கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 5,320 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (25)காலை திறந்து வைக்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 3 நாட்கள் விஜயமாக நேற்றையதினம்(24) வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் யாழில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார்.
இந்நிலையில் இன்று(25) காலை கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட போதே பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.
நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன், அரசாங்கம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் , தர்மலிங்கம் சித்தார்த்தன், சுகாதாரத்துறை அதிகாரிகள், வைத்தியசாலை பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.