நாட்டில் எப்பிரதேசத்திலும் அனர்த்த நிலைமை அல்லது மரம் முறிந்து விழும் ஆபத்து இருக்குமானால் அது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற துரித இலக்கத்துக்கு அறிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் (Pramitha Bandara Tennakoon) தெரிவித்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சில் நேற்றைய தினம் (24.05.2024) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சீரற்ற காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு செய்கிறது. அதனால் வளிமண்டல திணைக்களத்தின் அறிவித்தல்களின் பிரகாரம் செயற்படுவது அனைவரதும் கடமை.அதனால் சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்பு பெற வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தல்களுக்கு கவனம் செலுத்துமாறு நாங்கள் நாட்டு மக்களை கேட்டுக்கொள்கிறோம். மேலும் மரங்கள் முறிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
ஆனால் மரங்கள் முறிந்து விழுவது தொடர்பாக இதுவரை கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக தெரியவில்லை. மேலும், மரங்கள் விழுவது தொடர்பான எவ்வித எச்சரிக்கையும் விடுப்பதற்கென ஒரு நிறுவனம் எமது நாட்டில் செயற்படுவதில்லை.
எனவே, இவ்வாறான எச்சரிக்கை விடுக்கும் பொறுப்பை கட்டட ஆராய்ச்சி நிறுவனத்துக்கு நாங்கள் வழங்கி இருக்கிறோம். அந்த துறையை முன்னேற்ற வேண்டும்.
துறைசார் நிபுணர்களை இதற்கு இணைத்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று தேசிய கொள்கை அமைக்கவேண்டும். இதுதொடர்பாக உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பாரிய பொறுப்பு இருக்கிறது. அதேநேரம் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு பிரதான காரணமாக இருப்பது, உள்ளூராட்சி நிறுவனங்களின் அனுமதி இல்லாமல் கட்டுமானங்களை அமைப்பதற்கு அனுமதிப்பதாகும்.
சட்டவிரோத கட்டடங்களை நிறுத்துவதற்கு அனுமதியளிப்பதில் ஏற்பட்டிருக்கும் தாமதிப்பை மறைக்க வேண்டாம் என அந்த நிறுவனங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களாக இரத்தினபுரி, மாத்தறை, காலி, கொழும்பு, கழுத்துறை, கம்பஹா, அக்குரணை போன்ற பிரதேசங்கள் இனம் காணப்பட்டிருக்கின்றன.
இதற்கு நடவடிக்கை எடுக்காமல், தொடர்ந்து நிவாரணம், நஷ்டயீடு என செய்துகொண்டிருக்க முடியாது. எனவே நாட்டில் எப்பிரதேசத்திலும் அனர்த்த நிலைமை அல்லது மரம் முறிந்துவிழும் ஆபத்து இருக்குமானால் அதுதொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற துரித இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும். அதேபோன்று கிராம சேவகர் ஊடாக பிரதேச செயலாளரை அறிவுறுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.