Search
Close this search box.
பொலிஸில் சரணடைந்த 11 பாடசாலை மாணவிகள்! யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம், தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரி ஒருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல், அங்கு தங்கியிருந்த 11 பாடசாலை மாணவிகள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

10 முதல் 17 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவிகளே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

அகப்பை காம்பு மற்றும் தடியால் தாக்குவது, தலைமுடியை பிடித்து சுவருடன் தாக்குவதென, விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி கடந்த 3 வருடங்களாக தம்மை சித்திரவதை செய்வதாக மாணவிகள் கண்ணீருடன் முறையிட்டுள்ளனர்.

புது வகையான ஆங்கில உச்சரிப்பை பேசச் சொல்வது, ஆங்கில உச்சரிப்பு தவறு, ஆங்கிலம் முறையாக பேசாதது, பிரார்த்தனையை முறையாக  மனனம் செய்யாதது உள்ளிட்ட காரணங்களிற்காகவே அருட் சகோதரி தாக்குதல் நடத்தியதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன், பாடசாலை மாணவிகளுடன் உரையாடக்கூடாத கெட்ட வார்த்தைகளையும் உபயோகித்து திட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

பாடசாலையில் குறித்த விடயத்தை சொன்னபோதும் சமாளித்து போகுமாறு கூறவே அச்சம் காரணமாக 11 மாணவிகளும் இன்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இதனையடுத்து அனைத்து மாணவிகளும்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டனர்.

மாணவிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்களின் உடலில் தாக்கப்பட்ட தழும்புகள் அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த 11 மாணவிகளும் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விடுதி பொறுப்பாசிரியரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Sharing is caring

More News