Search
Close this search box.
வானிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை..!

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் இன்று (23) இரவு 10.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலின் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை நாளைய தினம் (24) வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் வாய்ப்புள்ளதால் மேற்குறிப்பிட்டோர் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பின்னர் இது வங்காள விரிகுடாவின் வடகிழக்கு நோக்கி பயணித்து மேலும் அதிகரிக்கக்கூடும்.

அந்த நேரத்தில், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தென்கிழக்கு அரேபிய மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் மணிக்கு 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

மேலும் மேலே உள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள கடல் பகுதிகளுக்கு அறிவிப்பு வரும் வரை கடற்படையினர் மற்றும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாக கரைக்கு வருமாறும், எதிர்வரும் அறிவிப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக தற்போது நிலவும்மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 150 மில்லி மீற்றர் அளவான மிக கனமழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Sharing is caring

More News