Search
Close this search box.
சீரற்ற வானிலையால் யுவதி ஒருவர் பலி

முந்தலம் 61 ஆவது சந்தியில் உள்ள வீதியொன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு யுவதிகள் மீது இன்று (23) பிற்பகல் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் யுவதி ஒருவர் உயிரிழந்தார்.

மற்றைய யுவதி ஆபத்தான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் 23 வயதுடைய யுவதி ஒருவரே உயிரிழந்தார்.

குறித்த யுவதிகள் இருவரும் வில்பத்து பகுதியிலிருந்து சிலாபம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, ​​வீதிக்கு அருகில் இருந்த மரம் ஒன்று பலத்த காற்றினால் அவர்கள் மீது சரிந்து வீழ்ந்துள்ளது.

பின்னர் பிரதேசவாசிகள் மரத்தை அகற்றிய போது ஒருவர் உயிரிழந்து காணப்பட்டதுடன், மற்றைய யுவதி  பலத்த காயமடைந்திருந்தார்.

இதேவேளை, இன்று காலை நிலவரப்படி, சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது.

கனமழையுடன் கூடிய பலத்த காற்றின் காரணமாக மரங்கள், முறிந்து வீழ்ந்தமையால் வீடுகள் உட்பட உடைமைகளும் சோதமைந்துள்ளன.

கனமழையுடன் ஹங்வெல்ல – வகை பிரதேசத்தில் வீதியில் முறிந்து விழுந்த மரத்தில் சிக்கி  மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வகை பகுதியைச் சேர்ந்த  47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில்  உயிரிழந்தார்.

மேலும், களு கங்கையின் அத்தனகலு வடிநிலம் மற்றும் குடா களுகங்கையின் உபகுளங்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கேகாலை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Sharing is caring

More News