் கெபினட் அந்தஸ்த்துள்ள மந்திரியாக வருவது ஈழத் தமிழர்களின் அரசியல் நகர்வுக்கு மிகப் பெரிய பலமாகவும், வலுச் சேர்க்கும் ஒன்றாகவும் இருக்கும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

AI தொழில்நுட்பத்தில் நாம் பின்தங்கியிருக்க முடியாது!

நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை நாட்டில் ஊக்குவிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் வருடத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும், 05 வருடங்களுக்குள் நாட்டின் சகல துறைகளிலும் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதே இதன் நோக்கமாகும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, பல்கலைக்கழகங்கள் மீது இது குறித்த பரந்த பொறுப்பு சார்ந்திருப்பதாகவும் தெரிவித்தார். இலங்கையில் AI தொழில்நுட்பம் அல்லது செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்துவது தொடர்பில் பல்கலைக்கழக கல்வியலாளர்களுடன் நேற்று முன்தினம் (30) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கு, இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தை விரைவாக ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார். நாட்டின் வெளிநாட்டுக் கடனைச் செலுத்துவதற்கு 2027 – 2040 வரை கால அவகாசம் இருப்பதாகவும், 2035 ஆம் ஆண்டளவில் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறான சமூக-பொருளாதார மாற்றத்துக்காக நவீன தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். 2035 ஆம் ஆண்டளவில் உருவாக்கப்படும் புதிய பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு AI இன் வகிபாகம் முதன்மையாக இருக்க வேண்டுமென் என்பதோடு, நவீன தொழில்நுட்பத்தில் தெற்காசியாவின் அடையாளமாக இலங்கையை மாற்றுவதற்கான இயலுமை காணப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். AI தொழில்நுட்பம் அல்லது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது தொடர்பாக பல்கலைக்கழகங்கள் பலவற்றின் பேராசிரியர்கள் மற்றும் கல்வியலாளர்களினால் கூட்டாக தயாரிக்கப்பட்ட பிரேரணையும் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. பல பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே AI தொழில்நுட்பத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டிய கல்வியலாளர்கள், அந்த திட்டங்களின் செயல்பாடு மற்றும் இலக்குகள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர். இங்கு மேலும் கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, “இலங்கை தொழில்நுட்ப முன்னேற்றத்தை அடைய வேண்டும். நவீன தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம். பொருளாதார நன்மைகளை அடைய தொழில்நுட்ப அறிவு போதுமான அளவு பயன்படுத்தப்படவில்லை. அண்மைக்காலமாக செயற்கை நுண்ணறிவு AI தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்துகிறது. அதிலும் நாம் பின்தங்கியிருக்க முடியாது. நாம் செயற்கை நுண்ணறிவுடன் முன்னேறினால், மற்ற தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த முடியும். செயற்கை நுண்ணறிவுக்குள் பல தொழில்நுட்பங்கள் உள்ளடங்கியுள்ளன. அதனை நாம் பயன்படுத்தும் விதத்தை பொறுத்தே ஒரு நாடு என்ற வகையில் முன்னேற்றத்தை அடையலாம். முன்பு நாம் தகவல் தொழில்நுட்பத் துறையில் செய்த தவறை மீண்டும் செய்ய முடியாது. தகவல் தொழில்நுட்பத் துறை திட்டங்களில் பயன்படுத்துவது குறித்து மாத்திரமே இதுவரையில் கவனம் செலுத்தியிருக்கிறோம். அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். அதன் பலனாகவே தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு சில நாடுகளை விடவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம். 1984 ஆம் ஆண்டு நான் நாட்டில் கணினிக் கல்வியைத் அறிமுகப்படுத்தியபோது ​​சின்க்கிளேயார் கணினிகளை அறிமுகப்படுத்தியிருந்தோம். அதனை நாங்கள் சரியாக செய்யவில்லை. அதற்காக நீண்ட காலத்தை செலவிட்டோம். அந்த அனுபவங்களை பாடமாக கொள்ள வேண்டும். அதன்படி, நாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதற்கான செயற்பாடுகளை தொழில்நுட்ப அமைச்சு முன்னெடுத்து வருகிறது. டிஜிட்டல் மாற்றத்துக்கான முகவர் நிறுவனத்தை நிறுவது தொடர்பிலும் ஆலோசிக்கிறோம். டிஜிட்டல் மயமாக்கல் மூலம் சமூக , பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதனால் டிஜிட்டல் பொருளாதாரத்தையும் கட்டமைக்க முடியும். பொருளாதார ஆணைக்குழு மற்றும் நிதி அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த விடயத்தில் முன் நின்று செயற்படும். அத்தோடு டிஜிட்டல் மாற்றத்துக்கான முகவர் நிறுவனமும் ஸ்தாபிக்கப்படும். இதற்குள் தேசிய செயற்கை நுண்ணறிவு மையம் என்ற சுயாதீன நிறுவனமும் ஸ்தாபிக்கப்படும். அதற்கான பணிப்பாளரும் பணிப்பாளர் சபையொன்றும் நியமிக்கப்படும். இந்த நிறுவனங்களை நிறுவுவதற்கான சட்ட வரைவு உருவாக்கப்படுகிறது. அதற்கு மேலதிகமாக தொழில்நுட்ப மேம்பாட்டு சபையும் காணப்படுகிறது. அதேபோல் வணிக ஆராய்ச்சியை ஊக்குவிக்க நிதியளிப்போம். நாம் செய்யும் முதலீடுகளில் இலாபம் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். நாம் வெற்றியடைவதற்கான ஒரே வழியாக இதனை மட்டுமே சொல்ல முடியும். இந்த டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதும், அதில் பெரும் பகுதி பயன்படுத்தப்படவில்லை. எவ்வாறாயினும் அடுத்த ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்வோம். இத்திட்டத்தில் முடிந்த அளவில் தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம். செயற்கை நுண்ணறிவை (AI)விரிவுபடுத்த பாடசாலைகளுக்குள் AI சங்கங்களைத்(AI Societies) தொடங்குமாறு அறிவுறுத்தியுள்ளேன். மேலும், பல்கலைக்கழகங்களில் செயற்கை நுண்ணறிவை அதிகபட்சமாக பயன்படுத்த வேண்டும். முக்கியமாக தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு 4 புதிய பல்கலைக்கழகங்களை நிறுவ திட்டமிட்டுள்ளோம். பொறியியல் பீடங்கள் இல்லாத பல்கலைக்கழகங்களில் பொறியியல் பீடங்களைத் ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அடுத்த 05 ஆண்டுகளில் அதிகபட்சமாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதே எமது இலக்காகும். இத்திட்டம் அடுத்த ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்படும். இறக்குமதியைச் சார்ந்த பொருளாதாரத்தில் இருந்து ஏற்றுமதி பொருளாதாரமாக நாம் மாறவும் இது மிக அவசியமானதாகும். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன. தற்போதுள்ள கடனை செலுத்த 2027 – 2040 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, 2035க்குள் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு அதற்குள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். அதனால்தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்த முயற்சிக்கிறோம். இந்த பொருளாதார வளர்ச்சி இலக்கை அடையாவிட்டால், நமது நாட்டிற்கு எதிர்காலம் இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். மேலும், செயற்கை நுண்ணறிவு உலகம் முழுவதும் பரவியுள்ளது. தெற்காசியாவில் ஒரு தனித்துவமான அடையாளத்தை நாம் பதிப்பதற்கு அந்த தொழில்நுட்பத்தை சார்ந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கும் இது பயனளிக்கும். செயற்கை நுண்ணறிவுக்கும் பௌத்த தர்மத்திற்கும் இடையிலான தொடர்பை ஆராய்வது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதலாவது தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்த தேசிய தொலைக்காட்சியின் தலைவர் கலாநிதி பிரசாத் சமரசிங்கவும் இதன்போது உரையாற்றினார். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் கல்வியலாளர்கள், இளைஞர் விவகாரம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் பணிப்பாளர் ரந்துல அபேவீர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.