Search
Close this search box.
“சுரக்ஷா” காப்புறுதித் திட்டம் மீண்டும்!

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த “சுரக்ஷா” மாணவர் காப்புறுதித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் ஜூன் முதல் வாரத்தில் இருந்து இந்தக் காப்புறுதி திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற முடியும்.

இது தொடர்பில் நிதி,பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைள் அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட இணை அமைச்சரவைப் பத்திரத்திற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி கிடைத்திருந்தது.

சுகாதார பிரச்சினைகள் காரணமாக கல்விச் செயற்பாடுகளை தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வியைத் தொடர வாய்ப்பளித்தல், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பாடசாலை வரவையும் மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை நோக்கமாக கொண்டு 2017 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய “சுரக்ஷா” மாணவர் காப்புறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்திட்டம் 01.12.2022 வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில்,பொருளாதார நெருக்கடி காரணமாக, இதற்கான நிதியை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் இத்திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், நாட்டில் தற்போது பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும் நிலையில், “சுரக்ஷா” மாணவர் காப்புறுதியை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 2000 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒதுக்கீடு செய்திருந்தார். 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு தேவையான மனித வளங்களை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தை பலப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

அதன்படி, அரசாங்க பாடசாலைகள், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கற்கும் 1- 13 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், 5 – 21 வயது வரையான 45 இலட்சம் மாணவர்களுக்கும், விசேட தேவையுள்ள மாணவர்களுக்கான பாடசாலைகளில் பயிலும் 4 – 21 வயது வரையான மாணவர்களுக்கும் மருத்துவ மற்றும் விபத்துக் காப்புறுதி உள்ளிட்ட சலுகைகளும் இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.

மேலும் குறைந்த வருமானம் பெறுவோர் அதாவது 180,000/= இற்கும் குறைவான வருட வருமானத்தைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆயுள் காப்புறுதியின் கீழ் பெற்றோரின் மரணத்திற்கான நிவாரணங்களும் இந்த திட்டத்தின் கீழ் சகல மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

1. சுகாதாரக் காப்புறுதி

  • அரச,தனியார் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறுவோருக்கு 300,000/= வரையில் வழங்கப்படும். அதன்படி அரச வைத்தியசாலைகளில் தங்கும் ஒரு இரவிற்காக 2500/= வழங்கப்படும். (அரச வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்றுக்கொண்டாலும் பெற்றோர் தொழிலுக்குச் செல்ல முடியாமல் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு இந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது.) தனியார் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறுவோருக்கு ஒரு இரவுக்கு 7500/= என்ற அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.
  • நிவாரணத் தொகை – 20,000/= வரையில்
  • ஏற்கனவே காணப்பட்ட கண் குறைபாடுகளுக்கான கண்ணாடிகள், செவிப்புலன் குறைபாட்டிற்கான செவிப்புலன் கருவிகளுக்கான நிவாரணங்களும் வழங்கப்படவுள்ளன. அத்தோடு பிள்ளைகள் நோய்வாய்ப்படும் வேளையில் வௌி ஆய்வுக் கூடங்களில் பெறப்படும் அறிக்கைகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளன.
  • பாரதூரமான நோய்களுக்கு 200,000/= முதல் 1,500,000/= வரையில் வழங்கப்படும்.

2. விபத்துகளுக்கான காப்புறுதி

  • முழுமையான நிரந்தர ஊனத்திற்கு- 200,000/= வழங்கப்படும்.
  • முழுமையான இடைநிலை ஊனத்திற்கு – 150,000/= முதல் 200,000/= வரையில் வழங்கப்படும்.
  • தற்காலிக ஊனத்திற்கு 25,000/= முதல் 100,000/= வரையில் வழங்கப்படும்.

3. வாழ்வாதாரக் காப்புறுதி

  • பெற்றோரின் மரணத்தில் – குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பப் பிள்ளைகளின் பெற்றோரில் ஒருவருக்கு 75,000/= வரையில் வழங்கப்படும்.

பெற்றோர் இருவருக்கும் இந்த நிவாரணம் வழங்கப்படும்.

ஒரு குடும்பத்தில் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு இந்த நிவாரணங்கள் உரித்தாகும். ஆனால் ஒரு பிரச்சினைக்கு அதிகபட்சமாக 225,000/= ஒதுக்கப்படுகிறது. (அதிகபட்சமாக 3 குழந்தைகளுக்கு தலா 75,000/= ஒதுக்கப்படும்.) இந்தக் காப்புறுதி திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துடன் உடன்படிக்கை செய்து கொள்ளவுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இணையவழி முறையின் ஊடாக இந்த நன்மைகள் அனைத்தையும் விரைவாக (குறைந்த பட்சம் ஒரு வாரத்திற்குள்) பெற்றுக்கொள்ளும் வகையில் விசேட முறைமையொன்று இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் உருவாக்கப்படவுள்ளது.

இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் “சுரக்ஷா” காப்புறுதியின் கீழ் குழந்தைகளுக்கு உரித்தான நிவாரணம், பெற்றோரின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடும்.

இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக ஜனாதிபதி செயலகத்தின் அரச வருமானப் பிரிவின் முழுமையான மேற்பார்வையின் கீழ் பாடசாலை அதிபர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கான விசேட ஒருங்கிணைப்பு பொறிமுறையொன்றும் உருவாக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சும் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனமும் இணைந்து ஜனாதிபதி செயலகத்தின் அரச வருமான பிரிவுடன் ஒருங்கிணைந்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

Sharing is caring

More News